‘அம்புலி 3-D’, ‘ஆ’ படங்களின் வெற்றிகளை தொடர்ந்து இயக்குனர் இரட்டையர்களான ஹரி-ஹரீஷ் இயக்கும் புதிய படம் ‘ஜம்போ 3-D’.
MSG மூவீஸ் சார்பில் ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஒகிடா இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். இதில் கோகுல், அஞ்சனா கீர்த்தி, பேபி ஹம்சிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதாநாயகியான அஞ்சனா கீர்த்தி தனது ‘ஜம்போ’ பட அனுபவம் பற்றி கூறுகையில், “இப்படத்தில் வேலை செய்தது எனக்கு பல அருமையான அனுபவங்களை தந்தது. இயக்குனர்கள் ஹரி – ஹரீஷ் உடன் பணிபுரிவது மிக இனிதான ஒன்றாய் அமைந்தது. இவர்கள் இருவரும் வேகமாகவும், விவேகமாகவும் வேலை செய்ய கூடியவர்கள்.
படத்தின் ஒரு காட்சியில் நான் ஜப்பான் பதுமையாக நடிக்க வேண்டியிருந்தது. எனக்கு கண் இமைக்காமல், சலனமற்ற பொம்மையாக அசைவில்லாமல் நடிக்க சொல்லி கொடுத்தார்.
இந்தப் படத்தின் 90 சதவிகிதக் காட்சிகள் ஜப்பானின் டோக்கியோ, டோயாமா போன்ற நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. டோக்கியோ தமிழ் சங்கத்தினர் எங்களை கனிவாய் வரவேற்று உபசரித்தனர்.
ஒரு நாள் தனியாக ஷாப்பிங் சென்றபொழுது ஜப்பானிய மொழியில் எழுதி வைத்திருந்த விலாசத்தை தொலைத்துவிட்டேன். ஒரு ஜப்பானிய டாக்ஸி ஓட்டுனர் அந்த நேரத்தில் எனக்கு உதவி புரிந்தார். நான் இந்தியாவை சேர்ந்தவள் என்றவுடன் ரஜினிகாந்தை பற்றி கேட்டார். தமிழிலும் பேசினார்..
இந்தப் படத்திற்காக ஜப்பானிய நடிகர் நடிகைகளுடன் நடித்தோம். ஜப்பான் பத்திரிக்கைகளில் எங்களை பற்றி செய்திகள் வந்தது மிகவும் பெருமையாக இருந்தது. நகைச்சுவைமிக்க 3D படமாய் உருவாகி வரும் இப்படம் குழந்தைகளை மிகவும் கவரும்..” என்றார் அஞ்சனா.











