full screen background image

‘டி பிளாக்’ – சினிமா விமர்சனம்

‘டி பிளாக்’ – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை MNM Films நிறுவனத்தின் சார்பாக  ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரித்துள்ளார். 

நடிகர் அருள்நிதி இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இது இவர் நடிக்கும் 15-வது படமாகும். அவந்திகா மிஸ்ரா (Shades of Kadhal music album புகழ்) இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், உமா ரியாஸ், தலைவாசல்’ விஜய், கரு.பழனியப்பன், லல்லூ, கதிர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அரவிந்த் சிங் (ஒளிப்பதிவு), Ron Ethan Yohan (இசை), கணேஷ் சிவா (படத் தொகுப்பு), பிரதீப் தினேஷ் (சண்டை இயக்கம்), வீரமணி கணேசன் (கலை இயக்கம்), கௌசிக் கிருஷ் (பின்னணி இசை), ஞானகரவேல் (பாடல்), Sync Cinema  (ஒலி வடிவமைப்பு), Oliver Nathanel (ஸ்டைலிஷ்), முத்துவேல் (ஸ்டில்ஸ்), வாசு (ஒப்பனை), முருகன் (உடைகள்), Infinity Media (DI), சண்முக பாண்டியன் M (DI Colorist), G பாரதி(VFX), NXTGEN Studio (விளம்பர வடிவமைப்புகள் ), பவிதார் சிங் -அஸ்வின் சிங் (இணை தயாரிப்பு) பணிகளை செய்துள்ளனர்.

பிரபல YouTuber  விஜய் குமார் ராஜேந்திரன்(எரும சானி புகழ்) இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான B.சக்திவேலனின் Sakthi Film Factory நிறுவனம் இந்தப் படத்தை விநியோகம் செய்துள்ளது.

கோவை வெள்ளியங்கிரி காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.ஈ. EEE படிக்க வருகிறார் அருள்நிதி. அந்தக் கல்லூரி நடுக் காட்டில் இருப்பதால் இரவு நேரத்தில் வன விலங்குகள் கல்லூரி பக்கம் வரும் என்று கல்லூரி நிர்வாகம் மாணவர்களை எச்சரிக்கிறது.

அந்தக் கல்லூரியின் டி பிளாக்கில் மாணவியர் விடுதி இருக்கிறது. அந்த விடுதியில் கட்டுப்பாடுகள் அதிகம். மாணவிகள் மாலை 6 மணிக்கு மேல் யாரும் ஹாஸ்டலைவிட்டு வெளியில் வரக் கூடாது. மொட்டை மாடிக்குப் போகக் கூடாது. இரவு 9 மணிக்கு மேல் அறையைவிட்டு வெளியே வரக் கூடாது. 10 மணிக்கெல்லாம் லைட்டை ஆஃப் செய்துவிட வேண்டும் என்று பல கண்டிஷன்களை போட்டிருக்கிறார் ஹாஸ்டர் வார்டனான உமா ரியாஸ்.

காரணம், அதே கல்லூரியில் இதற்கு முன்பாக பல மாணவிகள் மர்மமான முறையில் இறந்து போயிருப்பதுதான். அப்போதெல்லாம் ‘தற்கொலை’, ‘புலி’, ‘சிறுத்தை’ அடித்துக் கொன்றுவிட்டது என்று சொல்லி வழக்கை மூடி மறைத்துவிட்டது கல்லூரி நிர்வாகம். காரணம் இந்தக் கல்லூரியே வனப்பகுதியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருப்பதுதான்.

பிரச்சினை போலீஸ், கேஸ், கோர்ட், வழக்கு என்று போனால் கல்லூரிக்கு சீல் வைத்துவிடுவார்கள் என்று பயந்திருக்கும் கல்லூரி நிர்வாகம் ஒவ்வொரு மரணத்தின்போதும் லோக்கல் போலீஸுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் லஞ்சம் கொடுத்து கேஸை புதைகுழிக்குள் தள்ளியிருக்கிறது.

இப்போது அதே கல்லூரியில் தன் வகுப்பிலேயே படிக்க வரும் நாயகி அவந்திகா மிஸ்ராவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் அருள்நிதி. இந்தக் காதல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும்போது அருள்நிதியின் வகுப்புத் தோழி தனது துணிகளை மொட்டை மாடியில் காயப் போடப் போனவர் அங்கே ஒரு மனித உருவத்தைப் பார்த்துப் பயப்படுகிறார். கடைசியில் அந்த உருவத்தாலேயே கொல்லப்படுகிறார். இப்போதும் ஏதோ புலி அடித்துவிட்டது என்று சொல்லி வழக்கை மூடி மறைக்கிறது கல்லூரி நிர்வாகம்.

தனது காதலியான அவந்திகாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக நள்ளிரவில் லேடீஸ் ஹாஸ்டலுக்கு தனது நண்பர்களுடன் செல்கிறார் அருள்நிதி. அப்போது ஒரு மனித உருவம் லேடீஸ் ஹாஸ்டலின் மொட்டை மாடியில் நிற்பதைப் பார்க்கிறார் அருள்நிதி. அவருடைய நண்பர்கள் இதைப் பார்த்துப் பயந்துபோய் திரும்பி ஓடுகிறார்கள்.

மறுநாள் லேடீஸ் ஹாஸ்டலுக்குள் போனதற்காக அருள்நிதியையும், அவரது நண்பர்களையும்  ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்கிறார் கல்லூரி முதல்வர். இந்த ஒரு வார இடைவெளியில் தான் பார்த்த மனித உருவம் யார் என்பதையும், இதுவரையிலும் இந்தக் கல்லூரியில் நடந்த மரணங்களின் மர்மத்தையும் கண்டறிய முனைகிறார் அருள்நிதி.

அது முடிந்ததா.. இல்லையா.. யார் அந்த மர்ம நபர்.. மாணவிகளின் மரணம் எதனால் ஏற்பட்டது என்ற கேள்விக்கான விடைதான் இந்தப் படத்தின் மீதமான கதை.

அருள்நிதி தனது பாத்திரத்திற்காக மிகக் கடினமான  முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தில் ஒரு கல்லூரி மாணவரின் பாத்திரத்தில் நடிப்பதால்,  அவர் 7 கிலோ அளவுக்கு தனது உடல் அளவைக் குறைத்து மிக அழகான இளமையான தோற்றத்திற்கும் மாறியிருக்கிறார்.

அவருடைய இயல்பான தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரம்தான் இதிலும் இவருக்குக் கிடைத்திருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகள் குறைவு என்பதால் அதில் தனியே ஜொலிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆனால் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் கலாட்டாக்களிலும், நண்பியின் மரணத்திற்குக் காரணத்தைக் கண்டறிய துடிக்கும் நடிப்பிலும் தனியே ஸ்கோர் செய்திருக்கிறார்.

தேடுதல் வேட்டையிலேயே படத்தின் பிற்பாதியில் நகர்வதால் அதிகமான நடிப்பு தேவைப்படாமல் அருள்நிதியை உள்ளடக்கிய காட்சியமைப்பே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

ரமேஷ் கண்ணாவின் மகளைக் கண்டறியும் அந்த ஒரு காட்சியில் அதிகமாக பயப்பட வைத்திருக்கிறார் அருள்நிதி. கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் ரத்தம் சிந்த அடிபடுவதைப் போல நடித்திருக்கிறார். இப்படி இந்தப் படம் ஹீரோயிஸ படம் இல்லை என்பதை ஒத்துக் கொண்டு நடித்திருப்பதே பெரிய விஷயம்.

நாயகி அவந்திகாவிடம் குறிப்பிடத்தக்க விஷயம் இல்லை. ஆனால் கவர்ச்சியான முகம். அவருக்கான ஸ்கோப் இடைவேளைக்குப் பின்பு சில காட்சிகளிலும் கிளைமாக்ஸிலும் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. தனது நாயகி போர்ஷனை கச்சிதமாக அதில் செய்திருக்கிறார் அவந்திகா.

அருள்நிதியின் நண்பனாக படத்தின் இயக்குநர் விஜய்யே நடித்திருக்கிறார். சில வசனங்களினால் சிரிக்க வைத்திருக்கிறார். ஒரே வகுப்பில் பல வருடங்களாக படித்து வரும் மாணவராக கதிர் தேவையில்லாத லக்கேஜ்போல் இருக்க வைக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் சில நேரங்களில் இவரும் கதைக்கு அவசியப்பட்டிருக்கிறார்.

உமா ரியாஸ் எதற்காக இத்தனை கோபக்கார வார்டனாக இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாத பிரின்ஸிபாலாக தலைவாசல்’ விஜய் தனது கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார். மகள் மீது அளப்பரிய பாசம் கொண்ட ரமேஷ் கண்ணாவின் நடிப்புதான் படத்தில் டர்னிங் பாயிண்ட். சென்டிமெண்ட் இவருடைய கதையில் தூக்கலாக இருந்ததினால்தான் அந்த ஆள் யாருன்னு பார்த்தாகணுமே என்ற எண்ணமும் பார்வையாளர்களுக்குள் வருகிறது.

ஒரேயொரு காட்சியில் கல்லூரியின் நிர்வாகியான கரு.பழனியப்பன் வந்து தனது நக்கல் பேச்சில் சாமியார்களைப் பற்றி கிண்டலடித்துவிட்டு, தனியார் கல்லூரிகளின் தற்போதைய நிலையைப் பற்றி புட்டு, புட்டு வைத்துவிட்டுப் போகிறார்.

அந்த மர்ம மனிதனாக நடித்திருக்கும் சரண்தீப் நிச்சயம் பாராட்டுக்குரியவர். அந்தக் கட்டுமஸ்தான உடம்போடு கருப்பு மேக்கப்பில் பார்க்கவே பயங்கரமான தோற்றத்தில் இருக்கும் அவரது நடிப்பும் பயங்கரமாகத்தான் இருக்கிறது. இவருக்கு சொல்லப்பட்டிருக்கும் பின்னணி கதை உண்மையான கதை என்று இயக்குநர் சொல்கிறார். இந்தப் படத்தின் கதையே நடந்த கதைதானாம். எப்படியிருந்தாலும் இந்த மர்ம மனிதன் கான்செப்ட்டை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

அந்த அத்துவானக் காட்டினை தனது அழகான கேமிராவின் கண்களில் பதிவு செய்து.. அவ்வப்போது ஏரியல் ஷாட்டுகளில் வனப் பகுதியைக் காண்பித்து நம்மை பயமுறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். மர்ம மனிதனைக் காட்டுகின்ற காட்சிகளிலெல்லாம் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் சேர்ந்து பயமுறுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை.

இசையமைப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள். பாடல்களும், இசையும் ஒகே ரகம்தான். ஆனால் காதல் போர்ஷனை இன்னும் அழகாகக் காட்டியிருக்கலாம்.

படத் தொகுப்பாளர் சில, பல காட்சிகளை அழகாக நறுக்கியிருக்கிறார். இதனாலேயே கிளைமாக்ஸில் நடைபெறும் சேஸிங் காட்சிகளெல்லாம் பரபரவென்று இருக்கின்றன. கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளை வடிவமைத்த இயக்குநருக்கு ஒரு ஷொட்டு..!

சஸ்பென்ஸ், திரில்லர் டைப் படங்களில் என்ன மாதிரியான பீலீங்கை கடைசியில் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டுமோ அதை இந்தப் படம் சரியாகத்தான் கொடு்த்திருக்கிறது.

நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்..!

RATINGS : 3.5 / 5

Our Score