full screen background image

திரெளபதி – சினிமா விமர்சனம்

திரெளபதி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை கிரவுட் பண்டிங் என்கிற முறையில் பல தயாரிப்பாளர்கள் இணைந்து ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர்.

படத்தில் ரிஷி ரிச்சர்ட் நாயகனாகவும், ஷீலா ராஜ்குமார் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் கருணாஸ், நிஷாந்த், செளந்தர்யா, சேஷூ, லேனா குமார், ஆறு பாலா, அம்பானி சங்கர், ஜே.எஸ்.கே.கோபி, கோபி, இளங்கோ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன், இசை – ஜூபின், பாடல்கள்  –  பட்டினத்தார், மோகன்.G, மணிகண்டன் ப்ரியா, கலை இயக்கம் – P.A.ஆனந்த், படத் தொகுப்பு – தேவராஜ், நடன இயக்கம் – ஜானி, மக்கள் தொடர்பு  – மௌனம் ரவி, மணவை புவன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மோகன்.G, தயாரிப்பு  – G.M. பிலிம் கார்ப்பரேஷன்(A Crowd Funding Film).

 இந்தப் படத்தை 7G பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் தணிக்கையின்போது சர்ச்சைகளையும், சவால்களையும் சந்தித்து வெளி வந்திருக்கின்றன.

நட்சத்திர அந்தஸ்து, பிரம்மாண்டமான பட்ஜெட், நட்சத்திர இயக்குநர் என எந்தவிதமான அடையாளங்களும் இல்லாமல் படத்தின் தலைப்பே விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் காரணமாக அமைந்தது ‘திரெளபதி’ என்னும் இத்திரைப்படத்தில்தான்.

வட மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக, குல தெய்வமாக இன்றைக்கும் வணங்கப்பட்டு வருபவர் ‘திரெளபதி’ என்னும் பெண் தெய்வம்.

மகாபாரதக் கதை உருவாவதற்கு காரணமாக அமைந்தது அக்னி குண்டத்தில் இருந்து உருவான ‘திரெளபதி’ என்னும் பெண் கதாபாத்திரம்தான்.

மகாபாரதம் முழுமையும் மன்னர்கள், சிற்றரசர்கள், கடவுள் அவதாரமான கிருஷ்ணர் என ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தபோதிலும் அவை அனைத்திற்கும் மையப் புள்ளியாக இருப்பது ‘திரெளபதி’ என்கிற கதாபாத்திரம்தான்.

அந்தக் கதாபாத்திரத்தின் பெயரில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் கூட்டுத் தயாரிப்பு(Crowd Funding) முறையில் உருவான முதல் திரைப்படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு, ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதியாரின் புகழ் பெற்ற பாடல் வரியை ‘ஜாதிகள் உள்ளதடி பாப்பா’ என்று எதிர்மறையாக முன் வைத்து இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது

வழக்கமாக நட்சத்திர நடிகர்களின் படத்தின் ட்ரெயிலர் மட்டுமே மில்லியன் கணக்கில் பார்க்கப்படுவதும், விரும்பப்படுவதுமாக இருந்து வரும் நிலையில்… ஒரு சமூக வலைத்தளத்தில் ‘தர்பார்’ படத்திற்கு இணையாக இந்தத் ‘திரெளபதி’ படத்தின் முன்னோட்டமும் பார்க்கப்பட்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியமான விஷயமாகும்.

படத்தின் திரைக்கதை என்ன கருத்தை முன் வைக்கப் போகிறது என்பது தெரியாமல் இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும், தணிக்கை செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் வரிசையான புகார்கள் இத்திரைப்படத்தை நோக்கி எழுந்திருந்தன.

பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸ், “இந்தத் திரைப்படத்தை முதல் ஆளாகப் பார்ப்பதற்கு நான் காத்திருக்கிறேன்…” என்று அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டது மேலும் சர்ச்சையை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இத்திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே உயர்த்தி பேசக் கூடிய திரைப்படமாக இருக்கும் என்கிற சந்தேகம் எல்லோர் மத்தியிலும் எழுந்தது.

படத்தின் பணிகள் முடிக்கப்பட்டு தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட போது, இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவும் எதிர்கொள்ளாத வினோதமான பலவித புகார்கள், தணிக்கை அலுவலகத்தில் இந்த படத்திற்கு எதிராக காத்திருந்தன.

தேசிய மற்றும் மாநில எஸ்.சி., எஸ்.டி., ஆணையங்கள் சார்பாகவும், ஐந்து தன்னார்வலர்கள் சார்பிலும் இப்படத்திற்கு எதிராக புகார் மனு அனுப்பப்பட்டு இருந்தது.

சென்னை தணிக்கைத் துறை இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு 15 இடங்களில் வசனங்களுக்குக் கத்தரி போட்டது. இதனை படத்தின் இயக்குநர் ஏற்றுக் கொண்டாலும் படத்தை மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மும்பை தணிக்கை அலுவலகம் உத்தரவு பிறப்பித்தது.

‘மடியில் கனமில்லை; வழியில் பயம் எதற்கு?’ என்கிற எண்ணத்தில் மறு தணிக்கைக்கு படக் குழுவினர் விண்ணப்பித்தார்கள். நடிகை கௌதமி தலைமையிலான 9 பேர் கொண்ட ரிவைசிங் கமிட்டி ‘திரெளபதி’ படத்தை பார்த்து ஏற்கனவே சென்னை தணிக்கை அலுவலகம் வழங்கிய 15 நீக்கப்பட்ட காட்சிகளில் 3-ஐ மட்டுமே ரத்து செய்து மீதமுள்ள 12 இடங்களில் வசனங்களை மட்டுமே நீக்குமாறு கூறிவிட்டு படத்திற்கு U/A தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது.

கடந்த பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று வெளியிடத் திட்டமிட்டிருந்த இந்தப் படம், இந்தக் கடைசி நேர களேபரத்தினால் தள்ளிப் போய் பிப்ரவரி 28-ம் தேதியன்று வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக தமிழ்ச் சினிமாவில் சாதிகளை மையப்படுத்திய கதைகளை அதிகமாக உருவாகி வருகின்றன. 1980-களில் ‘மேல் சாதி’, ‘கீழ் சாதி’ என்று வசனத்தில் மட்டுமே சொல்லப்பட்டு வந்த நிலை இன்றைக்கு மாறி, சினிமாவின் அனைத்துவித வடிவங்களிலும் சாதிப் பற்று பெருக்கெடுத்து ஓடுகிறது.

பி.ஜி.முத்தையா, சசிகுமார் போன்றவர்கள் மறைமுகமாகவோ, நேரடியாகவே தங்களது படங்களில் உயர் சாதியினரின் ஆக்கிரமிப்பையும், பெருமையையும் சுட்டிக் காட்டி வருகிறார்கள். சமுத்திரக்கனி போன்றவர்கள் நாட்டுப் பிரச்சினையுடன் கூடவே தொட்டுக் கொள்வதுபோல ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்பதையும் சொல்லித் தருகிறார்கள்.

இயக்குநர் பா.ரஞ்சித் தனது முதல் படத்தில் இருந்து இப்போதுவரையிலும் தான் சார்ந்த சமூக மக்கள் அன்றாடம் தாங்கள் சந்தித்து வரும் சாதீயக் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார். 

ஆனால் இந்தத் ‘திரெளபதி’ என்னும் திரைப்படம் இதுவரையிலும் ஆதிக்க சாதியினரை நோக்கி வீசப்பட்டு வந்த அத்தனை பந்துகளையும் ‘ஜாதிகள் உள்ளதடி பாப்பா’ என்று ஒரேயொரு வார்த்தையில் சொல்லி சிக்ஸருக்கு அடித்து விரட்டியிருக்கிறது. இவ்வளவு தைரியமாக ஜாதிப் பற்றைக் காண்பித்திருப்பதால் இத்திரைப்படத்திற்கு பட வெளியீட்டிற்கு முன்பேயே மிக அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வந்துள்ளது.

படமும் “இதுவரையிலும் ஆணவக் கொலைகளைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் அத்தனைத் திரைப்படங்களும் அந்தக் கொலைகளின் இன்னொரு பக்கத்தைச் சொல்லவில்லை. அவைகளெல்லாம் உண்மையான காதல் கதைகள் இல்லை.. நாடகக் காதல்…” என்று இன்னொரு கதையைத் திருப்பிப் போட்டுச் சொல்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் சில இடங்களில்.. குறிப்பிட்ட எண்ணிக்கையில்.. சில குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

திருமணங்களைப் பதிவு செய்யும் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் தான் ஒருதலையாய் காதலித்த.. அல்லது காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாக ஒரு போலி சான்றிதழைப் பெற்று அதை வைத்து அந்தப் பெண்ணையும், பெண்ணின் குடும்பத்தாரையும் காதலன் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மிரட்டி பணம் பறித்ததாகச் செய்திகள் வெளிவந்தன. இவற்றில் சில உண்மைகள். பலவைகள் போலியானவை.

அப்படியொரு கதையைத்தான் இந்தத் ‘திரெளபதி’ படமும் சொல்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ‘ருத்ர பிரபாகரன்’ என்னும் ரிஷி ரிச்சர்டு. தனது காதல் மனைவியான ‘திரெளபதி’ என்னும் ஷீலாவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்குக் குழந்தை இல்லை. இதே கிராமத்தில் ஷீலாவின் சித்தப்பாவும், அவரது மகள் லஷ்மியும் வசிக்கிறார்கள். லஷ்மி கல்லூரியில் படித்து வருகிறார்.

அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒரு விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்த வெளியூரைச் சேர்ந்த மாற்று சாதியைச் சேர்ந்த நபர்… அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேல் அந்த நிலத்தில் போர் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடு்த்து கேன் வாட்டராக சப்ளை செய்து பணம் சம்பாதிக்கிறார்.

ஊருக்கு என்றால் முதல் ஆளாகப் போராட்டத்தில் நிற்கும் ஷீலாவும், ரிச்சர்டும் இதனை எதிர்க்கிறார்கள். இதனால் கோபப்படும் அந்த நபர்கள் ஷீலாவின் தங்கை லட்சுமியை குறி வைக்கிறார்கள். தங்களது சாதியைச் சேர்ந்த ஒரு பையனை லட்சுமியுடன் சந்திக்க வைத்து.. ஒரு திட்டம்போட்டு லட்சுமி அந்தப் பையனைக் காதலிப்பதாக ஒரு புரளியைக் கிளப்பி விடுகிறார்கள்.

அதே நேரம் லட்சுமிக்கும், அந்தப் பையனுக்கும் சென்னையில் ராயபுரம் துணை பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் நடந்துவிட்டதாக ஒரு பொய்யான சான்றிதழை பொய் சாட்சிகளை வைத்து வாங்குகிறார்கள். இதை வைத்து லஷ்மி குடும்பத்தினரை மிரட்ட.. லஷ்மியின் அப்பா விஷம் குடித்து சாகிறார்.

அடுத்து ஷீலா மற்றும் ரிச்சர்டு, லஷ்மியையும் மிரட்டுகிறார்கள். இதற்கு இவர்கள் அஞ்சாமல் எதிர்த்து நிற்க.. ஷீலா மற்றும் லஷ்மி இருவரையும் அவர்களே கொலை செய்துவிட்டு பழியை ரிச்சர்டு மீது போடுகிறார்கள்.

இப்போது ரிச்சர்டு செய்யாத குற்றத்திற்காக விழுப்பும் கிளைச் சிறையில் 6 மாத காலம் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு ஜாமீனில் வெளியே வருகிறார். வந்தவர் ‘திரெளபதி’ உயிருடன் இருந்தபோது தன்னிடம் சொன்னதுபோல ‘இந்த போலி கல்யாண விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உயிருடன்விடக் கூடாது’ என்பதை நினைத்து இதனைச் செயலாக்கும் வேலையில் இறங்குகிறார்.

இதற்காக சென்னைக்கு வருகிறார் ரிச்சர்டு. வண்ணாரப்பேட்டையில் தனது ஊர்க்கார, சாதிக்கார உறவினருடன் தங்கியிருந்து சில ‘சம்பவங்களைச்’ செய்ய முனைகிறார். இதற்காக டீ விற்பவரைப் போல வேடமிட்டு ராயபுரம் துணைப் பதிவாளர் அலுவலக வளாகத்திற்குள் நுழைகிறார்.

அங்கேயே மோப்பம் பிடித்துவிட்டு தான் தேடிய மூவரில் இருவரைக் கொலை செய்துவிட்டு.. மூன்றாவது நபரை கொலை செய்யும்போது கொஞ்சம் சொதப்பிவிட.. போலீஸில் பிடிபடுகிறார்.. அப்போதுதான் ரிச்சர்டுக்கே தன் மனைவி ஷீலா பற்றிய ஒரு உண்மை தெரிய வருகிறது. ஷீலாவை யார் கொலை செய்தார்கள் என்பதும் அவருக்குத் தெரிகிறது.

இதன் பின்னர் அவர் கதி என்னவாகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் சுருக்கமான திரைக்கதை.

நடிப்பென்று பார்க்கப் போனால் ரிச்சர்டு்க்கு இத்திரைப்படம் மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. சிறப்பான இயக்கத்தினால் நன்றாகவே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். தனது மனைவியான ‘திரெளபதி’யை மரணக் கோலத்தில் பார்த்து கதறும்போதும், அவரைப் பற்றிய உண்மையை மீண்டும் அறிந்து அதிர்ச்சியடையும்போதும் யதார்த்தமான நடிப்பை மிக அழகாகக் கொடுத்திருக்கிறார்.

ஒரு முரட்டுத்தனமான காதலன், கணவன் கதாபாத்திரங்களுக்கு நிச்சயமாக ரிச்சர்டு பொருத்தமாக இருப்பார் என்பதற்கு இத்திரைப்படமே சாட்சி.

படத்தின் டைட்டில் நாயகியான ‘திரெளபதி’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷீலாதான் படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறார். நாடகங்களில் நடித்த அனுபவம் உள்ளவர் என்பதால் இயக்குநருக்கு கஷ்டம் கொடுக்காமல் ஏற்ற இறக்கத்துடன், வசனங்களை தமிழ் பிழையில்லாமலும், உணர்ச்சிப்பூர்வமாகவும் உச்சரித்து அதோடு தனது வடிவான முகத்தில் அழகான நடிப்பையும் கொட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்..!

ஆதங்கம், கோபம், ஆத்திரம், அன்பு என்று அவர் சம்பந்தப்பட்ட கிராமத்துக் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் நவரசம் அழகானது. இவருக்கு ஏன் குடும்பக் கதைகளைக் கொண்ட திரைப்படங்களில்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. இதற்கடுத்தாவது வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துகிறோம்.

படத்தில் மேலும் நடித்தவர்களில் போலி வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதியாக நடித்தவர்கள் தங்களது வில்லத்தனத்தை வித்தியாசமாகக் காட்டியிருக்கிறார்கள். இதேபோல் பல படங்களில் வில்லனாக நமக்குத் தெரிந்த நிஷாந்த் இந்தப் படத்தில் நல்ல போலீஸாக நடித்து பெயரெடுத்திருக்கிறார். நகைச்சுவை நடிகரான சேஷூ மிக இயல்பான லஞ்ச ஊழல் பேர்வழியாக நடித்திருக்கிறார். “என்னம்மா… குழந்தை நல்லாயிருக்கா..?” என்று மணமகள் வேஷம் போட்டிருக்கும் பெண்ணிடம் அவர் கேட்கும் கேள்விக்குத்தான் தியேட்டரில் அதிகப்படியான அப்ளாஸ்..!

மலையாள நடிகையான லேனா குமாரின் அழகைக் குறைத்துக் காட்டிவிட்டு அவரையும் கொஞ்சமாகவே நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். பொது நல வழக்கு போடும் வழக்கறிஞராக நடித்திருக்கும் கருணாஸ் வழக்கு விவரங்களை மிக அழுத்தமாக தனது வசன உச்சரிப்பால் பொங்கியிருக்கிறார். இது ஒருவித நாடகத்தன்மையோடு இருக்கிறது.

இதைவிடவும் கொடுமை.. அந்த நீதிபதியாக நடித்தவரின் நடிப்புதான். அப்படியொரு மாடுலேஷனில் தமிழைக் கடித்துக் குதறி துப்பியிருக்கும் அவரை மன்னிக்கவே முடியாது. கிடைத்த கேப்பில் அந்த பெண் நீதிபதியாவது நம்மைக் காப்பாற்றுவார் என்றால் அவரும் ஒரு படி மேலே போய் தமிழை பிறாண்டியிருக்கிறார்.

நாயகன், நாயகி, மற்றும் கிராமவாசிகளை மட்டுமே நடிக்க வைத்துவிட்டு இவர்களை ஓவர் ஆக்ட் செய்ய இயக்குநர் அனுமதித்துவிட்டார் போலிருக்கிறது.

கதையும், நடிப்பும்தான் முக்கியம். மற்றதெல்லாம் நமக்குத் தேவையில்லாதது என்ற ரீதியில் ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் அமைந்திருக்கிறது. ஆனால் குறையில்லை. பாடல்களில் ‘கண்ணத் தொறந்து  ஆடுறான்டா கண்ணாமூச்சி ஆட்டம்’ என்ற பாடல் மட்டுமே முதல் பாதியில் கொஞ்சம் இளைப்பாறக் கிடைக்கிறது. இரண்டாவது பாதியில் ஒலிக்கும் ‘குக்கூ குக்கூ கூ’ பாடல் மனதிற்கும், காதிற்கும் இனிமையாக இருந்தது. இதேபோன்று பின்னணி இசையையும் அமைத்துக் கொடுத்து இயக்குநருக்கு பெரிதும் உதவியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜூபின்.

“நாட்டில் நடக்கின்ற காதல் திருமணங்களில் பல திருமணங்கள் பொய்யானவை. அவைகளெல்லாம் நாடகக் காதல்கள்.. திட்டமிட்டு.. பணக்காரர்களை மிரட்டி அவர்களிடத்தில் பணம் பறிக்க சிலர் திட்டமிட்டு செய்யும் சதி வேலைதான் இந்த நாடகக் காதல்கள்…” என்று இந்தப் படத்தில் தங்களது கருத்தாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால் முதற்பாதியில் படத்தோடு அனைவரையும் ஒன்றிணைய வைத்த இயக்குநர், இரண்டாம் பாதியில் அதனைக் கோட்டைவிட்டுவிட்டார். அதற்கு முக்கியமான காரணம் ‘லாஜிக் என்றால் கிலோ என்ன விலை..?’ என்று கேட்பதுபோல திரைக்கதையை அமைத்திருப்பதுதான்.

முதலில் ஷீலா, லஷ்மி கொலை சம்பவத்தில் ரிச்சர்டு கைது செய்யப்படுவதே முறையாக இல்லை. ரிச்சர்டு அந்தப் பையனின் அழைப்பை ஏற்று அந்த ஊரின் பேருந்து நிலையத்திற்கு வருகிறார். அங்கே அவரை நிறைய பேர் பார்த்திருப்பார்கள். அவர்கள் இருவரும் பேசிய போன் கால் ரிஜிஸ்தரில் பதிவாகியிருக்கிறது. இந்த ஒரு ஆவணமே அவரைக் காப்பாற்ற போதும். இருந்தும், கேஸையே தலைகீழாக மாற்றுவதுபோல அலட்சியமாக இப்படி திரைக்கதையை கையாண்டிருப்பது இயக்குநரின் திட்டமிட்ட சதியாகத்தான் தோன்றுகிறது.

இரண்டு பேரை கொலை செய்ததற்காகத்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றால் அவருடைய மனைவி ஷீலா எப்படி உயிருடன் இருக்கிறார்..? இது எப்படி போலீஸுக்குத் தெரியாமல் போகிறது..? லேனா அரசு மருத்துவராக இருந்தும் இதை எப்படி வெளியில் சொல்லாமல் இருக்கிறார்..? இதனை எப்படி உயரதிகாரிகள் அனுமதித்தார்கள்..? ரொம்பவே நம் காதில் பூ சுற்றியிருக்கிறார் இயக்குநர்.

இத்தனைக்கும் ரிச்சர்டு சப்-ஜெயிலில் இருந்து வெளியாகும்போது சொல்லப்படும் டிவி செய்தியில் “தனது மனைவி மற்றும் மைத்துனியை ஆணவக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ருத்ர பிரபாகரன் ஜாமீனில் விடுதலை…” என்றுதான் சொல்லப்படுகிறது. இது எப்படிங்கோ சரியாகும் இயக்குநரே..?

ரிச்சர்டு வெளியில் வந்து சென்னையில் இருக்கும் இரண்டு முக்கிய சாதிக் கட்சி பிரமுகர்களை கொலை செய்திருக்கிறார். அந்த வழக்கு என்னவானது..? அந்த வழக்கில் பிரபாகரனை ஏன் கைது செய்யவில்லை..? அது பற்றிய போலீஸின் அறிவிப்பு என்ன..? என்பது பற்றியே சொல்லாமல் படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். இது என்னங்கப்பா போங்காட்டம்..? ஒருவேளை கொலையானவர்கள் தாழ்ந்த சாதியினர், கொலை செய்தவர்கள் உயர் சாதியினர் என்பதால்தான் இந்தக் கொலைகளை அரசு கண்டு கொள்ளவில்லை என்று நாம் எடுத்துக் கொள்ளலாமா..?

இது போன்ற நம்ப முடியாத லாஜிக் தவறுகள் படத்தில் பலவைகள் இருந்தாலும்… படத்தின் மேக்கிங் அழுத்தமாகவும், திரைக்கதை கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருப்பதால் படமும் இறுதிவரையிலும் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால். படத்தின் மையக் கருத்தாகச் சொல்லப்படும் பொய்யான ஒரு கூற்றை உண்மையாக்கவே முனைந்திருக்கிறது.

இது போன்ற பொய்யான காதல் திருமணங்கள்.. பதிவுத் திருமணங்கள் நாட்டில் நடந்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அது அனைத்து சாதியிலும் நடந்திருக்கிறது என்பதுதான் அழுத்தமான உண்மை.

ஆனால், இந்தப் படத்திலோ மறைமுகமாக தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பிரமுகர்களில் ஒரு சிலர் இப்படியொரு திட்டத்தோடு தங்களது சாதியைச் சேர்ந்த ஆட்களை தயார் செய்து வேற்று சாதி பணக்காரப் பெண்களோடு அவர்களைப் பழக விட்டு.. அந்தப் பெண்களைத் திருமணம் செய்துவிட்டதாக பொய்யான ஆவணங்களைத் தயார் செய்து அந்தப் பெண்ணின் குடும்பத்தையே குலைக்கிறார்கள் என்றே பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் வசிக்கும் தமிழர்களில் அவர்கள்… எந்தச் சாதிக்காரர்களாக இருந்தாலும் சரி.. அனைத்து சாதியினரிலும் இப்படியொரு திருடர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தால்… நிச்சயமாக இத்திரைப்படத்தை ஏற்றுக் கொள்ளலாம்.

காதலித்து ஏமாற்றும் பல்வேறு சாதியினரில் ஆண்கள் மட்டுமல்ல; பெண்களும் உண்டு. இதில் சாதி, மத பேதமில்லை. ஏமாற்றுதல் என்பதோ, சந்தர்ப்பவசத்தால் காதலை முறிப்பதோ.. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட விஷயமாகவே உள்ளது. இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் இயக்குநர் கதையை உருவாக்கியிருக்கிறார்.

அதேபோல் வன்மமாக ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதைச் செய்வதாக மறைமுகமாக வசனங்களில் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது வன்மையாகக் கண்டனத்துக்குரியது.

“எப்பவும் எங்களை அடிமையாத்தானே வச்சிருக்கீங்க..?”, “மாவட்டத்துக்கு நூறு பேரை இதுக்காகவே தயாரா வச்சிருக்கோம்ண்ணே..”, “அடங்குன்னா அடங்கக் கூடாதுன்னு எங்க அண்ணன் சொல்லிருக்காப்புல..” போன்ற வசனங்கள் எந்தச் சாதியினரைக் குறிக்கின்றன என்பது தெளிவாகவே தெரிகிறது.

இதேபோல் மேல் சாதியினர் பேசும் “நம்ம வம்சம்”, “நமக்குப் பின்னாடி பெரிய சமுதாயமே இருக்கு.”, “நமக்கு ஒண்ணுன்னா ஊரே ஓடி வரும்..” போன்ற வசனங்கள் எதிர் சாதியினரின் பெருமையைப் பேசி உயர்வு நவிற்சியை பறை சாற்றுகின்றன. இவையெல்லாம் தவிர்த்திருக்க வேண்டிய வசனங்கள்..!

பல வசனங்களை மியூட் செய்திருந்தாலும் உதட்டு உச்சரிப்பால் அதனை உணர முடிகிறது. சில இடங்களில் ‘கட்’ செய்திருப்பதும் தெரிய வருகிறது. இதையெல்லாம் உண்மையாகவே வெளியிட்டிருந்தால் தியேட்டர்களின் கதி என்னவாகியிருக்கும் என்று தெரியவில்லை. நல்லவேளையாக சென்சார் போர்டு அமைப்பினர் முதல்முறையாக தங்களது பணியினை நல்லவிதமாக செய்திருப்பதுபோல தோன்றுகிறது..!

போகிறபோக்கில் ‘காதல் என்பதே தேவையில்லை.. அதுவொரு ஏமாற்று வேலை.. திருமணம் செய்து வைக்கத்தான் வீட்டில் பெற்றோர்கள் இருக்கிறார்களே…’ என்றெல்லாம் அட்வைஸ்களையும் அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் சாதிவிட்டு சாதி கல்யாணம் செய்தவர்களிலும் பலரும் நல்ல நிலைமையில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இதில் சாதி வெறி பிடித்தவர்கள் சிலரால்தான் இந்த ஆணவக் கொலைகள் நடக்கின்றன. இதனால் ‘காதலே தவறு’ என்று சொல்வது மிக, மிக பிற்போக்குத்தனம். இந்தக் கூற்றை ஒரு திரைப்படத்தில் முன் வைத்திருப்பது மிகப் பெரிய வெட்கக்கேடான விஷயம்.

கருணாஸ் வழக்கறிஞராக நீதிமன்றத்தில் பேசும்போது “ஜாதிகள் கண்டிப்பாக வேண்டும். அது இருந்தால்தான் வாழ்க்கை பல்வேறு சமுதாயத்தினரிடையே சமன்பாடாக இருக்கும்…” என்று முரண்பாடாக பேசியிருக்கிறார். முட்டாள்தனமான வாதம்..!

“நான் உயர்ந்த சாதி.. நீ தாழ்ந்த சாதி..” என்று பிரித்து வைத்துப் பேசுவது மனித குலத்துக்கே எதிரான விஷயம் என்கிற அடிப்படையே புரிந்து கொள்ளாத… சாதி வெறி பிடித்த ஒரு மனிதரால்தான் இது போன்ற வசனங்களை எழுத முடியும்..!

இன்றைய 2020-ம் ஆண்டில்கூட தமிழகத்தில்… அதுவும் பகுத்தறிவுக் களஞ்சியமாக… இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தன்னைக் காட்டிக் கொள்ளும் தமிழகத்தில்தான்.. பல ஊர்களில் இரட்டை டம்ளர் முறையும், காலனி ஆட்கள் ஊருக்குள் நடக்கும்போது செருப்பு போடாமல் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் இருக்கிறது என்பது எவ்வளவு கேவலமானது..?!

இந்தக் கேவலத்தை அடித்து விரட்ட முனையாமல் “அதுதான் சம நீதி…” என்று சொல்வது மனித குலத்தே எதிரானது.. இந்தக் கொடுமையை இப்போதும் தடுக்காவிட்டால் இனி எப்போதுதான் தடுக்க முடியும்..?

சினிமா என்பது ஒரு மீடியம்.. மக்களிடம் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு துறை. அதனை வைத்து அரசியல் தொடர்புடையவர்கள் தாங்கள் சார்ந்த கட்சிகளின் கொள்கைகளை தங்களுடைய திரைப்படத்தில் புகுத்துவது தமிழகத்தில் சினிமா தோன்றிய காலத்தில் இருந்தே நடந்து கொண்டுதான் வருகிறது.

ஆனால் இப்போது சாதிய பிரச்சினைகள் அதிகமாகி.. ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களும் அவரவர் சாதியைச் சேர்ந்த பிரச்சினைகளை முன்னுக்குக் கொண்டு வந்து எங்களுக்கு இந்தக் கொடுமைகள் இப்படியெல்லாம் நடக்கிறது என்று சொல்ல ஆரம்பித்திருப்பது சினிமா துறைக்கு ஆரோக்கியமானதாக இல்லை.

இப்படியே ஒவ்வொரு சாதிக்காரர்களும் தங்களது கொள்கைகளை முன் வைத்து சினிமாக்களைத் தயாரிக்க ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும்..?

ஒரு ‘உண்மை’யைக்கூட ‘கருத்து சுதந்திரம்’ என்கிற பெயரில் ‘பொய்’ என்று சொல்லி சினிமாவாக்கலாம்.

அதேபோல் ஒரு ‘பொய்’யைக்கூட ‘கருத்து சுதந்திரம்’ என்கிற பெயரில் ‘உண்மை’ என்றாக்கி படமாக்கலாம்.

இதுதான் இப்போதைய தமிழ்ச் சினிமாவின் பரிதாபத்திற்குரிய நிலைமை.. படம் பார்ப்பவர்களின் நிலைமை அதைவிட பரிதாபமாக இருக்கிறது.

அத்தனை சாதிக்காரர்களின் கருத்துக்களும் இப்போது தமிழ்ச் சினிமா ரசிகர்களின் ஹைப்போதலாமஸில் புகுந்து கொண்டு கபடி விளையாடிக் கொண்டிருக்கிறது..!

நடுவரின் விசிலாக யாருடைய குரல் ஒலிக்கும் என்றே தெரியவில்லை. அதுவரையிலும் இந்தக் கொடுமைகளையெல்லாம் நாம் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்..!

Our Score