full screen background image

தலைமைச் செயலகம் – வெப் சீரீஸ் – விமர்சனம்

தலைமைச் செயலகம் – வெப் சீரீஸ் – விமர்சனம்

ஆளுங்கட்சி பல வருடங்களுக்கு முன்பு செய்த ஊழல் தற்போது ஆளுங்கட்சியின் ஆட்சியைக் கலைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பும் மத்திய அரசின் காய் நகர்த்தல்களால் விஸ்வரூபம் எடுக்கிறது.

இதனால் முதல்வர் சிறைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும், முதல்வர் பதவியை இழப்பதற்கான சாத்தியக் கூறும் நிலவ, அதே நேரம் முதல்வர் சிறைக்கு சென்றால் அடுத்த முதல்வராக ஆக விரும்பும் உட்கட்சி கோஷ்டிகளும் சதி செய்யத் துவங்குகிறார்கள். இதுதான் இந்தத் தொடரின் மையக் கதை.

இதே நேரம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலத்தில் கொள்ளையடித்ததோடு மட்டுமின்றி ஐந்து பேரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்ட துர்கா என்ற பெண்ணை தேடும் வழக்கு போலீஸிடம் இருந்து சி.பி.ஐ.க்கு கை மாறுகிறது.

இணை கோட்டில் பயணிக்கும் இந்த இரண்டு கதைகளும் ஒரே புள்ளியில் எப்படி சங்கமிக்கின்றன என்பதை விளக்குவதுதான் இந்தத் தலைமைச் செயலகம் வெப் சீரீஸ்..! 

ஒருபுறம் அரசியலின் அன்றாட அடாவடி மற்றும் அராஜகக் கூத்துகள், முதல்வரின் வழக்கு செல்லும் பாதை, அதில் குழிபறிக்க விரும்பும் குள்ளநரிகள் எனச் செல்கிறது. மறுபுறம் துர்காவை தேடும் தேடுதல் வேட்டையில் ஒவ்வொன்றாக அவிழும் முடிச்சுகள் என ஒவ்வொரு அத்தியாயமும் அதற்கே உரித்தான சுவாரஸ்யத்துடன் செல்கிறது.

ஆளுங்கட்சியின் தமிழக முதல்வரான அருணாச்சலமாக கிஷோர் நடித்திருக்கிறார். தன் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும், சிறைவாசத்தை தவிர்க்கவும், மத்திய அரசின் காலில் விழாத தன்மானம் கொண்ட முதல்வராகவும், தன் சிறைவாசத்தை தவிர்க்க ஒட்டு மொத்த குடும்பமும் வீட்டுக் குழந்தையின் வாழ்க்கையை பணயம் வைக்க முனையும்போது, அதை தைரியத்துடன் தடுத்து நிறுத்தி சிறை செல்ல தயாராகுபவராகவும்,

குடும்பமும் ஊரும் என்ன நினைக்கும் என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், தான் தோழியாகக் கருதும் கொற்றவையை(ஸ்ரேயா ரெட்டி) எந்த நேரத்திலும் சென்று சந்திக்கும் வெளிப்படைத் தன்மையிலும், எதிரணி முகாமினரை சந்தித்துவிட்டார் நம் கட்சியின் பொதுச் செயலாளர் என்று தெரிந்ததும் அவநம்பிக்கையுடன் உடைந்து போய் உட்கார்ந்து இருப்பதும், பொதுச் செயலாளர் மேல் ஏதும் தவறில்லை என்பது தெரிந்து சகோதரத்துவத்துடன் அணைத்துக் கொண்டு மன்னிப்புக் கேட்கும் மாண்புமிக்க முதல்வராக அருணாசலம் கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் கிஷோர்.

கொற்றவையின் மகளிடம் தங்கள் உறவை விளக்க முற்பட்டு தோற்று நிற்கும் பொழுது, இந்த தலைமுறையும் ஆண் பெண் உறவை தவறாகத்தான் பார்க்கிறதா..? என்று அவர் உதிர்க்கும் அந்த வசனத்தின்போது அந்த உடல்மொழியில் அவ்வளவு இயலாமை. தன் வீட்டு பெண்ணிற்கு பிடிக்காத திருமணம் நடைபெறும்போது கையாலாகாதனத்துடன் அமர்ந்திருக்கும் அருணாச்சலம் அத்தனை பலகீனத்தை வெளிப்படுத்துகிறார்.

கொற்றவை கதாபாத்திரத்தில் ஆளுங்கட்சியின் அரசியல் ஆலோசகராகவும், துணிச்சல்மிக்க பத்திரிக்கையாளராகவும் ஸ்ரேயா ரெட்டி அட்டகாசப்படுத்துகிறார். தனக்கும் முதல்வருக்குமான உறவை ஊர் உலகம் மட்டுமின்றி தன் மகளே தவறாகப் பழிக்கும்போது, அதை அலட்டிக் கொள்ளாமல் கடந்து போகும் பக்குவமும்,

முதல்வரின் மருமகனாகவே இருந்தபோதும் மக்களுக்கு கெடுதல் விளைவிக்கும் திட்டத்திற்கு முதல்வரே அனுமதி அளித்தாலும் நான் தடையாக நிற்பேன் என்கின்ற துணிச்சலும், முதல்வரின் வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு ரகசியமாக காய் நகர்த்தும் சாமர்த்தியமும்,

தன் தோழி பக்கமும் சாயாமல், அரசாங்கத்தின் பக்கமும் முற்றிலும் ஒதுங்காமல் எடுக்கும் நடுநிலைத் தன்மையிலும், தன்னை வெளியே போகச் சொன்ன முதல்வரிடம் உரிமையாக கோபித்துக் கொள்ளும் அந்த அன்பிலும் அச்சரம் பிசகாமல் அடித்து தூள் கிளப்புகிறார் ஸ்ரேயா ரெட்டி.

சி.பி.ஐ. அதிகாரிக்கான எந்தவொரு மிடுக்கும், உடல் மொழியும் இன்றி ஒரு சாதாரண பத்திரிக்கை ரிப்போர்ட்டர் போன்ற தோற்றத்துடன் வளைய வரும் ஆதித்யா மேனன், அவருடைய ஆபரேஷன்களின் வழி ஆச்சரியப்படுத்துகிறார்.

பத்திரிக்கையின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரின் வழியே வழக்கிற்கான முக்கிய விடயத்தை கண்டுபிடிக்கும் அந்த புத்திசாலித்தனம் ‘அட’ சொல்ல வைக்கிறது. பன்லாலின் தம்பியிடம் அவர் உண்மையை வாங்கும் இடமும் அடுத்த ஆச்சரியம்.

ஆரம்பத்தில் தமிழக எல்லைக்குள் நடந்த ஒரு கொலைக் குற்றத்தை விசாரிக்கத் துவங்கி, அதிலிருந்து நூல் பிடித்து கொற்றவை மீதான கொலைவெறித் தாக்குதலை விசாரிக்கத் துவங்கி, வடமாநிலக் கொள்ளைக்காரி துர்கா யார் என்பதை தேடிக் கொண்டிருக்கும் சிபிஐ அதிகாரி ஆதித்யா மேனன் உடன் இணையும் பரத்தின் பயணம், கதையின் சுவாரஸ்யத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.

முதல்வரின் மகளாக, தன் அப்பாவின் வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளை 100 சதவீத முழு மனதுடன் செய்யும் அதே வேளையில், ஒரு வேளை அவர் சிறைக்கு செல்லும் சூழல் வந்தால், அடுத்த முதல்வராக தான் வந்துவிட வேண்டும் என்கின்ற வேட்கையுடன் இருக்கும் அரசியல்வாதியாக ரம்யா நம்பீசன் ஆச்சரியப்படுத்துகிறார்.

தந்தைக்கும், பத்திரிக்கையாளர் கொற்றவைக்குமான உறவை கண்டு அகத்தில் சிடுசிடுத்து புறத்தில் புன்னகைக்கும் போதும், எதிர்முகாமினரை சந்தித்துவிட்டு வரும் பொதுச் செயலாளர் சந்தானபாரதியை வார்த்தைகளில் வறுத்தெடுக்கும்போதும் நம்பீசன் நடிப்பில் நம்பியாராக மாறி இருக்கிறார்,

கட்சியின் பொதுச் செயலாளராக நடித்திருக்கும் சந்தானபாரதியிடம் கட்சியின் கொள்கைப் பிடிப்பிற்காக போராடும் அனுபவஸ்தரையும், அதே நேரம் குற்றங்களை குறைவான நேரத்தில் மறந்து போகும் குழந்தமையையும் பார்க்க முடிகிறது.

கோபித்துக் கொண்டு சென்றுவிட்டு, மீண்டும் நண்பனும் முதல்வனுமான அருணாவைப் பார்க்க வந்து, “அருணா” என்று அடித் தொண்டையில் அழைத்து ஆரத் தழுவிக் கொள்ளும்போது அதிலும் குழந்தமையும், தாய்மையும் ஒருசேர பரிமளிப்பதை உணர முடிகிறது.

பத்திரிக்கையாளர் கொற்றவையின் பள்ளிக் காலத் தோழியாக வரும் கனி கஸ்ருதியின் கதாபாத்திரம் சற்று மர்மங்கள் நிறைந்த கதாபாத்திரமாக படைக்கப்பட்டிருக்கிறது. அவர் கொற்றவையின் மகள் சாரா ப்ளாக்கிடம் பேசும் இடங்கள் காத்திரமானவை,

காடு பற்றியும், இந்தியாவை விட்டு வெளியேறுவது பற்றியும், எனக்கு எதுவும் கிடைக்கவில்லை; வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை என்று புலம்பும் இடத்திலும், செல்போன் தொடர்பான உரையாடலிலும் வசனங்களும் நடிப்பும் துல்லியம்.

கொற்றவையின் மகளாக நடித்திருக்கும் சாரா ப்ளாக் இன்றைய இளைய தலைமுறையை அப்படியே அச்சு அசலாக பிரதிபலிக்கிறார். தன் உடை சார்ந்த பழக்க வழக்கம் சார்ந்த விடயங்களில் புதுமையை விரும்பும் பெண்ணாக இருந்தாலும், தன் தாய் அந்த பழைய கட்டுபெட்டித்தனமான அடக்குமுறைக்குள்ளும், அடக்கத்திற்குள்ளும் இருந்தே ஆக வேண்டும், அவளின் சுதந்திரமான நடவடிக்கைகளால் தன் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிவிட்டது என்பதான சிந்தனை முரண் கொண்ட பாத்திரத்தில் சிறப்பான உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.

கொற்றவையின் உடனிருந்து வீட்டு வேலைகளை மட்டுமின்றி வீட்டையும், வீட்டில் இருக்கும் கொற்றவை மற்றும் அவளின் மகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் வாய் பேச முடியாத எலிசபெத் கதாபாத்திரத்தின் வெகுளித்தனம் நிறைந்த வெள்ளை மனம் நம் நெஞ்சில் பச்சக்கென்று ஒட்டிக் கொள்கிறது.

கவிதா பாரதி, ஒய்.ஜி.மகேந்திரன், மத்திய அமைச்சராக வரும் ஷாஜி, நிரூப் அனைவரும் கொடுத்த பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஷாஜியைப் பார்க்கும் பொழுது ஒரு வட இந்திய மந்திரியை பார்த்த உணர்வு அச்சரம் பிசகாமல் எழுகிறது.

ஜிப்ரானின் இசை ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் உயிரூட்டி இருக்கிறது. மொத்த தொடரின் உணர்வும் அந்த சஸ்பென்ஸ் மற்றும் த்ரில் சார்ந்து நகர்வதால், அதற்கு ஏற்றார் போன்ற பின்னணி இசையை இசைத்து பிரமாதப்படுத்தி இருக்கிறார். கூடுதல் பின்னணி இசைப் பணிகளை கவனித்திருக்கும் சைமன் கே.கிங் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வைட் ஆங்கிள் ரவியின் ஒளிப்பதிவு ஒளியையும் இருளையும் ஒருசேரக் காட்டி, காட்சிகளின் தன்மைக்கு வலு சேர்த்திருக்கிறது. ரவிக்குமாரின் படத்தொகுப்பில் துல்லியம் தென்படுகிறது.

ராடன் நிறுவனம் சார்பாக ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். தயாரிப்பு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட முதல்வர் தொடர்பான கதையை, எந்த அளவிற்கு அதை படமாக எடுக்க முடியுமோ அதற்கு ஏற்றார் போல் கதையில் பல மாற்றங்களைச் செய்து எழுதி இயக்கி இருக்கிறார் வசந்தபாலன்.

சம கால அரசியல் நிகழ்வுகளான கெளரி லங்கேஷ் கொலை, ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் விபத்து, ஊழல் வழக்குகளை வைத்து ஆளும் மாநிலக் கட்சிகளை மத்திய கட்சிகள் மிரட்டும் போக்கு, மாநில கட்சிகளை உடைக்க மத்திய அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள், முதல்வர் பதவிக்கு நடக்கும் குடுமிப்பிடி சண்டைகள் போன்றவற்றை திரைக்கதைக்குள் கொண்ட வந்த சாமர்த்தியத்திற்கு வாழ்த்துக்கள்.

ஒட்டு மொத்த வெஃப் தொடரின் உயிர்நாடி என்று சொன்னால், முதல்வர் மீதான ஊழல் வழக்கின் முடிவு என்ன ஆனது என்பதும்..? முதல்வர் பதவிக்கு யார் வந்தது என்பதும்..? வட இந்திய கொலைகாரி துர்கா யார் என்பதும்..? அவளுக்கு மையக் கதைக்கும் என்ன தொடர்பு என்பதும்தான்.

இந்த நான்கு முனைகளையும் நோக்கி எட்டு அத்தியாயங்களும் விறுவிறுப்பாக பயணிக்கின்றன. சில அத்தியாயங்களுக்குப் பிறகு துர்கா யார் என்பதான மர்மம் பிறை நிலா அளவிற்கு தெரியத் துவங்கினாலும்கூட முதல்வர் மீதான வழக்கும், அது தொடர்பான முன்னெடுப்புகளும், ஆதித்யா மேனன் மற்றும் பரத்தின் விசாரணைகளும் சுவாரஸ்யத்தை தக்க வைத்துக் கொள்கின்றன.

குறைந்தபட்ச சமரசங்களுடன், கூர்மையான அரசியல் வசனங்களுடன் எழுதி இயக்கப்பட்டிருக்கும் இந்த தலைமைச் செயலகம் சம கால அரசியல் சூழலைப் பேசும் சமத்தான வெஃப் தொடர் என்கின்ற பெயரை சம்பாதித்துவிட்டது.

படக் குழுவினர் அனைவருக்கும் நமது வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

Our Score