full screen background image

என்ன விலை – சினிமா விமர்சனம்

என்ன விலை – சினிமா விமர்சனம்

“ஜனநாயகம் கிலோ என்ன விலை?” என்ற கேள்வியை எழுப்பி பல திரைப்படங்கள் இதற்கு முன்பாக வந்திருக்கின்றன.

இப்போது முதல்முறையாக “இந்த இந்திய திருநாட்டில் ஒரு தனி மனிதனின் மானத்திற்கு என்ன விலை?!” என்ற கேள்வியை ஒரு சாமானியன் நீதிமன்றத்தில் எழுப்பி இருக்கிறார்.

அந்த சாமானியனின் இந்த அறைகூவலுக்கு என்ன காரணம் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. 

ஒரு எளிய மனிதனான கருணாஸ் ராமேஸ்வரத்தில் தன்னுடைய மனைவி, பிள்ளைகள், தங்கை இவர்களுடன் சாதாரணமான எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் முன்னோர்களுக்கு திவசம் செய்துவிட்டு பக்தர்கள் நாணயங்களை கடலில் வீசிவிட்டு செல்கிறார்கள்.

அந்த நாணயங்களை கடலுக்குள் மூழ்கி தேடி எடுத்து அதையே ஒரு தொழிலாகவும் நடத்தி இந்த நாணய தேடலிலேயே பிழைப்பை நடத்தி வருகிறார் கருணாஸ். 

அப்படி ஒரு நாள் கடலுக்குள் நாணயங்களை அவர் பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய கையில் ஒரு பதக்கம் சிக்குகிறது.

பணமாக இருந்தால் கொண்டு சென்றுவிடலாம். ஆனால் விலை உயர்ந்த பதக்கமாக இருப்பதால் இதை அரசிடம் ஒப்படைப்பதுதான் நியாயமானது என்று நினைத்த சாமானியன் கருணாஸ் அதை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஒப்படைக்கிறார். இங்குதான் அவரது தலை எழுத்து மாறுகிறது. 

ஸ்டேஷனில் இருக்கும் காவலர்கள் இருவர் அந்தப் பதக்கத்தை கருணாசிடமிருந்து கைப்பற்றி தாங்களே வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் கருணாஸ் அவர்கள் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விடுகிறார். 

இதனால் கோபமடையும் அந்த காவலர்கள் கருணாசை கோவில் நகையைத் திருடிவிட்டார் என்று ஒரு பொய் வழக்கில் சிக்க வைக்கிறார்கள். இதிலும் கருணாஸ் தப்பி விடுகிறார். 

இதனால் இன்னும் கோபமான அந்த கடமை தவறாத காவலர்கள், ஒரு திருட்டு வழக்கில் கருணாஸை சிக்க வைத்து அவரை ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறார்கள். 

செய்யாத குற்றத்திற்காக ஜெயிலுக்கு சென்ற கருணாஸ் ஜெயகலுக்கு வந்ததைவிடவும் ஒரு பொய் வழக்கில் அதுவும் திருட்டு வழக்கில் கைதியானதை நினைத்து மன வேதனைப்படுகிறார். 

இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தன்னுடைய வழக்கறிஞர் நிமிஷா சஜயனை வைத்து தனக்கான நீதியை கேட்கிறார்.

அவருடைய ஒரே ஒரு கேள்வி… “இந்த நாட்டில் ஒரு சாமானிய மனிதனுக்கு மானம் இல்லையா? ஒரு பொய் வழக்கில் ஒருவனை கைது செய்தால் அவனது மானம் பறிபோனதாகத்தானே அர்த்தம்?! அதற்கு இந்த நாடும், இந்த சட்டமும், அரசும், நீதிமன்றங்களும் என்ன இழப்பீடு தரப் போகின்றன?!” என்ற ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார்.

இந்தக் கேள்விக்கு அந்த நீதிமன்றம் என்ன பதில் சொன்னது? கருணாஸூக்கான நீதி கிடைத்ததா? அவருடைய மானத்திற்கு என்ன விலையை அரசு கொடுத்தது? என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு சுவையான திரைக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருணாஸ் தன்னால் முடிந்த அளவுக்கு இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒரு அப்பாவித்தனமான இந்தியனாக போலீஸ் ஸ்டேஷனுக்குள் காலடி எடுத்து வைத்த உடன்… சட்டத்தின் முன்பாக.. காவலர்களின் முன்பாக… தான் ஒரு அடிமை என்பதை அவர் உணர்கின்ற அந்தக் கட்டத்தில் தன்னுடைய நடிப்பை ரசிக்கும்வகையில் கொடுத்திருக்கிறார். 

அதோடு நீதிமன்ற வாதங்களின் போதும் தான் அவமானப்பட்டதற்கான விளக்கத்தையும் நீதி, நியாயத்தையும் அவர் கேட்கின்ற பொழுதும் ஒரு சாமானியர் எந்த அளவுக்கு போராடுவானோ அதை ரசிகர்களுக்கும் கடத்தி இருக்கிறார்.

அந்த வகையில் கருணாஸின் நடிப்பு இந்தப் படத்திற்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய பலம். ஆனால் தமிழ் சினிமாவில் கருணாஸ் என்ற நடிகருக்கென்று தனியாக வியாபாரமே இல்லை என்பதுதான் உண்மை. கருணாசை வைத்து இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்த அந்த தயாரிப்பாளர்களுக்கு நமது கோடான கோடி நன்றி!

வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நிமிஷா சஜயன் முதன்முதலாக தன் சொந்த குரலில் பேசி இருக்கிறார். நீதிமன்ற காட்சிகளில், உணர்வுப்பூர்வமான வசனங்களைப் பேசி நடித்திருக்கும் நிமிஷா சஜயன், தனது வசன உச்சரிப்பின் மூலமும், கண்கள் காட்டும் அபாரமான நடிப்பின் மூலமும் நீதிமன்றக் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார்.

கருணாஸின் மனைவியாக நடித்திருக்கும் விஜயலஷ்மி வீரமணி, தங்கையாக நடித்திருக்கும் சாஷா இருவரும் அவரவர் கேரக்டர்களுக்கேற்ற இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். 

வில்லன்களாக நடித்திருக்கும் காவலர்கள் மோகன்ராமும், தட்சனும் ஒரு சாதாரண கான்ஸ்டபிள்கள் நினைத்தாலே ஒரு பாமரனின் வாழ்க்கையை குழி தோண்டி புதைத்து விடலாம் என்பதை தங்களுடைய நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார்கள்.

மேலும் வக்கீல்களாக நடித்திருக்கும் கவிதாலயா கிருஷ்ணன் சுவாமிநாதன் மற்றும் நீதிபதிகளாக நடித்திருக்கும் பூர்ணிமா பாக்யராஜ், டி.எஸ்.ஆர்.சீனிவாசன், நிழல்கள் ரவி மற்றும் பலரும் படத்தின் தன்மைக்கேற்ப தங்களுடைய நடிப்பை அளவாகவும், அழகாகவும் கொடுத்திருக்கிறார்கள்.

சின்ன பட்ஜெட் படம் என்றாலும், ராமேஸ்வரத்தின் அழகை பதிவு செய்வதில் குறையில்லாமல் செய்திருக்கிறார் ஒலிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி.

கடலுக்குள் மூழ்கி நாணயங்களை எடுப்பது சாதாரண விஷயம் அல்ல என்பதை சுட்டிக்காட்டுவது போல ஆரம்பக் காட்சிகள் இருந்தாலும் அதை இன்னமும் சிறப்பாக காட்டியிருக்கலாம்.

நீதிமன்ற காட்சிகள், வாக்குவாதங்கள், விசாரணைகளின்போது நடிகர் நடிகைகளின் குளோசப் காட்சிகளை வைத்து நம் மனதில் இடம் பிடிப்பது போல படமாக்கி இருக்கிறார். 

இசையமைப்பாளர் சாம், சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கு மட்டுமே பின்னணி இசையை அசத்தலாக கொடுப்பவர், இந்தப் படத்திற்கு கொஞ்சம் அடக்கி வாசித்து கதையின் தன்மைக்கு ஏற்ப பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்.

மிக அதிகமாக நீதிமன்ற காட்சிகள் இருப்பதால் கொஞ்சமும் போர் அடிக்காமல் போகும் வகையில் காட்சிகளை வரிசைப்படுத்தியும் படத்தை விறுவிறுப்பாக போகும்படியும் தொகுத்து கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்.

ஒரு சாமானியன் உண்மையாக நடந்து கொள்ள நினைத்து அரசுகளைத் தேடி வரும் பொழுது அரசின் காவலர்களாக இருப்பவர்கள் அந்த சாமானியனுக்கு துரோகம் இழைப்பதும் அவனைத் திருடன் என்று பட்டம் சுமத்தி சிறையில் அடைப்பதும் இந்த ஜனநாயக நாட்டில் தொடர்ந்து நடந்து வருகிறது. 

இதைத்தான் இந்தப் படத்தில் கேள்வியாக எழுப்பி இருக்கிறார் ‘தவசிமுத்து’ என்ற கருணாஸ். அவர் கேட்கின்ற அந்தக் கேள்வி மிக, மிக நியாயமானது

இதுவரையிலும் எந்த ஒரு திரைப்படத்திலும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் கேட்டிராத ஒரு கேள்வி… “என் மானத்திற்கு என்ன விலை?” என்பதுதான். 

இந்த வித்தியாசமான கதை, திரைக்கதையை எழுதி நறுக்கென்று மனதில் தைக்கும் அளவுக்கான வசனங்களையும் எழுதி தன்னால் முடிந்த அளவுக்கான மிகச் சிறப்பான இயக்கத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் சஜீவ் பழவூருக்கு நமது பாராட்டுக்கள்.

இடைவேளைக்குப் பின்பான நீதிமன்ற காட்சிகளில் ஒவ்வொரு திருப்புமுனை முடிந்தவுடன் அடுத்தடுத்த ஸ்டெப்புகளாக வேகம், வேகமாக திரைக்கதையை நகர்த்தி இருப்பது கொஞ்சம் போர் அடிப்பதாக நமக்கு தெரிந்தாலும் இறுதியில் ஒரு சாமானியனின் கேள்வியை படத்தின் ரசிகர்கள் கேட்கும்படியாக கிளைமாக்ஸில் முடித்திருக்கிறார்.

அந்த வகையில் இந்தப் படம் பாராட்டப்படக் கூடிய ஒரு திரைப்படமாக வந்திருக்கிறது.

இந்த ‘என்ன விலை’ என்ற திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் படம் பார்த்த பின்பு நிச்சயமாக டிக்கெட் விலையை பற்றி யோசிக்க மாட்டார்கள்.

RATING : 4 / 5

Our Score