‘காமெடி கிங்’ கவுண்டமணி நடிக்கும் புதிய படத்தின் பெயரே மிக, மிக வித்தியாசமாக இருக்கிறது. ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ – இதுதான் படத்தின் படத்தின் தலைப்பு.
ஏற்கெனவே கவுண்டமணி தற்போது ‘வாய்மை’, ’49-ஓ’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவை இரண்டுமே ரிலீஸுக்கு தயார் நிலையில் இருக்கின்றன. பெரிய பட்ஜெட் படங்களெல்லாம் ஓடி முடிந்தவுடன் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கின்றன.
இந்த நேரத்தில் கவுண்டமணியை சந்தித்த ஒரு புதுமுக இயக்குநர் அவரிடத்தில் கதை சொல்லி சபாஷ் பெற்று ஒப்புதலும் வாங்கியிருப்பது ஆச்சரியமானது.
இயக்குநர் சுசீந்திரனிடத்தில் உதவி இயக்குநராக இருந்த கணபதி பாலமுருகன் என்பவர்தான் அந்த இயக்குநர்.
படம் பற்றி சொல்லிய கணபதி பாலமுருகன், “நகைச்சுவை உலகில் கொடி கட்டிப் பறக்கும் கவுண்டமணி தற்போது அவருக்குப் பொருத்தமான நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி அவர் கதை கேட்டு பிடித்துப் போய் நடிக்க ஒப்புக் கொண்ட படம் என்னுடையது.
இதில் சினிமா படப்பிடிப்புத் தளங்களில் பயன்படுத்தப்படும் கேரவன் வேன்களை வாடகைக்கு விடும் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடிக்கவுள்ளார். அவர் சென்னையில் இருந்து மதுரைவரை செல்லும் பயணத்தின் சுவாரஸ்யமான சம்பவங்களே இந்தப் படத்தின் கதை. சென்னை, திருச்சி, மதுரை ராமநாதபுரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த தி்டடமிடப்பட்டுள்ளது..” என்றார்.