full screen background image

“தீயசக்திகளிடம் விலைபோய்விட்டார் கமல்ஹாசன்…” – ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு..!

“தீயசக்திகளிடம் விலைபோய்விட்டார் கமல்ஹாசன்…” – ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு..!

நடிகர் கமல்ஹாசனிடம் தமிழக அரசு எவ்வித யாசகமும் கேட்கவில்லை என்றும், தேவையற்ற கருத்துகளை தெரிவித்து மலிவான விளம்பரத்தை கமல்ஹாசன் தேடுகிறார் என்றும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

actor kamalhasan

நடிகர் கமல்ஹாசன் மக்களின் வரிப்பணம் என்ன ஆனது..? ஏன் முன்பேயே வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் பணிகள் நடைபெறவில்லை என்று நேற்று ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பதில் கூறியிருக்கிறார்.

அது இங்கே :

“கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கனமழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்ட மக்களைக் காப்பாற்றி, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு எனும் முப்பரிமாணத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார். 

இந்த அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாக கொண்டு செயல்படும் ஜெயலலிதா அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருக்க வேண்டியதை விடுத்து, உள்ளிருந்து கொல்லும் நோய்போல, நடிகர் கமல்ஹாசன், தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிர்வாகம் செயல் இழந்துவிட்டதாகவும், நிவாரண நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், நிவாரணப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப் பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான கருத்துகளை இணையதளம் ஒன்றுக்கு பேட்டியாக அளித்துள்ளதாக 4.12.2015 அன்று ஓரிரு நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது. 

எதையும் சரியாக புரிந்துகொண்டு தெளிவாக பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், இந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இப்படி தரமற்ற முறையில் பேட்டி அளிப்பதற்கு முன்பாக, 1918-ம் ஆண்டிற்குப் பிறகு இதுபோன்ற கனமழை பெய்யவில்லை என்பதையும், ஒரே நாளில் 40 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்து, இந்தப் பருவம் முழுவதும் பெய்யும் மழையைவிட பல மடங்கு கூடுதலான மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்தது என்பதையும் கமல்ஹாசன் தெரிந்து கொள்ளாமலேயே, தனது விதண்டாவாதக் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

கமல்ஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு.

எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.

அதைத்தான் ஜெயலலிதா தற்போது சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். கடந்த நவம்பர் மாதம், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், பெருமழை பெய்து பாதிப்பினை ஏற்படுத்திய நேரத்தில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று, நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், என்னையும், அமைச்சர்கள் அனைவரையும், அரசின் உயர் அதிகாரிகளையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளச் செய்தார்.

போர்க்கால நடவடிக்கைகள் ஜெயலலிதா அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சமயத்தில், அரசு நிர்வாகம் செயலற்று போனதாக கமல்ஹாசன் தெரிவித்திருப்பது என்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களையே அவமதிக்கும் செயல். 

இந்த இயற்கைச் சீற்றத்தினை வெற்றிகொள்ளும் வகையில் ஜெயலலிதா அரசு, போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறித்து அவர் தெரிந்தும், தெரியாததுபோல் நடித்துள்ளார். அதனால்தான் மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனமழை பெய்த பாதிப்பில் மக்கள் கடுமையாக அவதியுறும் நேரத்தில், அவர்களுக்கு உதவ மனமில்லாமல், எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று அரசியல் சுயநலத்துடன் செயல்படும் சமுதாயப் புல்லுருவிகளின் கைப்பாவையாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்பதையே அவரது வாய்மொழி வெளிக்காட்டுகிறது.

மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப் பணம் தமிழக அரசால் தவறாக கையாளப்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கி, அரசுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் அரசியல் சுயலாபம் பெற வேண்டும் என்று முனையும் தீயசக்திக்கு கமல்ஹாசன் விலைபோய்விட்டாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்று கமல்ஹாசன் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஜெயலலிதா அரசின் கடந்த 4 ஆண்டுகளின் வரவு செலவுத் திட்ட அறிக்கைகளை தனது படப்பிடிப்புகளுக்கிடையே சற்று நேரம் ஒதுக்கி, அவர் படித்துப் பார்த்திருக்க வேண்டும்.

கல்வி, மக்கள் நல்வாழ்வு, சாலை வசதி மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை உள்பட பல்வேறு முக்கியமான துறைகளில் கணிசமான அளவிற்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், அத்தகைய திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்துவதற்கான முன்னுதாரணமான மாநிலமாக தமிழகத்தினை ஜெயலலிதா முன்னேற்றமடையச் செய்துள்ளார் என்பதை இந்தியத் திருநாடே உணர்ந்து பாராட்டிக் கொண்டிருப்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு ஏன்? 2015-2016-ல் மாநில பேரிடர் நிவாரணத்திற்கு ஒதுக்கப்பட்ட 679 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம்தான், தற்போது செலவிடப்பட்டு வருகிறது. ஆகவே, வரிப் பணம் எங்கே போகிறது என்ற சந்தேகம் கமல்ஹாசனுக்கு எழ வேண்டிய அவசியமே இல்லை. தமிழக மக்களின் வரிப் பணம் ஒரு ரூபாய்கூட வீணாகச் செலவழிக்கப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, அந்த ஒவ்வொரு ரூபாயும் பயனுள்ள வகையில் மக்கள் நலப்பணிகளுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருபவர் ஜெயலலிதா.

கார்ப்பரேட் திட்டத்திற்கு 4,000 கோடி ரூபாய் வரை செலவிட முடிவதாகவும், அந்த பணத்தை நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் ஏன் பிரித்துக்கொடுக்கக்கூடாது என்றும் கமல்ஹாசன் அறிவுஜீவி போன்று ஒரு வினா எழுப்பியுள்ளார். இந்த வினாவை அவர் மத்திய அரசை பார்த்து எழுப்பியுள்ளார் போலும். அதை ஏன் இப்போது கேட்கிறார் என்று புரியவில்லை. மத்திய அரசின் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. ஒருவேளை, சினிமாத்துறையின் மீது மத்திய அரசு விதித்த சேவை வரி தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற கோபமோ, என்னவோ! அந்தக் கோபத்தை தமிழ்நாட்டின் மீது காட்டி, தமிழக மக்களை குழப்ப வேண்டாம் என்று அவரை நான் கேட்டுக் கொள்கிறேன்.

கமல்ஹாசன் தனது ஒட்டுமொத்த சொத்துகளையும் கொட்டி எடுத்ததாகச் சொல்லும் ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதில் அடுக்கடுக்கான சிக்கல்களை அவர் சந்தித்த நேரத்தில் சுய லாபத்திற்காக, தமிழ்நாட்டை விட்டும், இந்தியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமல்ஹாசன். அப்போது, அந்தப் பிரச்சினையை தீர்த்துவைத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி கூறியதை மறந்து விட்டு, தற்போது அவர் பேட்டி அளித்திருக்கிறார்.

தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 25 லட்ச ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்து, தனது டுவிட்டர் தளத்தில், இன்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது, தான் 18 வருடங்கள் வாழ்ந்த சென்னை என்றும், சென்னையை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார். தமிழனின் பண்பாடே, யாரிடமும் யாசிக்காமல் இருப்பதும், தானமாகக் கொடுப்பதை மறுதலிப்பதும்தான். 

அத்தகைய தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய் திகழும் ஜெயலலிதா அரசு, கமல்ஹாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை. ஆனால், அரசு நிவாரண நிதி கேட்பதாகவும், தான் மக்களை நேசிப்பதால் உதவி வழங்குவதாகவும் தேவையற்ற கருத்துகளை அவர் தெரிவித்து இருப்பது மலிவான வகையில் விளம்பரம் தேடுவதற்கான முயற்சியே. 

இந்த வகை விளம்பரத்திற்காகத்தான், கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு 12 லட்ச ரூபாய் உதவி வழங்குவதாக அவர் தெரிவித்தாரா? உண்மையிலேயே அந்த உதவியை அவர் வழங்கினாரா? யாரிடம் வழங்கினார் என்பதை அவரால் தெரிவிக்க இயலுமா?

இதேபோன்றுதான், அவர் சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்ததற்காக கிடைத்த பல கோடி ரூபாயை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், அவ்வாறு எந்த உதவியையும் அவர் வழங்கவில்லை என மறுப்பு வெளியிட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கமல்ஹாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரிய, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக்கொண்டிருக்க முடியாது. ஜெயலலிதா மீது முழு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள தமிழக மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Our Score