ஏவி.எம். நிறுவனத்தின் ‘அந்த நாள்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது..!

ஏவி.எம். நிறுவனத்தின் ‘அந்த நாள்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது..!

தமிழ்த் திரையுலக வரலாற்றில் ‘அந்த நாள்’ என்னும் திரைப்படம் மறக்க முடியாத திரைப்படமாகும்.

1954-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் படம் உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குநரான அகிர குரசோவாவின் ‘ரஷோமான்’ என்னும் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது.

மர்மக் கதையின் பின்னணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், பண்டரிபாயும் நடித்திருந்தனர். அப்போதைய காலக்கட்டத்தில் ஒரு படத்திற்கு 10 பாடல்கள் இருந்த நிலையில்... ஒரு பாடல்கூட இடம் பெறாமல் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.

இந்தப் படத்திற்கு பிரபல நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுதியிருந்தார். வீணை எஸ்.பாலசந்தர் திறம்பட இயக்கியிருந்தார். ஏவி.எம். நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்போது 65-ம் வருடங்கள் கழித்து அதே ஏவி.எம். நிறுவனம் ‘அந்த நாள்’ என்னும் அதே பெயரில் ஒரு புதிய திரைப்படத்தை தரவிருக்கிறது.

இந்தப் படத்தை கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.ரகுநந்தன் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் நாயகனாக அறிமுக நடிகர் ஆர்யன் ஷாம் நடிக்கிறார். இவர் ஏவி.எம்.குடும்பத்தைச் சேர்ந்தவர். தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணனின் பேத்தியும், தயாரிப்பாளர் எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவருமாவார்.

இந்தப் படத்தில் ஆர்யன் ஷாம் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தற்போது இந்தப் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

கதை நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ புகழ் ராஜ்குமார், ‘கைதி’ பட புகழ் கிஷோர், ஆகியோருடன் காமெடி வேடத்தில் இமான் அண்ணாச்சியும் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். என்.எஸ்.ராபர்ட் சற்குணம் இசையமைத்திருக்கிறார். ஜெ.எஃப்.காஸ்ட்ரோ படத் தொகுப்பு செய்திருக்கிறார். அறிமுக இயக்குநரான வி.வீ. இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

வித்தியாசமான கதையமைப்போடு கிரைம், திரில்லர் கலந்த திகில் படமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

விரைவில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார்.

இன்றைக்கு இந்தப் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.