இந்த வாரம் வெளி வந்திருக்கும் க்ரைம், சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த திரைப்படம் இது!
திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் மேக்கரை என்ற கிராமத்தின் நூலகத்தில் நூலகராக வேலை செய்த தன்னுடைய தந்தை மர்மமான முறையில் இறந்து போனதை 20 வருடங்கள் கழித்து விசாரிக்க வருகிறார் அவருடைய மகள்.
அந்த நூலகத்தில் இருந்த ‘தி டார்க் ஹெவன்’ என்ற புத்தகத்தை தற்செயலாக பிரித்துப் படிக்க ஆரம்பித்த அந்தப் பெண்ணின் அப்பாவான நூலகர், அகால மரணம் அடைந்துவிட்டார். அதற்கான காரணம் அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஒரு மலை கிராமம் ஒன்றில் வசித்து வந்த வனமங்கை என்ற இளம் பெண்ணை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறான்.
அந்தப் பெண் தான் சாகும் தருவாயில் தன்னைக் காப்பாற்ற வராத அந்த வம்சத்தை சேர்ந்த அனைத்து ஆண்களும் மரணம் அடைவார்கள் என்று சாபம் விட்டுவிட்டு சாகிறாள்.
அதனால் அந்த கிராமத்தில் அதற்குப் பின்பு ஆண்கள் அனைவரும் இறந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த வம்சத்தின் கடைசி பெண் அந்தக் கூட்டத்திலிருந்து விலகி சென்றுவிட அந்தப் பரம்பரையில் பிறக்கின்ற ஆண்களும் மர்மமாக இறக்கிறார்கள்.
ஏழு வருடங்களுக்கு ஒரு முறை ஆண்டின் ஏழாவது மாதத்தில் ஏழாவது நாளில் நிச்சயமாக ஒரு கொலை அந்த ஊரில் நடக்கும் என்பது எழுதப்படாத ஒரு விதி.
இதைக் காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக அந்த ஊர்க்கரர்கள் தங்களுடைய பிள்ளைகளிடம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது போலவே ஒரு மரணம் அங்கு நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்த நேரத்தில்தான் இந்த ஏழாவது வருட, ஏழாவது மாதத்தின் துவக்கத்தில் அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார் சித்து.
இந்த ஊரின் அமானுஷ்யமான அமைதி அவருக்கு ஒரு சந்தேகத்தை கிளப்புகிறது. தன்னுடைய மனைவி, மகளுடன் வந்திருக்கும் சித்துவிற்கு அவருக்கு முன்பாக அதே ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஆக இருந்தவர் மர்மமான முறையில் இறந்து போனது சொல்லப்படுகிறது.
அதை பொருட்படுத்தாத சித்து தன்னுடைய வேலையில் கவனமாக இருக்க… முதலில் ஊரில் இருந்த ஒரு பெண் காணாமல் போகிறார். இதை அடுத்து அவளை தேடி வந்த ஒரு இளைஞனும் காணாமல் போகிறான். இதற்கு அடுத்து இன்னொரு பெண்ணும் காணாமல் போக… ஊரே பதறிப் போய் தேடுகிறது.
கடைசியில் இந்த மூன்று பேருமே பிணமாக கண்டெடுக்கப்படுகிறார்கள். வனமங்கையின் கோபம்தான் இந்த படுகொலைகள் என்று உள்ளூர் மக்கள் சொல்ல… “இல்லை… இதில் ஏதோ சதி இருக்கிறது” என்று சந்தேகப்படுகிறார் இன்ஸ்பெக்டர் சித்து.
இந்தக் கொலைகள் மேலும் வளர்ந்து இன்ஸ்பெக்டர் வீட்டுக்குள்ளேயே வந்துவிட மிகப் பெரிய இழப்பை சந்திக்கிறார் சித்து.
இப்போதும் “இந்தக் கொலைகளை செய்தவன் யார் என்பதை கண்டுபிடிக்காமல் நான் இந்த ஊரை விட்டுப் போக மாட்டேன்” என்று சஸ்பெண்ட்டான நிலைமையிலும் அந்த ஊரிலேயே இருக்கிறார் சித்து.
இறுதியில் என்ன ஆனது? அந்த கொலைகளை செய்தது வனமங்கையா? அல்லது தனி நபரா? அந்தக் கொலைகள் ஏன் எதனால் நடந்தது? கொலையாளியை சித்து பிடித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படத்தின் திரைக்கதை.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு பிரமோஷன் ஆகி வந்திருக்கும் சித்து, படத்தின் நாயகனாக மிகப் பெரும் அளவுக்கு படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்.
அவருடைய இயல்பான, அமைதியான, சாந்தமான அதே சமயம் தீர்க்கமான பார்வையுடன் கூடிய முகம் இந்தப் படத்துக்கு கிடைத்த மிகப் பெரிய பலம் என்றே சொல்லலாம்.
தன்னுடைய முகத்திலேயே பலவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி அந்தக் காட்சிகளுக்கேற்ற நடிப்பை கொடுத்து இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஒரு சான்றாக நடித்திருக்கிறார் சித்து.
சில காட்சிகளே என்றாலும் சித்துவின் மனைவியாக நடித்திருக்கும் தர்சிகா மின்னலாய் நடித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில்… பயப்படும்படியான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
இறந்து போன இன்ஸ்பெக்டரின் மனைவியாக நடித்திருக்கும் ரித்விகா முதல் பாதியில் அப்பாவியாக நடித்து பிற்பாதியில் கொஞ்சம் வில்லியாக நாம் எதிர்பார்க்காதது போல நடித்திருக்கிறார்.
ஊர் பஞ்சாயத்து தலைவராக மிடுக்கான தோற்றத்துடன் வலம் வருகிறார் வேலராமமூர்த்தி. ஊரில் இருக்கும் ஒரே ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டராக நிழல்கள் ரவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், அருள் டி.சங்கர், சத்யா, சாப்ளின் பாலு, என்று படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேருமே மிகச் சிறப்பான இயக்கத்தினால் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் அத்தனை பேர் மீதும் சந்தேகம் வரும் அளவுக்கு மிக நுணுக்கமாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது.
கொலையாளி இவரா? அவரா? அவரா? இவரா? என்று காட்சிக்கு காட்சி நாம் சந்தேகப்படும் அளவுக்கு விறுவிறுப்பான வகையில் திரைக்கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.
இதற்கு தன்னுடைய பெரும் ஒத்துழைப்பை கொடுத்திருக்கிறார் படத்தின் எடிட்டர் ராஜா ஆறுமுகம்.
படத்தின் களம் மலையும், மலை சார்ந்த இடமும் என்பதால் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் தன்னால் முடிந்த அளவுக்கு ஒளிப்பதிவு செய்து சிறப்பித்து இருக்கிறார்.
கொலையாளியை காட்டும் பொழுதும் அந்த வயலின் இசையுடன் அவரை ஸ்டாப் பிளாக்கில் வர வைத்தும், காணாமல் போக வைத்தும்… காட்சிகளை திரையில் காட்டும் பொழுது ஒரு திரில்லிங்கான உணர்வை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
இவருடைய கனமான ஒளிப்பதிவுக்கு உற்ற துணையாக அமைந்திருக்கிறது சக்தி பாலாஜியின் பின்னணி இசை. ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் எந்த அளவுக்கு திரில்லிங்க்கை கொடுக்க முடியுமோ அதை தன்னுடைய இசை மூலமாகவும் கொடுத்திருக்கிறார் சக்தி பாலாஜி.
படத்தை எழுதி இயக்கி இருக்கும் இயக்குநர் பாலாஜி அமானுஷ்யமான சம்பவங்கள், ஒரு மர்மமான புத்தகம், சில மர்மக் கொலைகள், பழங்காலத்திய கதைகள்… இவைகளின் ஊடாக இப்போது நம் கண் முன்னே நடக்கும் சில மர்ம மரணங்கள்… என்று அனைத்திற்கும் ஒரு தொடர்பினை முடிச்சாக்கி இறுதி வரையிலும் நம்மைப் படத்தை பார்க்க வைத்திருக்கிறார்.
ஆனால் இறுதியில் அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட கதைக்கும், இதில் கொலையாளி என்று பிடிபடும் நபருக்கும் என்ன சம்பந்தம் என்பதே தெரியவில்லை.
பிடிபட்ட நபர் சொல்கின்ற கதைக்கும், புத்தகத்தில் சொல்லப்படும் வனமங்கையின் சாபத்திற்கும் சம்பந்தமே இல்லாத பொழுது பின்பு எதற்காக அந்த வனமங்கை கதை இதில் வந்தது என்பதும் தெரியவில்லை.
ஆனாலும் ஒட்டு மொத்தமாக பார்க்க போனால் நல்லதொரு க்ரைம், சஸ்பென்ஸ், திரில்லர் கதையில், மிரட்டலான இயக்கத்தில் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும்படியான ஒரு தவிப்பில் படத்தைப் பார்க்க வைத்திருப்பது இயக்குநரின் திறமையை காட்டுகிறது.
அந்த வகையில் இந்தப் படம் நிச்சயம் பார்க்கக் கூடிய ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும்!
அவசியம் பாருங்கள்!
RATING : 4 / 5









