ஆ – சினிமா விமர்சனம்

ஆ – சினிமா விமர்சனம்

‘அம்புலி’ படத்தை இயக்கிய அதே டீம் மீண்டும் ஒரு திரில்லருடன் களமிறங்கியிருக்கிறார்கள். இந்த முறை ‘நான்கு கதைகளுடன் ஒரு சினிமா’ என்பது என்ற புதுமையுடன் ஆசிய கண்டத்தின் சில பேய்களை நாடு விட்டு நாடு போய் நமக்குக் காட்டியிருக்கிறார்கள்.

கல்லூரி நண்பர்களான பாபி சிம்ஹா, கோகுல், பாலா, மேக்னா ஆகிய நான்கு பேரும் ஒரு பார்ட்டியில் சந்திக்கிறார்கள். இப்போது அவரவர் என்னென்ன செய்து வருகிறோம்.. எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம்.. மாணவப் பருவத்தில் கண்ட கனவுகள் இப்போது பலித்திருக்கிறதா என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது பழசை மறக்காத பாபி சிம்ஹா நண்பர்கள் மூவரையும் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். மிகப் பெரிய கோடீஸ்வரரான அவர் பலவிதமான பந்தயங்களில் கலந்து கொண்டு தான் ஜெயித்து வருவதாகச் சொல்கிறார். அப்போது கல்லூரி படிப்பின்போது சிம்ஹா தன்னிடம் ஒரு விஷயத்தில் பெட் கட்டி தோல்வியடைந்து அதற்கு பரிசாக அவரது யமஹா பைக்கை தன்னிடம் அளித்த்தை நினைத்துப் பார்த்து கேட்கிறார் கோகுல்.

இதனை மறக்க முடியாத நிலையில் இருக்கும் சிம்ஹா.. இப்போதும் தான் பெட் கட்டி கோகுலை தோற்கடிக்கத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார். இந்தப் பேச்சு பேய், பிசாசு என்று போய் நிற்கிறது.

அப்போது பேய் இருப்பதை நிரூபித்தால் தனது சொத்தில் பாதியைத் தருவதாகச் சொல்கிறார் சிம்ஹா. இவர்கள் தோற்றால் தன்னுடைய யமஹா பைக்கை மட்டும் தன்னிடம் கொடுத்தால் போதும் என்கிறார் சிம்ஹா. இதற்கு மூவரும் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் பின்பு 60 கோடி ரூபாய் பணத்துக்காக ஒத்துக் கொள்கிறார்கள்.

இந்தப் பேயை நிரூபிக்க வேண்டி.. பேய் இருந்ததாகச் சொல்லப்படும் இடங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று அதனை படமெடுத்து சிம்ஹாவிடம் காட்டி பரிசை பெற்றுவிட முயல்கிறார்கள். அதில் ஜெயித்தார்களா இல்லையா என்பதுதான் படம்..!

இதனை நான்கு கதைகளாக தந்திருக்கிறார்கள். முதல் கதை மீனவரின் படகு ஒன்றில் ஒரு இளம் காதல் ஜோடி பிறந்த நாள் கொண்டாட கடலுக்குள் சென்றபோது அந்தப் படகு மாயமாகிவிட்டதாகவும்.. சில நேரங்களில் சில பேருக்கு மட்டும் அந்த படகு தென்பட்டு அதில் பேய் இருப்பதை பார்த்திருப்பதாகவும் கேள்விப்பட்டு அந்த பேயைத் தேடிச் செல்கிறார்கள்.

அடுத்து ஜப்பானில் ஒரு மருத்துவமனையின் அறையில் பேய் ஒன்று இருப்பதாகச் செய்தி வந்து ஜப்பானுக்கு சென்று அந்த மருத்துவமனையை சோதனையிட்டு பேய் இருப்பதை நிரூபிக்க முயல்கிறார்கள்.

அதற்கடுத்து துபாயில் பாலைவனத்துக்கு நடுவில் இருக்கும் ஒரு பங்களாவில் வசிக்கும் பெண் பேய் ரூபத்தில் இருப்பதாகத் தெரிய வர.. அங்கேயும் சென்று பேயுடன் அறிமுகமாகி வம்பை விலைக்கு வாங்குகிறார்கள். தலை தப்பியதே தம்பிரான் புண்ணியம் என்கிற அனுபவத்தில் சென்னை திரும்புகிறார்கள்.

நான்காவதாக ஏடிஎம் சென்டரில் செக்யூரிட்டியாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கருக்கு நேரும் பேய் அனுபவம்.. இந்த அனுபவத்தின் இறுதியில் பேயைத் தேடிப் போனவர்களுக்குக் கிடைக்கும் அனுபவமே வித்தியாசமாக இருக்க.. கடைசியில் ‘ஆவ்’ என்று கொட்டாவிவிட வைத்துவிட்டார்கள்..!

இறுதியில் யார், யார் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.. சிம்ஹா என்னவானார்..? என்பதையெல்லாம் வெளியில் சொன்னால் படம் சப்பென்றாகிவிடும்.. தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

ஜப்பான் பேய், துபாய் பேய், எம்.எஸ்.பாஸ்கர் சந்திக்கும் பேய் என்ற இந்த மூன்றுமே படத்தை கொஞ்சம் சுவாரசியப்படுத்தியிருக்கின்றன.

கடல் பேய் மாயாஜாலத்தை காட்டியதே தவிர பயத்தைக் காட்டவில்லை.. ஜப்பானில் மருத்துவமனையின் அந்த ஒற்றை அறையில் கொஞ்சம் திகிலூட்டியிருக்கிறார்கள்.. துபாய் பேயில் கொஞ்சம் கலகலப்பையும் கூட்டியிருக்கிறார்கள்.. அந்த துபாய் அழகியின் கண்கள் இன்னமும் நம் கண்களைவிட அகலவில்லை. அவ்வளவு அழகு.. பாலசரவணனால் இந்த எபிசோட் அமர்க்களப்படுகிறது.. அது பேய் என்று தெரிந்தும் பாலசரவணன் ஏன் அது பின்னாடியே போக வேண்டும்..? கோகுல் அவரை விரட்டிப் பிடித்து இழுத்து வருவதெல்லாம் சாதாரணமான தமிழ் சீரியல் சீனாகிவிட்டது..

எம்.எஸ்.பாஸ்கரின் எபிசோட் கொஞ்சம் நெகிழ வைக்கிறது.. சூழ்நிலைகள்தான் மனிதனை குற்றவாளியாக்குகிறது என்பதற்கு இந்தக் கதை மிக பொருத்தமானது.. கடன்காரனின் தொல்லை தாங்காமல் இருப்பவனின் கண்களில்தான் இறந்தவனின் பணம் தென்பட வேண்டுமா..? இது விதியின் விளையாட்டில்லாமல் வேறென்ன..? எம்.எஸ்.பாஸ்கருக்கு இதற்கடுத்து பேயினால் நடக்கும் கதைகள்.. ஏடிஎம் சென்டருக்குள் நடக்கும் பரபரப்பு.. பணம் பறப்பது.. என்று அதிகமாகவே மிரட்டியிருக்கிறார்கள்.

நடிப்பென்று பார்த்தால் பாலசரவணன்தான் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்.. கோகுலைவிடவும், ஹீரோயினைவிடமும் அதிகமாக வசனம் பேசியிருப்பதும், நடித்திருப்பதும் பாலசரவணன்தான்.. துபாய் எபிசோடில் ரசிக்கவும், பதைபதைக்கவும் வைத்திருக்கிறார்.

சிம்ஹா வழக்கம்போல.. ஜிகர்தண்டாவுக்கு முன்பே இவரிடம் கதையைச் சொல்லி இவருக்காக மூன்று மாத காலம் காத்திருந்து அவரை நடிக்க வைத்திருக்கிறார்களாம். பாராட்டுக்கள். அதிகம் அலட்டிக் கொள்ளாமல் வெறுமனே உடல் மொழியின் மூலமும், வசன உச்சரிப்பு மூலமாகவுமே நடிப்பைக் காட்டியிருக்கிறார் சிம்ஹா.

படத்தின் ஹீரோயின்தான் தேறவில்லை.. எந்த வகையிலும் நம்மைக் கவரவில்லை.. படத்திற்கும் பயனில்லை.. இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களில் ஓரிரு படங்களில் நடித்த நடிகைகளை நடிக்க வைத்தால்தான் சரிப்படும். திகிலூட்டும் காட்சிகளில் முதலில் அவர்கள் பயந்திருந்தால்தான் படத்தை பார்ப்பவர்களுக்கும் பயம் வரும்.. பணத்திற்காக ஹீரோயின்தான் மற்ற இருவரையும் வற்புறுத்தி இதில் இறங்க வைக்கிறார்.. அவ்வப்போது இவர்களுக்குள் ஏற்படும் மோதல்களையும் இயல்பாக படம் பிடித்திருக்கிறார்கள்.

ஒரு திகில் படத்திற்கு உண்டான பின்னணி இசையை கே.வெங்கட்பிரபு ஷங்கரும், சி.எஸ்.சாமும் அமைத்திருக்கிறார்கள். சதீஷின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் என்று நிச்சயம் சொல்லலாம். படம் முழுவதுமே திகிலைக் கொடுக்காவிட்டாலும் மூன்று கதைகளில் நம்மை கொஞ்சம் சிரிக்கவும், பயப்படவும் வைத்திருக்கிறார்கள்..  கொஞ்சமேனும் பயப்பட வைத்தமைக்காக இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரீஷிற்கு நமது பாராட்டுக்கள்.

Our Score