தமிழ்ச் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களான விஷால், சிம்பு, தனுஷ், அதர்வா நான்கு பேருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் சம்பந்தமாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது ஏற்கனவே பல முறை புகார் அளித்தும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவடையாத நிலையில் அதையே மேற்கோள்காட்டி தற்போது சிம்புவுக்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டுள்ளதாம்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்கப் பணத்தை முறையாக கையாளாதது தொடர்பான புகாரில் விஷாலுக்கும் ரெட் கார்ட் விதிக்கப்பட்டுள்ளதாம்.
நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் சங்கத் தலைவரான தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் அந்தப் படப்பிடிப்புக்கு வர மறுத்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அவருக்கும் ரெட் கார்டாம்.
தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா முறையாக பதிலளிக்காமல் நழுவுவதால் அதர்வாவுக்கும் ரெட் கார்ட் போடப்பட்டுள்ளதாம்.