சினிமா ஹீரோக்களை நிஜ ஹீரோக்களாக பார்க்கவே முடிவதில்லை.. பம்முதல் என்றால் என்னவென்ற அர்த்தத்திற்கு தமிழ்ச் சினிமா ஹீரோக்களைத்தான் உதாரணமாகச் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. அப்படியொரு அடக்க உணர்வாக இருக்கிறார்கள்..
ஆனால் ‘சிகரம் தொடு’ படத்தின் இயக்குநர் கெளரவ் சொன்னதைக் கேட்டால் அந்தப் படத்தின் ஹீரோவான விக்ரம் பிரபுவை நிஜ ஹீரோ என்று பாராட்டத்தான் வேண்டியுள்ளது.
‘சிகரம் தொடு’ படப்பிடிப்பில் ஒரு நாள் ஆட்டோவில் விக்ரம் பிரபு செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டதாம். ஒரு ஆட்டோவில் விக்ரம் பிரபு செல்ல.. இன்னொரு ஆட்டோவில் கேமிராமேனுடன் இயக்குநர் கெளரவ் பின் தொடர்ந்து ஷூட் செய்வதுதான் ஏற்பாடு.
அக்கம்பக்கம் யாருக்குமே இப்படியொரு ஷூட்டிங் எடுக்கப்படுகிறது என்பதே தெரியாத அளவுக்கு ரகசியமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது திடீரென்று இயக்குநர் கெளரவ் வந்த ஆட்டோ மீது வேன் மோதி அந்த ஆட்டோ படுபயங்கரமான சேதமாகியிருக்கிறது.
ஆட்டோவுக்குள் இருந்த கெளரவ் மயக்கமாகி விழுந்துவிட.. முன்னால் சென்ற ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடி வந்த ஹீரோ விக்ரம் பிரபு இயக்குநர் கெளரவை தன்னுடைய தோளில் சுமந்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று அவரை அனுமதித்திருக்கிறார்.
இந்தத் தகவலை அந்த மருத்துவமனையில் இருந்த நர்ஸ்கள் சொல்லி பிற்பாடு கேட்டு தெரிந்து கொண்டாராம் இயக்குநர் கெளரவ். இதை அன்றைய பிரஸ்மீட்டில் வெளிப்படையாகச் சொன்ன இயக்குநர் கெளரவ்..
“இன்றைக்கு நான் இந்த மேடைல உசிரோட இருக்கேன்னா அதுக்குக் காரணம் விக்ரம் பிரபுதான்.. அவருக்கு என்றென்றைக்கும் நான் நன்றிக் கடனபட்டிருக்கேன்.. அவங்க அப்பா பிரபு ஸாருக்கு எப்படி பி.வாசு ஸார் ஹிட் இயக்குநரா கிடைச்சாரோ.. அதே மாதிரி நானும் இனிமேல் விக்ரம் பிரபுவுக்கு தொடர் வெற்றிகளைக் கொடுக்கும் இயக்குநரா இருப்பேன். இதுதான் நான் அவருக்குச் செய்யப் போற கைமாறு…” என்றார் நெகிழ்ச்சியுடன்..
பாராட்டுக்கள் விக்ரம் ஸார்..!