full screen background image

அன்பே டயானா – சினிமா விமர்சனம் 

அன்பே டயானா – சினிமா விமர்சனம் 

நடிகர், நடிகையர்கள் :-

பாரி இளவழகன் – சிருமாமில்ல சீதா கிருஷ்ணா
ரம்யா ரங்கநாதன் – மேஜிக் கோன்சால்வ்ஸ்
சேத்தன் – சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர்
ரோஜா செல்வமணி- சரளா
பரிதாபங்கள் கோபி – பெங்களூர் பாபா
செல் முருகன் – மங்கபாபு
நிகிலா சங்கர் – தனிஷா
இஸ்மத் பானு – சத்தியவதி
சுதர்சன் காந்தி – சிருமாமில்ல சிரஞ்சீவி சங்கர்
தொழில் நுட்பக் குழு:
பேனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ், ஈரா என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்கள்: சத்யா கரிகாலன், ஈரா சரவணன், யுவராஜ் கணேசன்
எழுதி, இயக்கி, நிகழ்த்தியவர்: பாரி இளவழகன்
இசை: பரத் சங்கர்
ஓளிப்பதிவு:  ஷெல்லி கேலிஸ்ட்
படத்தொகுப்பு : பார்த்தா எம்ஏ
கலை இயக்குனர்: மகேந்திரன்
இணை தயாரிப்பாளர்: டி நரேன்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள்: ஷாஜன் கவிதா, விவேக் சுவாமிநாதன் ஆர்
நிர்வாக தயாரிப்பாளர்: அஜித்குமார் நடராஜன்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: குட் நைட் ஆர் நாகராஜன்
தயாரிப்பு நிர்வாகி: எஸ் மணிகண்டன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: பாபா மணி
ஒலி வடிவமைப்பு – கலவை: டி உதய் குமார் (ஒலி அதிர்வு)
ஒலி வடிவமைப்பு: ரஞ்சித் வேணுகோபால், சரவண குமார்
ஆடை வடிவமைப்பாளர்: அபிநந்தினி எம்
தலைமை ஒப்பனை கலைஞர்: எஃப். சசி குமார்
சண்டைக் காட்சி: டான் அசோக்
ஸ்டில்ஸ்: வி பாலாஜி
பத்திரிக்கை தொடர்பு : யுவராஜ்

சென்னையில் வடசென்னையை தாண்டி இருக்கும் பெரம்பூர் பகுதியில் ஆங்கிலோ இந்தியன்ஸ் சமூகத்தினரும், தெலுங்கை தாய் மொழியாக கொண்ட மக்களும் அதிகமாக வாழ்கிறார்கள்.

 அதில் தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோவும், ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோயினும் காதலிக்கிறார்கள். அவர்களுடைய காதல் ஜெயித்ததா இல்லையா என்பதுதான் இந்த அன்பே டயானா’ திரைப்படம்.

 ஹீரோவான சிறுமாமில்ல சீதா கிருஷ்ணா என்ற பாரி இளவழகன் ஸ்போர்ட்ஸ் டீச்சராக வேலை செய்கிறார். அதலெடிக்ஸில் ஆர்வமுள்ள மாணவர், மாணிவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

 இவருடைய தந்தையான சேத்தன் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஹீரோவின் அம்மாவான ரோஜா சாதி பிடிப்பில் வாழ்பவர். பிள்ளைகளுக்கு சொந்த ஜாதியில் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கொள்கையும் உடையவர். அந்த வீட்டில் இந்த அம்மாவின் ஆட்சிதான் நடக்கிறது.

 ஹீரோவுக்கு ஒரு அக்கா உண்டு. அந்த அக்காவுக்கு கல்யாணம் ஆகி புகுந்த வீட்டில் மாமியார் தொல்லை தாங்காமல் பிறந்த வீட்டுக்கே வந்திருக்கிறார். ஹீரோவின் தம்பியான சிறுமாமில்ல சிரஞ்சீவி சங்கர் என்ற சுதர்சன் காந்தி அரசு வேலையில் இருக்கிறான்.

ஹீரோ ஹீரோயினான மேஜிக் கோன்சால்வ்ஸை காதலிக்கும் விஷயத்தை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைக்கிறார். ஆனால் வீட்டில் ரோஜா தன்னுடைய தம்பி மகளை தனக்கு மருமளாக ஆக்கிக் கொள்ள துடியாய் துடிக்கிறார். நிச்சயதார்த்தமும் நடந்து விடுகிறது.

இன்னொரு பக்கம் மேஜிக்குடனான காதலை என்ன செய்வது என்பது தெரியாத ஒரு குழப்பத்தில் இருக்கிறார் ஹீரோ. ஹீரோவின் இணை பிரியாத நண்பனான பெங்களூர் பாபா என்ற பரிதாபங்கள் கோபி தன்னுடைய சின்ன சின்ன டிராமா மூலமாக இந்த காதலை வளர்த்துக் கொண்டே போகிறார். ஹீரோவின் அப்பாவான சேத்தனும் தன் பங்குக்கு கடைசி நிமிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த ஹீரோவின் திருமணமே நின்று போகிறது.

இதன் பின்பு என்ன நடந்தது? ஹீரோவுக்கு கல்யாணம் நடந்ததா? இல்லையா? யார் அவருடைய மணப்பெண்?.. என்ற இந்த குடும்ப திரைப்படம் இடைவேளைக்கு பின்பு  நகைச்சுவையினால் தெறிக்க வைக்கிறது.

ஜமா’ என்ற மறக்க முடியாத ஒரு திரைப்படத்தை கொடுத்த பாரி இளவழகன்தான் இந்த படத்தில் தான் ஹீரோவாக நடித்து படத்தையும் எழுதி, இயக்கிருக்கிறார். நடிப்பிலும் ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு தன்னுடைய நடிப்பை அனைவரும் ரசிக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார் பாரி.

அம்மாவுக்கு எப்போதும் பயப்படுவது.. வயதான அப்பாவை வாடா போடா என்றும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார். காதலியிடம் காதலை சொல்வது கட தைரியம் இல்லாமல் சுற்றி விலைக்கு சொல்லும் அளவுக்கு தைரியம் இல்லாதவராக காட்டப்பட்டிருக்கும் பாரி கடைசிவரையிலும் அதே போலவே நடித்திருக்கிறார்.

இடையே வீட்டில் நடைபெறும் குட்டி கலாட்டாக்களிலும் ஹீரோயினின் கோபத்தை எதிர்கொள்ளும் காட்சிகளிலும் ஓகே என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார் பாரி.

ஆங்கிலோ இந்தியப் பெண்ணான மேஜிக் கோன் சால்வ்ஸ் கேரக்டரில் நடித்திருக்கும் ரம்யா ரங்கநாதன் இந்தப் படத்தை முழுமையாகத் தாங்கி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மிக அழகான முகம். அற்புதமான நடிப்பினை கொடுத்திருக்கிறார் சென்னை தமிழில் ஆங்கிலமும் கலந்து பேசும் ஆங்கிலம் இந்தியர்கள் எப்படி பேசுவார்களோ அதே போல ஒரு மில்லி மீட்டர்கூட குறையாமல் அழகாக பேசி நடித்திருக்கிறார்.

ஹீரோ பாரி ஒரு கவிதை சொல்லி தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் போதும் அதை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்கிற ஒரு குழப்பத்தையும் அவருடைய முகமே வசனம் பேசாமலேயே நமக்கு அந்த காட்சியின் முடிவைச் சொல்லிவிட்டது.

அதற்கு பின்பு அந்த காதலை நீடித்து நிலைக்க வைப்பதற்காக அவருடைய வீட்டில் நடக்கும் காட்சிகளிலும், பயந்தாங்கோலியாக இருக்கும் தன்னுடைய காதலனை அவர் மிரட்டுகின்ற இடங்களிலும் ஒரு அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் ரம்யா.

நாயகனின் தந்தை ஆக நடித்திருக்கும் சேர்த்தனுக்கு இந்தப் படம் ஒரு மிகப் பெரிய ஜாக்பாட் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

தன்னுடைய நண்பர்களுடன் கோபம் கொண்டு ஒரு ஆங்கில இந்திய பெண்ணை என் வீட்டுக்கு மருமகளை கொண்டு வருகிறேன் என்று சவால் விடும்போதும், வீட்டில் மனைவியை எதிர்த்து எதுவும் பேசாமல் அடக்கமாக இருப்பவர்.. மாலையில் தண்ணியை போட்டுவிட்டு வந்து மனைவியை சலம்பல் செய்யும்பொழுது நிறைய கை தட்டல்கள் அவருக்கு கிடைத்திருக்கின்றன.

இன்னொரு பக்கம் மனைவியை எதிர்த்து அவர் பேசுகின்ற ஒரு காட்சியிலும், கட்டப் பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் அவர் போடுகின்ற பொங்கலும் நிஜமாகவே நம்மை கை தட்ட வைத்துவிட்டது.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் ரோஜா, ஹீரோவின் அம்மாவாக இந்த படத்தில் நடித்திருகிறார். தம்பி சாதிப் பிடிப்பை காட்டுகின்ற இடத்திலும் தான் யாரையெல்லாம் சொந்தக்காரர்கள் என்று நினைத்து பெருமையோடு பார்த்தவர்கள் எல்லாம் சாதி எல்லாம் இப்போது தேவையில்லை.. பணம்தான் முக்கியம் என்பதை காட்டும்போது அவர் அடையும் அதிர்ச்சி நடிப்பை வெகுவாக்க் காட்டியிருக்கிறார்.

உண்மை தெரிந்து சாதிக்கு எதிராக பொங்குகின்ற நேரத்திலும் ரோஜா ரொம்பவும் சிறப்பான நடிப்பை காண்பித்து இருக்கிறார். அவருடைய தோற்றமே ஒரு கண்டிப்பா அம்மா என்பது போலவே இருப்பதும் அவருக்கு இருக்கும் பிளஸ் பாயிண்ட். கூடவே அவர் வசனங்களை உச்சரிக்கின்றவிதமும் அழகு.

ஹீரோவின் நண்பனாக நடித்திருக்கும் பெங்களூர் பாபா என்ற பரிதாபங்கள் கோபி, படம் முழுவதும் வலம் வந்து பல சிறு சிரிப்புலகை எழுப்புவதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறார்.

மார்வாடி தமிழ் பேச்சை கலந்து ரொம்பவும் வித்தியாசமானதாகவும், ரசிக்கும்படியாகவும் அவர் பேசுகின்ற வசனங்கள் மூலம் நம்மை பெருமளவுக்கு சிரிக்க வைத்திருக்கிறார். அவர் கொடுக்கும் சின்ன சின்ன கவுண்ட்டர் டயலாக்குகள் பெரிதும் நம்மை சிரிக்க வைக்கிறது. கிளைமாக்ஸில் அவருடைய குட்டு உடையும்போது கோபி காட்டுகின்ற ரியாக்சன்தான் இந்த படத்தில் வெடி சிரிப்பை கொடுத்திருக்கிறது.

இன்னொரு பக்கம் சில காட்சிகளே ஆனாலும் விவேக்கின் சீடரான செல் முருகன் ஹீரோயின் தாய் மாமனாக வந்து சிரிக்க வைத்திருக்கிறார். இவரது மகளாக நடித்திருக்கும் நிகிலா சங்கரும் கிளைமாக்ஸ் இல் நமக்கு ஒரு மிகப் பெரிய வெடி சிரிப்பை காண்பிக்க உதவி இருக்கிறார்.

மேலும் ஹீரோயினின் அக்காவாக நடித்திருக்கும் இஸ்மத் பானு எல்லா குடும்பங்களிலும் இருக்கும் மாமியார் மருமகள் சண்டையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் அதே சமயம் இவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு வழியையும் நேர்மையான முறையில் அவரை வைத்து இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதற்கு இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.

மேலும் படத்தில் நடித்திருக்கும் இணைய கதாபாத்திரங்களும் இயக்குநரின் சிறப்பான இயக்கத்தினால் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் செல்லி கேலிஸ்ட் தனது தனித்த திறமையால் படம் முழுவதையும் அழகாக கொடுத்திருக்கிறார். அவ்வப்பொழுது கிரேன் ஷாட் மூலமாக பெரம்பூர் ஏரியாவையே விஸ்தாரமாக காட்டியிருக்கிறார் ஹீரோயின் அழகை பல்வேறு கோணங்களிலும் படம் பிடித்து இளைஞர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறார். வீட்டுக்குள்ளேயே நடக்கின்ற பல சம்பவங்களை வேறு வேறு கோணங்களில் படம் பிடித்து நம்மை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளரான பரத் சங்கர் தன்னுடைய பாடல்கள் மூலமாக இந்தப் படத்தை நகர்த்த பெரிதும் உதவி இருக்கிறார். அவர் கொடுத்த பாடல்கள் முழுவதிலும் மாண்டேஜ் ஷாட்களாக செல்வதால் உண்மையில்  பாடல்கள் எந்த விதத்திலும் நமக்கு குறுத்தலாக இல்லை.

அதேபோல் பின்னணி இசையும், நகைச்சுவை வருகின்ற இடங்களில் நகைச்சுவையை நமக்குள் தூண்டி விடுவதுபோல இசையை அமைத்திருக்கிறார். இன்னொரு பக்கம் சோகமான காட்சிகளிலும் எமோஷன் செல்லும் அவர்களின் உணர்வு படம் பார்ப்போரை எளிதாக அடைவது போல இருக்கிறது.

கலை இயக்குநரான மகேந்திரன் அரங்கம் அமைக்கும் வேலையில் தன்னுடைய திறமையை காட்டி இருக்கிறார். யார் இந்த கலைஞர் என்று கேட்கவும் வைத்திருக்கிறார். ஹீரோவின் வீட்டை வடிவமைத்தவர் ஆங்கில இந்தியன்ஸ் வீட்டை காண்பிக்கின்ற விதத்திலும் குறைந்த பட்ஜெட்டாக இருந்தாலும் நிஜமான வீடு போல நம்மை நம்ப வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

படத்தின் தொகுப்பாளரான பார்த்தா இந்தப் படம் காமெடி கலந்த காதல் திரைப்படம் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல காட்சிகளையும் கச்சிதமாக நறுக்கி… காதல் காட்சிகளில் ஹீரோயினுக்கு காதல் வருவதற்கான சூழ்நிலையை உணர்த்துவது போலவே அடுத்தடுத்த காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

2004-ல் நடப்பது போல இந்தப் படத்தை எடுத்திருப்பதால் சில வசனங்கள் அந்தக் காலத்திய சமூக வாழ்வுக்கு ஏற்றார் போல அமைந்திருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய மகனுக்காக அவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொண்டு ரோஜா செயல்படும் தருணத்தில் ஒரு நல்லதொரு குடும்ப படத்திற்கான கிளைமாக்ஸை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் என்று பாராட்ட தோன்றுகிறது.

தன்னுடைய முதல் படமான ‘ஜமா’ என்ற படத்தின் மூலமாக கூத்துக் கலைகளில் ஈடுபட்டிருக்கும் ஏழை கலைஞர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அரசின் கண்பார்வைக்கு போகும் அளவுக்கு அழகாக இயக்கி தந்திருக்கிறார்.

இப்போது இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை அம்சத்தில் ஒரு காதல் மையமாக வைத்து காதலுக்கு ஜே என்று சொல்வது போல இந்தப் படத்தையும் கொடுத்திருக்கிறார்.

காதலனுக்கு இருக்கும் தயக்கம்.. காதலிக்கு இருக்கும் தயக்கம்.. அப்பாவுக்கு இருக்கும் தயக்கம்.. எப்படி படத்தின் முக்கிய கதை பாத்திரங்களில் கேரக்டர் ஸ்கெட்ச்சுகள்தான் இந்தப் படத்தை நகர்த்துகின்றன என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்கர்.

காதலில் முதலில் தெரிய வேண்டியது பரஸ்பரமான நம்பிக்கைதான், அதே சமயம் காதல் தோல்வி என்பது ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்கிறார்கள் அல்லது துரோகம் செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

அது மாதிரியான திரைக்கதைகளில் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற கான்செப்ட்டில் இருக்க வேண்டும். யார், யாரை திருமணம் செய்தால் என்ன? இனி வரும் காலங்களில் இளையவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பது அவருடைய குடும்பத்திற்குத்தான் பிரச்சனையாகும். அதனால் காதலர்களையும், காதலையும் ஆதரித்து வெளியே திருமணம் செய்து வைப்பதுதான் பெற்றோர்களுக்கு நல்லது என்பதை இந்தப் படத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் பாரி.

மிகப் பெரிய பணக்கார குடும்பத்தின் கதையாக இருந்தால் திரைக்கதையை இப்படி அமைத்திருக்க முடியாது. சாதாரண நடுத்தர குடும்பம் என்பதை காட்டி தியேட்டருக்கு வரும் அத்தனை குடும்பத்தினரும், தங்களுடைய குடும்பத்தோடு ஒப்பிட்டு கொண்டு பார்த்து ரசிக்கும்படியாக இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாரி.

 அவருக்கு நமது பாராட்டுக்கள்.

 RATING : 4 / 5

Our Score