இயற்கையாக உருவான பேரிடரான கொரானா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் முடங்கிப் போயிருக்கின்றன. இதன் காரணமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்களும் உலகளவில் முடங்கியிருக்கின்றன. இதில் திரைப்படத் துறையும் விதிவிலக்கல்ல.
மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்புகள், மற்றும் வைரஸை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வருகின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான நிவாரண உதவிகளை கொடுக்காமலும், அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணங்களும் இன்னமும் முழுமையாக அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சென்றடையவில்லை.
தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள்-திரையரங்கு உரிமையாளர்கள் மூவருக்கும் இணைப்பு பாலமாக இருந்து கோடிக்கணக்கான வியாபாரங்கள் முடிவதற்கு காரணமாக உள்ளவர்கள் மீடியேட்டர்கள் எனப்படும் ஒரு பிரிவினர்.
இவர்கள் அனைவரும் உறுப்பினர்களாக உள்ள ‘அம்மா மூவி அசோசியேசன்’ தங்கள் உறுப்பினர்களை பாதுகாக்கும் பொருட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதலே கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் தங்களது உறுப்பினர்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்துக்கான அடிப்படை உதவிகளை ஐந்தாவது மாதமாக தொடர்ந்து செய்து வருகிறது.
தொழில் முடங்கி 150 நாட்கள் கடந்த நிலையில் சினிமா படப்பிடிப்புகள், திரையரங்குகள் இன்னமும் தொடங்கப்படவில்லை இதனால் இத்துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நெருக்கடிக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில்தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை சாமான்களை வழங்கி வருவது திரைத்துறையினர் மத்தியில் விவாதப் பொருளாகி வருகிறது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஏப்ரல் முதல் ஒவ்வொரு மாதமும் தனது உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும், மளிகை சாமான் மற்றும் பண உதவியை மாதந்தோறும் வழங்கிவருகிறது அம்மா மூவி அசோசியேஷன்.
இது சம்பந்தமாக அம்மா மூவி அசோசியேஷனின் செயலாளர் சரவணன் பேசியபோது, “தமிழ் சினிமாவில் வருடந்தோறும் 200 திரைப்படங்கள்வரை தயாரிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகின்றன. சுமார் 2000 கோடி மதிப்புள்ள இந்த படங்களின் தமிழக வியாபாரம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, வட இந்தியா, வெளிநாட்டு விநியோக உரிமை, ஆடியோ உரிமை, ரீமேக் உரிமை என வியாபாரம் செய்வதற்கு சரியான நபர்களை அடையாளம் காண தயாரிப்பாளர்களுக்கு பாலமாக இருப்பவர்கள் எங்களது சங்க உறுப்பினர்களான ஃபிலிம் மீடியேட்டர்கள்தான்.
இவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது தமிழ் சினிமாவிற்கு முக்கியமானது. எங்களது இந்த முயற்சிக்குத் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்கள் , திரையரங்க உரிமையாளர்கள்என பலதரப்பினரும் தாராளமாக உதவி செய்து வருகின்றனர். அதனை ஒருங்கிணைக்கும் பணிகளை மட்டுமே நாங்கள் செய்து வருகிறோம்..” என்றார்.














