full screen background image

மீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்

மனோஜ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கிறார்.

படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நக்ஷத்ரா நடித்திருக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் மௌனிகா பாலுமஹேந்திரா மற்றும் ஜோ மல்லூரி இருவரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சாலை சகாதேவன், படத் தொகுப்பு – கே.எம்.கே.பழனிவேல், வசனம் – மதன் கார்க்கி, கலை இயக்கம் – மோகன மகேந்திரன், நடன இயக்கம் – கூல் ஜெயந்த், பிரசன்னா, ஷண்முகசுந்தர், தயாரிப்பு வடிவமைப்பு – கம்பம் சங்கர், பின்னணி இசை – சபேஷ்-முரளி, பாடல்கள் – வைரமுத்து, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன், இசை – என்.ஆர்.ரகுநந்தன், வசனம் – மதன் கார்க்கி, தயாரிப்பு நிறுவனம் – மனோஜ் கிரியேஷன்ஸ், தயாரிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம் – இயக்குநர் இமயம் பாரதிராஜா. நேரம் : 1 மணி 59 நிமிடங்கள்.

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் விவசாயம் ஒரு கண்ணாகும், தமிழ் ஒரு கண்ணாகவும் இருக்கும்படி வாழ்ந்து வருபவர் பால்பாண்டி என்னும் பாரதிராஜா. உலகறிந்த எழுத்தாளரும்கூட..! இவருடைய மனைவி மெளனிகா. இவருடைய மகன் கல்லூரிப் படிப்பை தமிழ்நாட்டில் முடித்துவிட்டு இப்போது லண்டனில் வேலை பார்த்து வருகிறார்.

அங்கேயே ஒரு பெண்ணைக் காதலித்து திருமணமும் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். லண்டனுக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அப்பாவைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்துச் செல்கிறான் மகன்.

இவர்கள் லண்டன் சென்ற நேரத்தில் தீபாவளி தினம் வருகிறது. தீபாவளி தினத்தன்று தனது பேரனை கட்டாயப்படுத்தி எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைக்கிறார் பாட்டி மெளனிகா. இதைப் பார்த்த பேத்தி போலீஸுக்கு போன் செய்ய.. விரைந்து வரும் போலீஸ் மெளனிகாவை கைது செய்கிறது.

இதனால் அதிர்ச்சியாகிறார் பால்பாண்டி. அங்கேயிருக்கும் சட்டத் திட்டங்கள் அப்படி என்று அப்பாவைச் சமாதானப்படுத்துகிறான் மகன். ஜாமீனில் வெளியே வரும் மெளனிகா சில தினங்களில் மரணமடைய.. தனித்துவிடப்படுகிறார் பால்பாண்டி.

அடுத்து மகனது வற்புறுத்தலால் முதியோர் இல்லத்துக்கு வந்து சேர்கிறார் பால்பாண்டி. ஆனால் அங்கேயும் இருக்கப் பிடிக்காமல் வெளியேற நினைக்கிறார். அந்த நேரத்தில் முதியோர் இல்லத்தில் இருக்கும் ஜோ மல்லூரி தனது மனைவி, மகள்களை நினைத்து தினமும் அழுகிறார். அவர்களுக்கான சொத்துக்களை பங்கிட்டு அளிக்காமல் தான் வந்துவிட்டதாகச் சொல்லி வருத்தப்படுகிறார். இந்தக் கவலையிலேயே அவர் மரணமடைகிறார்.

இதுவும் பால்பாண்டியை வருத்தமடைய வைக்க.. அந்த முதியோர் இல்லத்தைவிட்டு வெளியேறுகிறார். யாருக்காவது எந்தவிதத்திலாவது உதவிகள் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்.

இந்த நேரத்தில் லண்டன் தெருவில் பால்பாண்டியைச் சந்திக்கிறாள் நாயகி ராஷி நட்சத்திரா. ராஷி தனது அக்காள் கணவர் மூலம் தினமும் பாலியல் தொந்திரவை சந்தித்து வருகிறாள். எப்படியாவது அந்த வீட்டில் இருந்து தப்பித்துப் போக நினைக்கிறாள். முடியாமல் தற்கொலைக்கும் முயல்கிறார்.

அந்த நேரத்தில் அவளைக் காப்பாற்றுகிறார் பால்பாண்டி. தற்கொலை முயற்சிக்கான காரணத்தைக் கேட்க ராஷி தனது கதையைச் சொல்கிறார். பால்பாண்டி அவளைச் சமாதானப்படுத்தி இந்த உலகத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் நமக்காவே இருக்கு. அதைத் தேடிப் போவோம். ஒரு பத்து நாள் என்னுடன் வா.. பயணப்படுவோம். பல இடங்களை பார்ப்போம். பலதரப்பட்ட மனிதர்களையும் சந்திப்போம்.. பத்து நாட்களுக்குப் பிறகும் உனக்கு தற்கொலை எண்ணம் இருந்தால் நானே உன்னைக் கொலை செய்துவிடுகிறேன் என்று பால்பாண்டி சொல்கிறார்.

இதை ஏற்றுக் கொண்டு ராஷியும் அவருடன் செல்கிறாள். பால்பாண்டியும் அவளுடன் பயணப்படுகிறார். 10 நாட்கள் பயணத்தின்போது என்ன நடந்தது.. முடிவில் ராஷியின் கதி என்னவானது.. என்பதுதான் இந்த மீண்டும் ஒரு மரியாதை படத்தின் திரைக்கதை.

பால்பாண்டி என்னும் ஓல்டு மேன் என்ற ஓம் என்ற பாரதிரஜாவின் நடிப்பு எப்போதும் போலவே இதிலும் அப்படியேதான் இருக்கிறது. பொதுவாக தான் இயக்கும் படங்களில் நடிகர், நடிகைகளுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும்வகையிலான அதே நடிப்பைத்தான் இதிலும் தன்னுடைய நடிப்பாகக் காட்டியிருக்கிறார்.

சில இடங்களில் நிறுத்தி, நிதானமாக அவர் பேசும் வசனக் காட்சிகள்தான் நமது பொறுமையைச் சோதிக்கின்றன. அளவுக்கு அதிகமான குளோஸப் காட்சிகளும் சோதனையைக் கொடுத்திருக்கின்றன. இந்தப் படத்தில் அவர் நடிக்காமலேயே இருந்திருக்கலாமோ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

நாயகியின் தேர்வு சரியில்லை. பாரதிராஜாவின் தேர்வா இது..? நாயகி ராஷி நட்சத்திராவிடம் மிகக் கஷ்டப்பட்டு நடிப்பை வரவழைத்திருப்பதுபோல தெரிகிறது. இறுதிக் காட்சியில் மட்டுமே அவருடைய நடிப்பு கொஞ்சமேனும் நடிப்பாகக் கண்களுக்குத் தெரிய வருகிறது.

இவரைவிடவும் சில காட்சிகளே என்றாலும் பாரதிராஜாவின் மருமகளாக வந்தவர் மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். மெளனிகாவும் இதேபோல் இயக்குதலுக்கேற்ப நடித்திருப்பதால் இவருடைய நடிப்பில் ஒரு மந்த நிலை தெரிகிறது. அவசரப்பட்டு இவரையும் சாகடித்துவிட்டதால் படத்தில் நடிப்புக்கே பஞ்சமாகிவிட்டது..!

ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவனின் ஒளிப்பதிவில் லண்டனின் அழகும், பிரம்மாண்டமும், ஸ்காட்லாந்து நாட்டின் இயற்கை எழில்வனப் பகுதிகளும், இயற்கை அன்னையின் படைப்புகளும் மிகப் பிரம்மாண்டமாக கண்களுக்கு அழகாகக் காட்சியளிக்கிறது. இப்படியொரு இடங்களில் நாம் சில மணி நேரங்கள் இருந்துவிடக் கூடாதா என்றும் எண்ணம் வருகிறது. இதைத் தோற்றுவித்த ஒளிப்பதிவாளருக்கு நமது பாராட்டுக்கள்.

பாரதிராஜா பாணியில் இசையை எதிர்பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்..! ரகுநந்தனின் இசையில் ‘அன்புள்ள காதலா’ பாடல் மட்டும் இனிமை. மற்றவைகள் மனதில் ஒட்டவில்லை.

வாழ்க்கை மிக அழகானது.. அதனை நாமே முடித்துக் கொள்ளக் கூடாது. அதிலும் தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது என்பதை மிக அழுத்தமாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. இந்தக் கருத்துக்காக மட்டுமே இந்தப் படத்தைப் பெரிதும் பாராட்டலாம்.

கதையாகக் கேட்கும்போது நன்றாக இருக்கிறதே.. என்று நினைத்திருப்போம். ஆனால் இந்தக் கதையைத்தான். எந்த  அளவுக்குச் சொதப்ப முடியுமோ, அந்தளவுக்குச் சொதப்பி எடுத்திருக்கிறார்கள்.

பாரதிராஜா – ராசி நக்ஷத்திரா இருவருக்கும் இடையிலான பேச்சும், குறும்பும் சில இடங்களில் சுவையாக இருக்கிறது. பல இடங்களில் ‘அட போங்கப்பா’ என்று அலுத்துக் கொள்ள வைக்கிறது.

லண்டன் வாழ் பெண் இது போன்ற பிரச்சினைகளுக்கெல்லாம் ஓடிப் போய் தற்கொலை செய்து கொள்வதாக எல்லாம் திரைக்கதை வைத்திருப்பது சிரிப்பைத்தான் தருகிறது. வசனங்களும், காட்சி அமைப்புகளும் அரதப் பழசாக இருப்பதினால் நமக்கு அலுப்புதான் ஏற்படுகிறது.

சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையினால் படம் மெதுவாக ஆமை வேகத்தில் நகர்வது போல் தெரிகிறது. இது போன்ற பயணத்தை மையமாகக் கொண்ட கதைகளில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். எதுவுமே முன்கூட்டியே சொல்லப்படாமல் கிளைமாக்ஸ் காட்சியில் அதனை உடைப்பதினால் யாருக்கும் பலனில்லை.

இந்தப் படத்தில் சொல்லப்படும் கிளைமாக்ஸ் டிவிஸ்ட் கதையும் இது போன்ற அலுப்பைத்தான் நமக்குத் தந்திருக்கிறது. இந்தச் செய்தியை முன்பேயே சொல்லி ஒரு குடும்பத்தைத் தேடிப் போகிறேன். நீயும் வா.. என்று சொல்லி அழைத்துச் சென்றிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்.

பாரதிராஜாவுக்கும், நாயகிக்குமான நட்பு எப்படிப்பட்டது என்பதை குழப்பமாகவே கொண்டு சென்று முடித்திருக்கிறார்கள். இந்தக் குழப்பம் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்குள்ளும் போய்விட.. கடைசியில் மொத்தப் படமுமே உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது.

Our Score