சினிமா துறையில் வெற்றி பெற்ற இயக்குநர்களிடத்தில் படம் இயக்கிய அனுபவத்தைவிடவும், உதவி இயக்குநராக சேருவதற்காக அலைந்து, திரிந்து பட்ட அனுவபங்களை கேட்டால் அதுதான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்..!
அப்படியொரு அனுபவத்தை நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் கிரியேஷன்ஸ் நிறுவனத் துவக்க விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்து கொண்டார்.
“நான் ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன் ஸார்கிட்டேயெல்லாம் அஸிஸ்டெண்ட்டா வேலை செஞ்சாலும் திரைத்துறைக்குள்ள நுழையும்போதே பாரதிராஜா ஸார்கிட்ட சேரணும்ன்ற ஆசைலதான் வந்தேன்.
அப்போ அவரை பார்க்கவே முடியலை.. அவரை தேடிப் பிடிச்சு பார்க்குறதே கஷ்டமா இருந்துச்சு. ஒரு தடவை அவரோட கார் முன்னாடி குறுக்க விழுந்துகூட வாய்ப்பு கேட்டேன். சராமரியா திட்டி அனுப்பிட்டார்.
அப்புறமா நான் ஜி.எம்.குமார்கிட்ட அஸிஸ்டெண்ட்டா சேர்ந்துட்டேன். அப்பவும் என்னோட ஆசையெல்லாம் பாரதிராஜா ஸார்கிட்ட அஸிஸ்டெண்ட்டா சேரணும்ன்றதுதான்..
ஒரு தடவை ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் ஜி.எம்.குமார் ஸார் நடிச்சாரு. அப்பவே பிளான் பண்ணிட்டேன். இந்த ஷூட்டிங்குக்கு நாமளும் போய் எப்படியாச்சும் பாரதிராஜா ஸார்கிட்ட பேசிரணும்னு நினைச்சேன். ஜி.எம்.குமார் ஸார் அப்ப சுருட்டு குடிப்பார். அதை வாங்கிக் கொடுக்குற மாதிரி நாமளும் போயிரலாம்னு பிளான் செஞ்சு பெட்போர்டு வண்டில இடம் பிடிச்சு நானும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிட்டேன்.
அங்கே போயி பாரதிராஜா கண்ணுல படுற மாதிரி அப்படியிப்படி உலாத்திக்கிட்டிருந்தேன். ஒரு நாள் என்னைப் பார்த்துட்டு ‘நீ யாரு..? இங்க எதுக்கு சுத்திக்கிட்டேயிருக்க?’ன்னு கேட்டாரு. ‘உங்ககிட்ட அஸிஸ்டெண்ட்டா சேரணும் ஸார்.. அதுக்காகத்தான் வந்தேன்’னு சொன்னேன்.. ‘என்கிட்ட ஏற்கெனவே பத்து பேர் அஸிஸ்டெண்ட்டா இருக்கானுக.. அதுல எவனாவது ஒருத்தனை போட்டுத் தள்ளிரு. அந்த இடத்துல உன்னைச் சேர்த்துக்குறேன்’னாரு.. ‘போட்டுத் தள்ளிட்டெல்லாம் இடம் பிடிக்கிறது முடியற காரியமா’ன்னுட்டு அதுக்கப்புறமும் அவரைவிடாமல் பாலோ செஞ்சுக்கிட்டேயிருந்தேன்.
அவரோட படங்கள்ல என்னோட பிரெண்ட்ஸ் வொர்க் பண்ணும்போது எங்க லொகேஷன்னு கேட்டுட்டு போயி அவர் முன்னாடி நிப்பேன்.. அவர் எப்படி நடிப்பு சொல்லிக் கொடுக்குறார்..? எப்படி ஷாட் வைக்குறார்..?ன்னு பார்த்துக்கிட்டேயிருப்பேன். அவர்கூட இருந்து கத்துக்கலைன்னாலும், தள்ளி நின்னு கத்துக்கிட்டேன்.. அவர் என்னிக்காச்சும் என்னைகூட சேர்த்துக்க மாட்டாரான்ற எண்ணத்துலதான் அவரை துரத்தினேன்.
அப்புறம் வசந்த் ஸார்கிட்ட சேர்ந்து வேற வழிகள்ல இயக்குநராக ஆகிட்டாலும் இப்போவரைக்கும் நான் எடுத்த படங்களெல்லாம் பாரதிராஜா போட்ட பிச்சைதான்.. அதை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்..” என்றார்.