சென்னையை வாரிச் சுருட்டி பாயில் பொட்டலம் போட்டு வைத்துவிட்ட இந்த வடகிழக்கு பருவ மழை, சென்னைவாசிகளை ஒரு விஷயத்தில் ஒன்றுபட வைத்திருக்கிறது.
ஏழை, பணக்காரர் என்கிற பேதமெல்லாம் இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை தற்போது செய்து வருகின்றனர்.
தமிழ்த் திரைப்பட நடிகர்கள் பலரும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக பல லட்சம் ரூபாய்களை வாரி வழங்கியிருக்கிறார். நடிகர்கள் ரஜினிகாந்த், விஷால், கார்த்தி, நாசர், சிம்பு, தனுஷ் என்று பலரும் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.
இதேபோல ஆந்திர நடிகர் அல்லு அர்ஜூன் 25 லட்சத்தை வழங்கியிருக்கிறார். நடிகர் மகேஷ்பாபு 10 லட்சத்தையும், ஜுனியர் என்.டி.ஆர். 10 லட்சத்தையும், ரவிதேஜா 5 லட்சத்தையும், கல்யாண் ராம் 5 லட்சத்தையும் வாரி வழங்கியிருக்கிறார்கள்.
அனைத்து அரசியல் கட்சிகளும் தத்தமது கட்சிகளின் சார்பில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். பல தன்னார்வத் தொண்டு குழுக்களும் களத்தில் இறங்கி மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருப்பதோடு, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை பிறரிடம் இருந்து வாங்கிக் கொடுக்கும் ஒருங்கிணைப்பு வேலையையும் செய்து வருகின்றனர்.
இதே நேரத்தில் சினிமா துறையினரும் தங்களது வசதிக்கேற்ப பல்வேறு உதவிகளைச் செய்தபடியேதான் இருக்கின்றனர்.
வெள்ளப் பாதிப்பு ஊருக்கே தெரிந்த அன்றே அதில் பாதிக்கப்பட்டவர்களில் நடிகர் சித்தார்த்தும் ஒருவர். அவருடைய வீடும் தண்ணீரில் மூழ்கிவிட்டது. இருப்பினும் தனது நண்பரான நடிகர் பாலாஜியின் உதவியோடு பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார். மேலும் அடுத்தடுத்த நாட்களில் மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கியும் வருகிறார்.
இதேபோல நடிகர்கள் விஷாலும், கார்த்தியும் பல்வேறு இடங்களுக்கும் படகுகளில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். நடிகர் விஷாலின் தலைமையில் நடிகர் சங்க நிர்வாகிகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து நிவாரணப் பொருட்களை வாங்கி மக்களுக்கு வழங்கும்விதமாக அறிவிப்புகளைச் செய்து அதை வழங்கியும் வருகிறார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகில் சென்று அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவியுள்ளார்.
நடிகை குஷ்பு தனது காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடன் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்திருக்கிறார்.
நடிகர் மயில்சாமி கடந்த 3 தினங்களாக சாலிகிராம்ம், வடபழனி பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.
நடிகர் மோகன், நடிகை வித்யூ ராமன், நடன இயக்குநர் கலா மாஸ்டர் போன்றோரும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்திருக்கிறார்கள்.
இப்படி திரையுலகத்தினரும் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது திரையுலகத்திற்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது.
இவர்களைப் பார்த்தாவது இன்னும் இருக்கிற ஹீரோக்கள் வெள்ளத்தில் கால் வைப்பார்களா என்று பார்ப்போம்..?!












