வரும் சுதந்திர தினத்தன்று ரிலீஸாகவிருக்கும் அஞ்சான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கிறது..
அதிகப்பட்சமான தியேட்டர்களில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ‘அஞ்சான்’ தயாரிப்பாளர்களான யு டிவி முடிவு செய்து அதற்கேற்றவகையில் தமிழகம் முழுவதும் தியேட்டர்களை புக் செய்திருக்கிறது.
சென்னை சத்யம் காம்ப்ளெக்ஸில் அனைத்துத் தியேட்டர்களிலுமே ‘அஞ்சானை’ ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம்.
இந்த நிலையில் சென்னையில் மட்டும் ‘அஞ்சான்’ படம் 37 தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளதாக சென்னை நகர விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் பிரபல விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளரான அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து பேசுகையில், “‘சிவாஜி’ படத்தை சென்னை நகரில் 18 திரையரங்குகளில் ரிலீஸ் செய்தோம். அது மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. தற்போது அதே வெற்றிப் பாதையில் சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தையும் 37 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப் போகிறோம்.
சென்னை ரசிகர்கள் ‘அஞ்சான்’ படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று திருட்டு விசிடியை நோக்கி போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இதனாலேயே நடந்து போகிற தூரத்தில் இருக்கும் பல தியேட்டர்களில் ‘அஞ்சானை’ ரிலீஸ் செய்திருக்கிறோம்..
இந்த படத்தின் ஆன்-லைன் டிக்கெட் முன் பதிவில் ஆரம்பித்த 2 மணி நேரத்தில் 5000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இது ஒரு மிகப் பெரிய சாதனை. இந்தப் படம் கண்டிப்பாக மிகப் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.