full screen background image

‘பாரம்’ – சினிமா விமர்சனம்

‘பாரம்’ – சினிமா விமர்சனம்

2019-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்ற திரைப்படம் இது.

பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி கதை எழுதி இயக்கி படத் தொகுப்பு செய்திருப்பதுடன் ‘ரெக்லெஸ் ரோஸஸ்’ என்ற தன் சொந்த நிறுவனத்தின் மூலம் ஆன்ட்ரா சொரூப் என்பவருடன் இணைந்து இந்த ‘பாரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறார்.

கடந்த 65 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகள் வரலாற்றில் சிறந்த தமிழ் படத்தை இயக்கிய இயக்குநர் என்ற முறையில் தேசிய விருதைப் பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பிரியா கிருஷ்ணசாமி பெற்றுள்ளார்.

‘புதுச்சேரி பல்கலைக் கழகத்தின்’ நாடகத் துறையின் தலைவரான ராஜூதான் இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரமான ‘கருப்பசாமி’ என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும், அவருடைய தலைமையில் அத்துறையில் பயிற்சி பெற்ற கலைஞர்களான சுகுமார் சண்முகம், சு.ப.முத்துகுமார், ஜெயலட்சுமி, மற்றும் ஸ்டெல்லா கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இசை மற்றும் ஒலி வடிவமைப்பை வேத் நாயர் மேற்கொள்ள, ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். தருண் சர்மா ஒலி வடிவம் மற்றும் மிக்ஸிங் பொறுப்புகளை கவனித்திருக்கிறார். அடிஷனல் ஸ்க்ரீன் பிளே மற்றும் வசனங்களை எழுதியிருப்பவர் ராகவ் மிர்டாத். நேரம் : 1 மணி 38 நிமிடங்கள்.

இத்திரைப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலமாக தமிழகத்தில் வெளியிட்டிருக்கிறார்.

உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இன்னமும் இந்தியக் கிராமப்புறங்களில் நடைபெறும் ‘தலைக் கூத்தல்’ என்ற சம்பிரதாயமான நம்பிக்கையை பற்றித்தான் இத்திரைப்படம் பேசுகிறது.

‘தலைக்கூத்தல்’ என்ற பெயரில் தங்களது சொந்தப் பிள்ளைகளாலேயே கொல்லப்படும் பலவீனமான முதியவர்களைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது.

இந்த ‘பாரம்’ படத்தில் நடித்திருக்கும் 85-க்கும் மேற்பட்டவர்களில் பலரும் இப்போதுதான் முதல்முறையாக கேமரா முன் நிற்பவர்கள். படமும், காட்சியமைப்புகளும் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு நடந்த கிராமத்திலிருந்த மக்களையே படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்களாம்.

‘கருப்புசாமி’ என்னும் ராஜூ ஒரு முதியவர். மனைவியை இழந்தவர். இவருடைய மகன் செந்தில். செந்திலுக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உண்டு. அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில் ஒரு சுமூக நட்பில்லை.

கருப்பசாமிக்கு ஒரு தங்கை உண்டு. இந்தத் தங்கையின் மகன்கள் மூன்று பேரும் தாய் மாமன் மீது மிகுந்த பாசமும், அன்பும் வைத்திருக்கிறார்கள். கருப்பசாமி வாட்ச்மேன் வேலைக்குச் சென்று வருகிறார். தனது தங்கையின் வீட்டில் தங்கியிருந்தவாறே வேலைக்குச் சென்று வருகிறார் கருப்பசாமி.

திடீரென்று ஒரு நாள் விபத்து ஒன்றில் சிக்கும் கருப்பசாமிக்கு நடக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது. அவரது இடுப்பு எலும்பில் அடிபட்டு படுத்த படுக்கையாகிறார். ஆபரேஷன் செய்தால் சரியாகிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் அதற்கு நிறைய பணம் செலவாகுமே என்று யோசித்த மகன் செந்தில் அப்பாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து நாட்டு வைத்தியம் கொடுக்கிறார்.

வீட்டிலும் அவரது இருப்பு செந்திலுக்கும், அவரது மனைவிக்கும் மிகுந்த மனக் கஷ்டத்தைக் கொடுக்கிறது. இருவருக்குள்ளும் சண்டை ஏற்படுகிறது. இந்தச் சூழலில் அந்தக் கிராமத்தில் கஷ்டப்படும் முதியவர்களை சப்தமில்லாமல் கொலை செய்யும் பழக்கம் இருந்து வருகிறது.

இந்தச் செயலைச் செய்து வரும் ஒரு ஆள் மூலமாக இது செந்திலுக்குத் தெரிய வர.. அவர் இதற்கு ஒத்துக் கொள்கிறார். இதன்படி விஷ ஊசி போட்டு கொல்லப்படுகிறார் கருப்பசாமி.

சாவுக்கு வந்த கருப்பசாமியின் தங்கை மகன்களுக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது.  இவர்களில் இளையவனான வீரா இந்த விஷயத்தை மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு போக பிரச்சினை பெரிதாகிறது.. மாநிலம் முழுவதும் பத்திரிகைகளில் இது செய்தியாகி போலீஸ் விசாரணையும் துவங்குகிறது.

இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘பாரம்’ படத்தின் திரைக்கதை..!

தமிழகத்தின் பல கிராமப்புறப் பகுதிகளில் சாவு வராமல் படுத்தப் படுக்கையில் கிடக்கும் முதியவர்களை ‘தலைக்கூத்தல்’ என்னும் பாரம்பரியச் சடங்கு மூலம் சாகடிப்பது வழக்கம். அது தொன்றுதொட்டு இருந்தது வந்தது என்பதால் முதியவர்களுக்கு இதனால் விடுதலை கிடைக்கும் என்ற அர்த்தத்திலேயே இது எதிர்க்கப்படாமல் இருந்தது. இப்போது மறைமுகமாக இது நடந்து வருகிறது.

‘தலைக்கூத்தல்’ என்றால் படுக்கையில் இருக்கும் முதியவர்களுக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி அவர்களை இளநீர் குடிக்க வைத்து குளிரில் படுக்க வைத்தால் மிக விரைவில் மரணம் அவர்களைத் தழுவிவிடும். அதிலும் அமாவாசை போன்ற நாட்களிலேயே இதனைச் செய்வது வழக்கம்.

இப்போது இந்தத் ‘தலைக் கூத்தல்’ என்னும் பாரம்பரியப் பழக்கம் காணாமல் போய் இந்தப் பெயரிலேயே படுகொலை செய்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. விஷ ஊசி போடுவது.. மூச்சடக்கி சாக வைப்பது.. போன்ற வழிகளில் முதியவர்களை மரணிக்க வைக்கிறார்கள். இதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி.

இந்தத் ‘தலைக்கூத்தல்’ சம்பவத்தை விஷால் நடித்த ‘மருது’ படத்திலும் ‘கேடி’ என்னும் ‘கருப்புதுரை’ படத்திலும் ஏற்கெனவே விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். கருப்பசாமியாக நடித்த ராஜூ.. அவருடைய தங்கையாக நடித்தவர்.. மற்றும் அனைத்துக் கதாபாத்திரங்களுமே நடிப்பில் குறை வைக்கவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் அந்தந்த கதாபாத்திரங்களே படத்தை நகர்த்தியிருக்கிறார்கள்.

நடிகர்களின் தேர்வுகூட சிறப்பாகவே இருக்கிறது. கருப்பசாமியைப் பார்த்துக் கொள்ள வரும் ஒரு முதிய பெண்மணி செந்திலிடம் பேரம் பேசுகின்ற காட்சி மிக, மிக யதார்த்தம். அந்தப் பெண்மணியை யாரும் புதுமுகம் என்று சொல்லிவிட முடியாது. அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.

இதேபோல் விஷ ஊசி போடும் பெண்ணும்.. அதற்கு புரோக்கர் வேலை செய்யும் ஆட்களும் கச்சிதமான தேர்வு. “செந்திலு” என்று கருப்பசாமி ஈனஸ்வரத்தில் அழைக்கும்போதெல்லாம் ஒரு பரிதாபமான உணர்வு பார்வையாளர்களுக்குள்ளும் ஏற்படுகிறது.

இந்தக் குரலைக் கேட்டு எரிச்சலாகும் இள வயது மகனின் ஆதங்கத்தை அப்படியே செந்தில் பிரதிபலித்திருக்கிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இது தொடர்பாக வரும் சண்டைகள் மிக யதார்த்தமானவை.

கதாபாத்திரங்கள் வாழும் ஊரை குறிப்பிட்டால் பிரச்சினைகள் வருமே என்றெண்ணி அதனை மிகக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார் இயக்குநர்.

இந்தச் சமூகம் வெட்கப்பட வேண்டிய, செய்யக் கூடாத ஒரு முக்கியமான பிரச்னையைப் பற்றி இத்திரைப்படம் பேசியிருக்கிறது.

இந்த 21-ம் நூற்றாண்டில் உலகத்தின் பல மூலைகளிலும் முதியோர்கள் படும் துயரத்தையும், அவர்களைக் கண்டும், காணாமல் ஒதுங்கிப் போய், தங்கள் கடமைகளைக் கை கழுவித் தப்பிக்கும் அவர்கள் குழந்தைகளின் பொறுப்பற்றதனத்தையும்தான் இத்திரைப்படம் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. அந்த வகையில் இத்திரைப்படம் வரவேற்கத்தக்கத் திரைப்படம்தான்.

ஆனால்..

இந்தப் படத்தில் நடிப்பு என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த வகையிலும் ஒரு திரைப்படத்திற்கான இலக்கணத்தை இத்திரைப்படம் கொண்டிருக்கவில்லை.

தொழில் நுட்பத்தில் மிக சராசரியாக பட்ஜெட் படங்களையும்விட கீழாகவே இது தயாராகியிருக்கிறது. வெறுமனே இயக்கமும், நடிப்பும் மட்டுமே போதும் என்னும் அளவுக்கு ஒரு டாக்குமெண்ட்ரி ஸ்டைலில் உருவாகியிருக்கும் திரைப்படம் இது.

ஆழமான காட்சிகள் இல்லாமல், மூன்றாந்தர நாடக பாணியிலான விஷ ஊசி சதிக் காட்சிகள் ஆவணப் படம் என்னும் அம்சத்தைக்கூட நெருங்கவிடாமல் படத்தைக் கீழிறக்குகின்றன.

கொஞ்சம்கூட லாஜிக் இல்லாமல் சில காட்சிகளை அப்படியே படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இப்போதெல்லாம் கிராமப்புறங்களிலேயே 108 என்னும் எண் அவர்களது குல தெய்வங்களைவிடவும் பேமஸானதாக இருக்கிறது.

விபத்து ஏற்பட்டவுடன் 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைக்காமல் தங்கையின் மகன்களே கருப்பசாமியை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல முயற்சிப்பதும்.. ஒரு வீட்டின் முன் கிடத்தி அவரை எழுப்ப முயற்சிப்பதும் முட்டாள்தனமான திரைக்கதை.

அதேபோல் வேறு மருத்துவமனைகளுக்கு டெம்போ வேனிலேயே கொண்டு செல்வதும், அவரை அலைக்கழிப்பதுமாக காட்சிகளை நகர்த்தியிருப்பது ஒரு அனுதாப உணர்வை வலுக்கட்டாயமாக வரவழைக்க நினைத்த யுக்தியாகவே தோன்றுகிறது.

இத்தனை பாசமான மாமாவைவிட்டுவிட்டு போராட்டத்திற்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அவரது தங்கையின் மகனான வீரா போவதில் கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லை.

‘தலைக்கூத்தல்’ என்று சொல்லிவிட்டு அதனைச் செய்யாமல் விஷ ஊசி போட்டுக் கொல்வதும்.. இதற்கு உள்ளூர் மக்கள் ஆதரவு கொடுப்பதும் நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது.

இதற்காக அந்தக் கொலையாளிகள் வாங்கும் கூலியே 3000 ரூபாய்தான் என்பது இந்தக் கதையை இன்னமும் கேலிக் கூத்தாக்குகிறது. 3000 ரூபாய்க்கு யார் இன்றைக்கு இவ்வளவு பெரிய ரிஸ்க்கை எடுப்பார்கள்..?

உண்மையான ‘தலைக்கூத்தல்’ நிகழ்வை வைத்திருந்தால்கூட அதில் இருக்கும் கிராமத்து மக்களின் உண்மைத்தனத்தை இத்திரைப்படம் சொல்லியிருக்கும். ஆனால் அதன் லேட்டஸ்ட் வடிவம் ‘விஷ ஊசி’ என்று மாற்றியதால் ‘தலைக்கூத்தல்’ முறையையே இனிமேல் செய்யாதீர்கள் என்று சொல்ல முடியாமல் போகிறது..!

இதேபோல் படத்தில் இருக்கும் வில்லத்தனமான கதாபாத்திரங்களுக்கு சிறுபான்மை மதத்தினரின் பெயர்களை சூட்டியிருக்கும் முட்டாள்தனத்தை மன்னிக்கவே முடியாது.

இரண்டு விஷயங்களுக்காகவே இந்தப் படத்தை நாம் கட்டாயம் பாராட்டலாம். முதல் விஷயம்.. இந்தக் கருணைக் கொலை பற்றிய அனைத்து அம்சங்களையும் தேடிப் பிடித்துப் பதிவு செய்திருப்பது. இதில் இருக்கும் கிராமத்து மக்களின் வாழ்க்கை, அவர்களது இயலாமை.. பரிதாப உணர்வு.. முதியவர்களுக்கு விடுதலை கொடுக்கும் எண்ணம்.. இவற்றையெல்லாம் இந்தக் ‘கருணைக் கொலை’ என்னும் கான்செப்ட்டுக்குள்ளேயே சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டு, இந்தக் கருணைக் கொலை சம்பவத்தை வழக்கம்போல நவீன கால சமூகங்கள் தங்களது சொந்த லாபத்துக்காக.. சுய லாபத்துக்காக.. அரசியல் லாபத்துக்காக எப்படியெல்லாம் வளைத்துக் கொண்டுள்ளார்கள்.. இதன் மூலம் இந்த விஷயத்திலும் ஓட்டு அரசியல் புகுந்துள்ளது என்பதையும் இத்திரைப்படம் உள்ளாட்சி அமைச்சர் மூலமாகவே சொல்கிறது.

இத்திரைப்படம் சென்ற 2019-ல் வெளிவந்த சிறப்பு வாய்ந்த தமிழ்த் திரைப்படங்களைவிடவும் எந்தவிதத்தில் உயர்ந்தது..? சிறந்தது..? தகுதியுடையது..? என்பதை பட்டிமன்றம் வைத்துதான் நாம் கண்டறிய வேண்டும். அந்த அளவுக்கு சர்ச்சையைக் கிளப்புகிறது இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் தேசிய விருது.

இந்தப் படத்தைப் பார்த்த பின்பு.. படத்தின் இயக்குநரான பிரியா கிருஷ்ணசாமியின் பெயர் மட்டுமே இத்திரைப்படம் தேசிய விருது பெற்றதற்கான காரணமாக இருக்கும் என்று உறுதியாகத் தெரிகிறது.

அரசியல் என்னும் சாக்கடைக்குள் சினிமா துறையும் மாட்டிக் கொண்டுள்ளது என்பதற்கு இத்திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கும் தேசிய விருதே ஒரு சான்றாகும்..!

Our Score