பிரபல மலையாள நடிகரான முகேஷின் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை எழுந்துள்ளது. அவரது இரண்டாவது மனைவியான மெதில் தேவிகா, முகேஷிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார்.
மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் முகேஷ். தற்போது 64 வயதாகும் முகேஷ் இதுவரையிலும் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். தமிழில் ‘மனைவி ஒரு மாணிக்கம்’, ‘ஜாதி மல்லி’, ‘ஐந்தாம் படை’, ‘பொன்னர் சங்கர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்,
இவருக்கும், பிரபல நடிகை சரிதாவுக்கும் 1988-ல் காதல் திருமணம் நடந்தது. பின்னர் இவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடைசியில் 2011-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். அப்போது, முகேஷ் ஒரு குடிகாரர் என்றும், பல பெண்களுடன் தொடர்பு வைத்து இருக்கிறார் என்றும் சரிதா குற்றம் சாட்டியிருந்தார்.
பின்னர் பரத நாட்டிய கலைஞர் மெத்தில் தேவிகாவை 2013-ல் முகேஷ் 2-வது திருமணம் செய்து கொண்டார். மெத்தில் தேவிகாவும் அப்போது முதல் திருமணம் செய்து டைவர்ஸ் செய்திருந்தார். முதல் திருமணம் மூலமாக தேவிகாவுக்கு ஒரு மகனும் இருந்தார். இந்தச் சூழலில்தான் இவர்களது திருமணம் நடைபெற்றிருந்தது. தற்போது இந்தத் திருமணமும் தோல்வியில் முடிந்திருக்கிறதாம்.
தற்போது முகேஷிடம் இருந்து தனக்கு விவகாரத்து வேண்டும் என்று கேட்டு மெத்தில் தேவிகா தற்போது குடும்ப நலக் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முகேஷ் தற்போது கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது முகேஷுக்காக வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார் தேவிகா. அந்த அளவுக்கு அன்னியோன்யமாக இருந்த இவர்களின் உறவு எப்படி 2 மாதங்களில் முடிவுக்கு வந்தது என்று தெரியவில்லை.
கடந்த 2 மாத காலமாக தேவிகா மட்டும் தனியாக தனது பாலக்காட்டு பூர்வீக வீட்டில் இருந்து வந்திருக்கிறார். 2 மாதங்களுக்கு முன்பாகவே இருவரும் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் தேவிகாவுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அப்போது முகேஷ் அவரை சரியாகக் கவனிக்காமல் வீட்டுக்கே வராமல் ஒதுங்கியிருந்திருக்கிறார். இது தேவிகாவுக்கு மிகப் பெரிய மன வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. இதுதான் பிரிவுக்கான முதல் காரணம் என்கிறார்கள்.
இது குறித்து மெத்தில் தேவிகா கூறும்போது, “நான் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பது உண்மைதான். இதற்கான காரணம் தனிப்பட்ட முறையிலானது. அதை வெளியில் சொல்ல விரும்பவில்லை. முகேஷ் இந்த விவகாரத்தில் அவருடைய முடிவைச் சொல்லவில்லை.
நான் மிகுந்த கஷ்டத்திற்கிடையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதனை அமைதியான முறையிலேயே எதிர்கொள்ள நினைத்துள்ளேன்.
முகேஷின் அரசியல் வாழ்க்கை காரணமாகத்தான் நான் இதை வெளிப்படையாக சொல்ல வேண்டியிருக்கிறது. நான் இதற்கா முகேஷை குற்றம் சொல்ல விரும்பவில்லை. அவருடைய அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையுடனும் தொடர்புபடுத்த விரும்பவில்லை.
அவர் மீதான கோபத்தில் அவரிடமிருந்து நான் விலகிச் செல்லவில்லை. தேர்தல் முடிவுகளுக்காகத்தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தேன். முகேஷ் மீது வன்முறை புகார்கள் எதையும் நான் விவகாரத்து மனுவில் சொல்லவில்லை. அப்படியெதுவும் நடக்கவில்லை.
ஆனால், முகேஷ் நல்ல கணவர் இல்லை. 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவரை புரிந்து கொள்ள முடியாது. எனவேதான் பிரிய முடிவு செய்தேன். எனக்கு முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை. விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு..’’ என்று கூறியுள்ளார்.