நிறைய படங்களில் நடித்து, கொஞ்சம் காசு சேர்த்து, சொத்து சேர்த்து வைத்து பின்னாளில் அவதிப்படாமல் அமைதியாக இருப்போம்ன்ற எண்ணமே இல்லாமல் இதுநாள்வரையில் சம்பாதித்த்தையெல்லாம் கோடம்பாக்கத்தில் இறக்கி ஒரு படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு. இதில் கடைசி நேரத்தில் இவருடன் கூட்டணி சேர்ந்து தயாரிப்பாளர் டைட்டிலில் இடம் பிடித்திருக்கிறார் படத்தின் இயக்குநரான எம்.பி.கோபி.
‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற பெயரில் போர் போடும் வண்டியை வைத்து தொழில் நடத்தி வருகிறார் கஞ்சா கருப்பு. இந்த வண்டியில் வேலை செய்பவர்தான் ஹீரோ மகேஷ். துணைக்கு சில அடிப்பொடிகளும் இருக்கிறார்கள்.
ஹீரோ மகேஷிற்கு அம்மா இல்லை. அப்பாவும், இரண்டு தங்கைகளும் உண்டு. தங்கச்சிகளை வளர்க்கும் பொருட்டு தனக்கு வரப் போகும் மனைவியை தேர்வு செய்ய நினைக்கிறார் மகேஷ். இந்த நேரத்தில் ஒரு லோக்கல் சேனலில் நடக்கும் பட்டின்றத்தில் பேசும் ஹீரோயின் ஆரூஷியின் பேச்சைக் கேட்டதும் அவர் மீது குருட்டுத்தனமாக காதல் கொள்கிறார்.
இந்த நேரத்தில் கஞ்சா கருப்பு தனது கொழுந்தியாள் கல்யாணத்திற்காக வெளியூர் சென்றுவிட.. காதலியைப் பார்க்கப் போகும் ஆர்வத்தில் அவளுடைய ஊருக்குள் வண்டியுடன் போகும் ஹீரோ.. யாரிடமும் அனுமதி கேட்காமல் அந்த ஊரில் அடிபம்ப் போட்டுக் கொடுக்கிறார்.
இந்த புதியஅடிபம்பில் தண்ணி பிடிப்பது தொடர்பாக ஊர்ப் பெண்களுக்கிடையில் ஏற்பட்ட சச்சரவு, பெரிய ஜாதிச் சண்டையாக உருவெடுக்கிறது.. இந்த நேரத்தில் நடந்த அனைத்து களேபரத்திற்கும் காரணம் இந்த வண்டிக்காரனுங்கதான் என்று நினைத்து இவர்களைத் துரத்துகிறார்கள் கிராம மக்கள். இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டி லாரியை வேகமாக ஓட்டியதில் கிராமவாசிகள் பலருக்கும் காயம் ஏற்படுகிறது. கடைசியில் லாரியும், மகேஷும் பிடிபடுகிறார்கள்.
லாரியினால் பாதிக்கப்பட்ட மக்கள் குணமடையும்வரையிலும் லாரியையும், மகேஷையும்விட மறுக்கிறது ஊர்ப் பஞ்சாயத்து.. அதே ஊரிலேயே இருந்து சேவை செய்யும்படி சொல்கிறார்கள். இந்த நேரத்தில் லாரியைக் காணாமல் தவிக்கிறார் கஞ்சா கருப்பு.. ஹீரோ மகேஷ் ஹீரோயினிடம் தனது காதலைச் சொல்லும் நேரத்தில் அந்த ஊரில் காதல் கல்யாணம் என்பதே தடை செய்யப்பட்ட விஷயம் என்பது ஹீரோவுக்குத் தெரிய வருகிறது.. கஞ்சா கருப்பு தனது லாரியை மீட்டாரா..? ஹீரோ மகேஷின் காதல் என்னவானது என்பதுதான் மிச்சம், மீதியான படத்தின் கதை..!
அங்காடி தெரு மகேஷுக்கு இதில் படத்தையே தோளில் சுமக்கும் கேரக்டர்.. ஏதோ இயக்குநர் சொன்ன அளவுக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார். நடன இயக்குநர் மற்றும் சண்டை இயக்குநர் புண்ணியத்தில் அவைகளில் தப்பிக்கிறார். இன்னும் நிறைய கற்க வேண்டும்.. நிறைய நடிக்க வேண்டும்..
புதுமுக கதாநாயகி ஆரூஷி.. ரொம்ப நாள் கழித்து பாவாடை, தாவணியில் தரிசனம் தந்த ஹீரோயின் என்கிற ஒரேயொரு சிறப்போடு முடிக்க வேண்டியிருக்கிறது.. வேறு முக்கியத்துவம் வாய்ந்த நடிப்பெதுவும் படத்தில் இல்லை.. இவர்கள் இருவரையும்விட கொஞ்சம் நடித்திருப்பவர்கள் தீப்பெட்டி கணேசனும், அந்த மொட்டை பாவாவும்தான்..!
கஞ்சா கருப்பு முதலாளியாக வலம் வந்து எப்போதும் போலவே பேசியிருக்கிறார். இன்னும் எத்தனை நாளைக்கு இது போலவே நடித்து காலத்தைக் கடத்தப் போகிறார் என்று தெரியவில்லை.. காமெடிதான் என்பதால் லாஜிக்கெல்லாம் பார்க்கக் கூடாது என்பதால் இவர் மற்றும் இவரது மனைவியான ரகசியா சம்பந்தமான காட்சிகளை ரசித்துவிட்டு எஸ்கேப்பாகிவிடலாம்..! சிங்கமுத்து வரும் அந்த ஒரு காட்சியில் சிங்கமுத்துவும் இவரும் பேசும் ஸ்பீடு டயலாக் டெலிவரியில் காது மொத்தமாக கிழிகிறது.. ஆனாலும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்..
இடைவேளைக்கு பின்பு படத்தில் சொல்லியிருக்கும் விஷயங்கள் ஒரு சீரியஸ் படத்தில் இடம் பெற வேண்டியவை. ஊர்ப் பஞ்சாயத்து என்றாலும் அவர்கள் கொடுக்கும் தண்டனையில் தவறு செய்தவர்களுக்கு கடமையும், பொறுப்புணர்ச்சியும் உண்டு என்பதை இயக்குநர் உணர்த்தியிருக்கிறார். படத்தின் முடிவு நாடகத்தன்மை உடையது என்றாலும் நகைச்சுவை படங்களில் இது தவிர்க்க முடியாதது என்பதால் விட்டுவிடலாம்..!
பல இடங்களில் கலகலப்பு.. சில இடங்களில் சலசலப்பு என்று ஒரு கலவையான வகையில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் எம்.பி.கோபி.
வேல்முருகன் போர்வெல்ஸ் ஊருக்குள்ள வந்தால்.. போர்வெல் போடணும்னா யோசிக்காமல் கூப்பிடுங்க..!