அனேகன் – சினிமா விமர்சனம்

அனேகன் – சினிமா விமர்சனம்

கண்வலி என்று மருத்துவரிடம் போகும்போது கலைடாஸ்கோப்பை கையில் கொடுத்து “இதைப் பார்த்துக்கிட்டேயிருங்க.. பத்து நிமிஷத்துல கண்ணு சரியா போயிரும்..” என்று சொல்வதுபோல கமர்ஷியல் படம்தான் வேண்டும் என்றாலும் 10 படங்களுக்கு கொடுக்க வேண்டிய விஷயங்களை ஒரே படத்தில் கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இந்த ‘அனேகனை’ செதுக்கி, செதுக்கி கொடுத்திருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

இந்தப் படத்திற்கு ஒரு சிறப்பு. இதன் கதையை எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் நாம் பார்க்கலாம். கதை சொல்லலாம். சொல்லாடலாம்.. அந்த அளவிற்கு இறுதியில்  இருந்து முதல் காட்சிக்கு.. முதல் காட்சியில் இருந்து இறுதிக்கு.. இடைவேளைக்கு பின்பில் துவங்கி, இடைவேளைக்கு முன்பு துவங்கி.. என்று அனைத்துவித குறுங்கோணங்களிலும் சொல்ல முடிகின்ற வகையில் படத்தின் கதையைப் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள் கதாசிரியர்கள் சுபா இரட்டையர்கள்.

மூன்று ஜென்மக் கதைகள். முதல் ஜென்மத்தில் காதல், காதலியின் அப்பாவால் அழிக்கப்படுகிறது. அடுத்த ஜென்மத்து காதல், காதலியை மணக்க விரும்பிய ஒரு பணக்காரனால் சமாதியாக்கப்படுகிறது. இந்த ஜென்மத்து காதலாவது ஜெயிக்குமா? ஜெயிக்காதா என்பதுதான் கதை..!

தனுஷ் என்ற ஒற்றை நாடி நடிகர் தனது புருவம் முதற்கொண்டு அனைத்தையும் ஆட வைத்தும், நடிக்க வைத்தும் அசர வைக்கிறார். படத்துக்கு படம் தனுஷின் நடிப்பில் ரசனை கூடிக் கொண்டே செல்கிறது.. பர்மா தனுஷ் ரொம்ப சின்னப் பையனாக.. பக்குவம் வராத இளைஞனாக தன்னை நாடி வரும் காதலியை அழைத்துக் கொண்டு நாடு திரும்பும் அளவுக்கு யுக்தியுள்ள பையனாக வருகிறார்.  ரசிக்க வைக்கிறார். காதலியைக் காப்பாற்றியதற்காக அவள் அம்மா பணம் கொடுக்க முயல.. “நீங்களே இப்போ விலை பேசுறீகளே..?” என்று செட்டி நாட்டு பாஷையில் பேசி மறுத்துவிட்டு அலட்சியமாக செல்லும் அந்த நடிப்புதான் கடைசிவரையிலும் அப்படியே இருக்கிறது.

வியாசர்பாடி இளைஞனாக பரிமாணிக்கும் தனுஷின் அடுத்தக் கட்ட நடிப்பும் அசர வைக்கிறது. கஸ்டம்ஸ் ஆபீஸரை காப்பாற்ற சண்டையிட்டுவிட்டு.. ஆஷிஷ் வித்யார்த்தியிடம் சமாளிப்போடு பேசும் காட்சியெல்லாம் தனுஷுக்கு விடப்பட்ட சவால்.. அல்வா சாப்பிடுவதுபோல மிக எளிதாக இந்தக் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். 

தற்போதைய ஜெனரேஷன் தனுஷ் ஹீரோயினின் மாமாவிடம் “100 கோடி, 200 கோடியிருந்தா வீட்லயே வைச்சிருக்க வேண்டியதுதானே? எதுக்கு அம்பதாயிரம் சம்பளத்துக்கு அனுப்புறீங்க..?” என்று முறைப்பு காட்டுவது.. ஹீரோயினிடம் இருந்து தப்பிக்க நினைத்தும் முடியாமல் போவதையெல்லாம் கொஞ்சமும் அலுப்பு தட்டாமல் சொல்லியிருப்பதற்கு தனுஷ் ஒருவரே காரணம் என்றே சொல்லலாம்.

கிளைமாக்ஸில் கார்த்திக் போலவே தனுஷ் நடித்துக் காட்டும் அந்தக் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. இந்த நடிப்பையெல்லாம் பார்க்கணுமா என்று நினைத்து கார்த்திக் காட்டும் ‘அட போடா’ என்ற எக்ஸ்பிரஷனும் சூப்பர்தான்..!

கார்த்திக் என்னும் புயல் இதில் மீண்டு வந்திருக்கிறது. ஆனாலும் அநியாயத்திற்கு ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசியிருப்பதும், பாதி டயலாக்குகளை மென்று முழுங்கி பேசுவதையும்தான் ரசிக்க முடியவில்லை. வியாசர்பாடி காலத்தில் அவர் வில்லனாக எப்போது மாறுவார் என்று எதிர்பார்க்க முடியவில்லை. அவர் பிக் பீரியடில் இருந்த காலத்தில்கூட இப்படியொரு பாட்டுக்கு இப்படியொரு கெட்ட ஆட்டம் ஆடியிருக்க மாட்டார்.. “என் வாழ்க்கைல நிறைய பொண்ணுக கிராஸ் பண்ணியிருக்காங்க. ஆனா காலைல பார்த்தா பேரே மறந்திரும்..” என்று கார்த்திக் சொல்வது அவரது கடந்த காலத்திற்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

ஹீரோயின் மட்டுமே சறுக்கலாக இருக்கிறது. இந்த மாதிரியான படங்களுக்கு ஏற்கெனவே இங்கே கொலு வீற்றிருக்கும் ஹீரோயின்கள்தான் மிகவும் தேவை. அவர்களில் ஒருவரை பயன்படுத்தியிருந்தால் இன்னமும் ரசித்திருக்க முடியும். முதல் படம் என்பதோடு.. அவருடைய நடிப்பையும், துள்ளலையும் ரசிக்கும் அளவுக்கு நேரமில்லாமல் படம் அவ்வளவு வேகமாக ஓடுகிறது.. இதில் எதை ரசிப்பது..?

கொஞ்சமே வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. மனோதத்துவ நிபுணராக வரும் மலையாள நடிகை லேனா தமிழுக்கு நல்ல வரவு. தனுஷின் அம்மாவாக நடித்திருப்பவரின் இன்னசென்ட் முகம்.. அப்பாவாக நடித்திருக்கும் சங்கர் கிருஷ்ணமூர்த்தியின் இரண்டே இரண்டு வசனங்கள் எழுப்பும் அதிர்வெடி கைதட்டல்.. நண்டு ஜெகனின் ஆர்ப்பாட்டமில்லாத சிரிப்பே வராத காமெடி வசனங்கள்.. எல்லாமும் சேர்ந்து இயக்குநருக்கு உதவியிருந்தாலும் பெரும் உதவி செய்திருப்பவர் இசையமைப்பாளர்தான். ‘டங்காமாரி’ பாடலுக்கு தியேட்டரே ஆடுகிறது.. ஆனாலும் அருமையான தத்துவ தமிழ் வார்த்தைகள் அடங்கிய இந்த மாதிரியான பாடல்கள்தான் இப்போதைய இளைஞர்களுக்கு பிடிக்கிறது என்றால் நமது அடுத்தத் தலைமுறையை நினைத்து பயப்பட வேண்டியிருக்கிறது.. எங்கே போகிறது தமிழ்ச் சமூகம்..?

படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது பர்மா சம்பந்தப்பட்ட காட்சிகளிலேயே தெரிகிறது.. கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் என்பதும் புரிகிறது. ஆனாலும் காட்சிகள் அனைத்துமே உடனுக்குடன் தாவி, தாவி செல்வதால் எந்தக் கேரக்டருக்குமே அழுத்தமான முக பாவனைகளும், நடிப்பாற்றலும் வெளிப்படவில்லை என்பது மிகப் பெரிய குறை.

இப்போதுதான் ‘இசை’ என்றொரு படம் வெளிவந்தது. நடிகர்களை நடிக்க வைப்பது எப்படி என்பதற்கு கிளாஸ் எடுப்பது போல  இருந்த்து அதன் காட்சியமைப்புகள். இதில் மிக குறுகிய நேர காட்சிகளால் பல விஷயங்கள் அழுத்தமாக இல்லாதது போல ஆகிவிட்டது.

பர்மா காட்சிகளில் ஆங்சான் சூகியையும் இரண்டு இடங்களில் காட்டி தனது அறிவுத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். மேலும் கார்த்திக் நடத்தும் கம்ப்யூட்டர் கேம்ஸ் சாப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மூளையை மென்மைப்படுத்தும் அந்த மாத்திரை தொடர்பான செய்திகள்.. இதன் மூலமாக சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் ஊழியர்கள் என்று கதையை கொஞ்சம், கொஞ்சமாக அவிழ்த்துக் கொண்டே வந்தது ஒருவிதத்தில் ஓகேதான் என்றாலும் ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் அது எதற்காக என்றே கேட்கத் தோன்றுகிறது.

 கார்த்திக் அமைராவை பார்த்துவிட்டார். தன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார். அவளையே திருமணம் செய்ய நினைக்கிறார்.. இப்படியே கதையை கொண்டு சென்றிருக்கலாம். இதில்லாமல், முன் ஜென்மத்துக் கதையையெல்லாம் தோண்டி.. மூக்கைச் சுற்றி தலையைத் தொட்ட கதையாக திசை திருப்பியிருக்கிறார்கள்.

ஆஷிஷ் வித்யார்த்தி அந்த R என்று எழுதப்பட்ட மோதிரம் இருக்கும் விரலை மட்டும் எதற்காக மறைக்கிறார் என்பதை சொல்லவேயில்லையே..? ஒருவேளை அவர் கார்த்திக்கின் தோஸ்து என்பதை சொல்ல வந்து அது எடிட்டிங்கில் கட்டாகிவிட்டதோ..?

கார்த்திக் அலுவலகத்தில் சண்டை காட்சி.. கிளைமாக்ஸ் சண்டை காட்சி..  மிகச் சரியான நேரத்தில் வந்து நிற்கும் போலீஸ்கார். ஐ.டி. படித்ததை உறுதி செய்வதை போல தனுஷ், “இவரை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போயிட்டால் என் காதல் என்னாவது?” என்று கேட்பது.. எல்லாவற்றுக்கும் மேல், மேலே தூக்கி வீசிய கத்தி கீழே வந்து கார்த்திக்கின் கதையை முடிப்பது என்கிற அந்த ரகசியம்தான் ரசவாதமாகி காமெடியாகவும் இருக்கிறது..!

முன் ஜென்மத்து சம்பவம்தான் என்றாலும், ஹிப்டினாஸத்தில் ஆழ் மன ரகசியத்தை வெளிக்கொணரலாம் என்றாலும்.. அமைரா இப்போது சராசரி பெண்ணா. அல்லது முக்காலமும் உணர்ந்த பொண்ணா..? மனநல காப்பகத்தில் இருக்கும் தலைவாசல் விஜய்யை தன்னுடைய முன்பிறவி அப்பா என்று எப்படி கண்டு பிடிக்கிறார்..? இந்த பர்மா கதையெல்லாம் அந்த மாத்திரையை சாப்பிட்ட பின்பு வெளிவந்ததா..? கார்த்திக் அவளை இங்கே அனுப்பி வைத்திருக்கும் காரணம்தான் என்ன..? 

எல்லாமே ஹீரோயினின் சிந்தினை திறனால் என்றால் கம்பெனியில் கொடுக்கப்பட்ட மாத்திரையினால் விளைந்த தீமைகள் என்ன..? கார்த்திக் ஏன் அதனை தொடர்கிறார்..? இந்த மருத்துவர் இதற்கு ஒத்துழைக்கும் ரகசியமென்ன..? இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே போகலாம்.. இதெல்லாம் படிப்பதற்கு ஓகேதான்.. விஷுவலாக பார்க்க சிந்திக்கவே விடாத தன்மையுடன் படத்தைப் பார்த்து முடிக்க வைத்திருக்கும் சூழலைத்தான் சொல்ல முடியும்..!

காது கிழியும் அளவுக்கு பாடல் இசையையும், பின்னணி இசையையும் போட்டுக் கொளுத்தியிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு ஹியரிங் எய்டு பார்சல்.. ஆனால் பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்கும், நடன இயக்குநர்களுக்கும் பாராட்டுக்கள். அதிவேக காட்சிகளுக்கு இணையாக நடனம் அமைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் அதீதமாக வித்தை காட்டத் தெரிந்தவர்களால்தான் முடியும்..!

முதலில் இந்தப் படத்திற்கு ‘ஏ’ சர்பிடிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும். ஏற்கெனவே 32 இடங்களில் கத்திரியை போட்டும் படம் இப்படியிருக்கிறது என்றால் அவைகளும் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..? நேரில் சாந்த சொரூபியாக காட்சியளிக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்த், நிஜத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒண்ணுவிட்ட அண்ணானாக இருப்பார் போலிருக்கிறது. சென்சார் போர்டுக்கு நமது வன்மையான கண்டனங்கள்.

படம் முழுக்க ஆங்காங்கே விரவிக் கிடக்கும் டபுள் மீனிங் டயலாக்குகள்.. விரசத்தை தொடும் காட்சிகளென்று முகத்தை சுழிக்க வைப்பவை நிறையவே இருக்கின்றன. இதையெல்லாம் குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டுமென்றால் எப்படி..? கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா..? கமர்ஷியல் ஹிட்.. அபார வசூல். இது இரண்டை மட்டுமே லட்சியமாகக் கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகம் இதனை எப்போது புரிந்து கொள்ளப் போகிறது..?

எப்படியிருந்தாலும் முதல் 2 நாட்களிலேயே 20 கோடியை வசூல் செய்திருப்பதால் இந்தப் படத்தின் கலெக்சன் இப்போதைக்கு நிற்காது என்றே தோன்றுகிறது.. சமீபத்தில் வெளிவந்த ‘ஐ’-யும் படம் பற்றிய பல கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் இன்னமும் வெற்றிகரமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படமும் நிச்சயமாக அதுபோலவே ஓடும் என்றே தோன்றுகிறது.

ஏனெனில் தமிழ் ரசிகர்கள் இந்த அளவுக்கு கமர்ஷியல் படங்களுக்காக காய்ந்து போயிருக்கிறார்கள். அனுபவிக்கட்டும்..!

Our Score