அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் ‘மண்டாடி ‘.
இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்புக்கு பிரதீப் இ. ராகவ், கலை இயக்கம் : டி.ஆர்.கே. கிரண், ஆக்ஷன் காட்சிகளுக்கு பீட்டர் ஹெய்ன் எனப் பணியாற்றியிருந்தனர்.
ஆர். எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்திருந்தார்.
‘மண்டாடி’ படத்தின் வெற்றி மகிழ்ச்சி பகிர்வுக் கொண்டாட்டம் நேற்று மதியம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இதனால் அந்த அரங்கமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வருகை தந்திருந்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி ஒளி படர்ந்திருந்தது.
விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது,
“ஒரு படத்தைப் பற்றி பேசும்போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது மக்களுடைய ஏற்புதான். மக்கள் ஏற்றுக் கொண்டு கொண்டாடுகிறார்கள் என்கிறபோது நாமும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அதற்குள் பேசுவதற்கு எதுவுமே இல்லை. மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்; கொண்டாடுகிறார்கள் என்கிறபோது நாமும் அதைக் கொண்டாடுவதுதான் ரொம்ப முக்கியம். அனைவருக்கும் நன்றி! இந்த பிரம்மாண்ட வெற்றியைக் கொண்டாடுவோம்.
இப்போது நான் மதிமாறனுக்குச் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இவ்வளவு காலம் எதற்கு நாம் போராடினோமோ அந்த இடத்திற்கு நாம் வந்திருக்கிறோம். இனி நிதானம் தேவை. எல்லாவற்றிலும் நிதானமாகச் சென்றால் எல்லாமே சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
எல்ரெட் சாருக்கு நன்றி. மதிமாறனுக்காகவும் அடுத்தடுத்த வாய்ப்பு கொடுக்க இருக்கும் உங்களுக்கு எங்கள் உதவி இயக்குநர்களுக்காகவும் நன்றி.
தமிழ்ச் சினிமாவிலேயே எல்ரெட் சார் சிறப்பானவர். நீண்ட நாளுக்கு முன்பு ‘விடுதலை-1’ கதையைச் சொன்னேன். எடுக்கும்போது செலவு அதிகமாகும் என்று தயங்கினேன். ஆனால் அவர் விடாமல் “பரவாயில்லை சார்.. எடுக்கலாம்” என்று கூறினார். அந்த ஒரு தருணம் மறக்க முடியாதது.
ஒரு ஷாட் எடுப்பதற்கு இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்கும் அளவிற்கு செலவானது. ஆனாலும் அவர் தயங்கவில்லை. அந்த அளவிற்கு அவர் சிறப்பானவர்.
‘மண்டாடி’யில்கூட மதி ஒரு காட்சி எடுக்கச் செலவுக்கு தயங்கியபோது நீங்கள் சொன்ன மாதிரி வரவில்லை என்று அவர் முழு சுதந்திரத்தில் எடுக்க வைத்தார்.
மீண்டும் சென்று இருபது நாட்கள் கடலில் போய் எடுத்துக் கொள்ளச் சொன்னவர் அவர். அப்படி சினிமாவின் மீது காதல் உள்ள ஒரு தயாரிப்பாளர் அவர். எப்போதும் தன்னை ஓர் உதவி இயக்குநராகவே நினைத்துக் கொண்டு ஈடுபாடு காட்டுபவர்.
சூரியைப் பார்க்கும்போது அவரது ஒரு பயணம் கண்கூடாகத் தெரிகிறது. அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு தெரிவது மட்டுமல்லாமல் ஒரு படத்தில் ஒரு ஷாட்டில் தொடங்கிய அவரது பயணம் இந்த அளவிற்கு வந்து இருப்பதற்குப் பல்வேறு காட்சிகள் சாட்சியங்களாக உள்ளன.
அவரது வளர்ச்சி மக்களிடம் நம்ம வீட்டு பையன் சூரியின் வளர்ச்சி என்று அவரது பயணத்திற்குக் கண்முன்னே இருக்கிற காட்சிகளாக உள்ளன.
அதைப் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் நம்ம வீட்டுப் பையன் நம்மை மாதிரி ஒருவருடைய கனவு இங்கே கொண்டுவந்து சேர்த்து இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
எங்கோ கடைக்கோடியில் இருக்கும் ஒருவனது அர்ப்பணிப்பு ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்க்கும் என்கிற இந்த பயணத்தை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
சூரியை மக்கள் தங்களில் ஒருவராகவும் அவர் ஜெயிப்பதை தாங்கள் ஜெயிப்பதாகவும் கொண்டாடுகிறார்கள். அது அவருக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறது.
ஊரிலிருந்து இன்று வந்து இறங்கும் ஒருவரின் அப்பாவித்தனம் அவர் முகத்தில் இருப்பதைப் பார்க்கிறார்கள். அதனால் மக்கள் அன்பு காட்டுகிறார்கள். அதை அவரும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.
ஆர்.எஸ். இன்போடெய்ன்மென்ட் நிறுவனத் தயாரிப்பாளர் எல்ரெட்குமார் பேசும்போது,
“இந்தப் படத்தைப் பொறுத்தவரை முதலில் இயக்குநர் மதிமாறன் பற்றிக் கொஞ்சம் பேச வேண்டும். அவர் எதையுமே எங்கேயுமே பேசுவதில்லை. அமைதியாக உட்கார்ந்து இருப்பார்.
தான் எதற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருப்பார். அப்படி உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு உள்வாங்கிக் கொண்டிருப்பார்.
நான் ஒரு தயாரிப்பாளராக முதலில் என்னிடம் ஒப்பந்தமாகும் இயக்குநரிடம் ஒழுங்கு இருக்கிறதா என்று பார்ப்பேன். அது முக்கியமான முதல் புள்ளி.
இன்று பல இயக்குநர்களிடம் அது இல்லை. அந்த ஒழுங்கில் தனிமனித ஒழுக்கம் தொடங்கி, வேலையில் உள்ள அர்ப்பணிப்புவரை வரும். என்னிடம் அவர் கொடுத்த கமிட்மெண்ட், உறுதிமொழி என்னவென்றால்.., நான் திரைக்கதையில் உள்ளதைத் தவிர ஒரு காட்சிகூட எடுக்க மாட்டேன் என்பதுதான்.
“அதில் உள்ளதை மட்டும்தான் சார் எடுப்பேன். எடுத்ததை எடிட்டிங்கில் தூக்கி எறிய முடியாது. அப்படித் தேவைப்பட்டதை மட்டும்தான் எடுப்பேன்” என்றார். அப்படியே செய்தார்.
கூடுதலாகப் பாடலுக்கு எடுக்க வேண்டும் என்று சில நாட்கள் நான்தான் எடுக்கச் சொன்னேன்.
திரைக்கதையில் என்ன எழுதியிருந்தாரோ அதைத்தான் இயக்குநர் எடுத்தார். எந்த மாற்றமும் செய்யவில்லை.
அது மட்டும் அல்லாமல் இது அவருக்கு முதல் படம். சில ஃபார்மெட்டில் இதுதான் முதல் படம். அதாவது ஐ மேக்ஸ் முறையில் இது முதல் படம். டால்பி, ஹெச்டி எல்லாவற்றிலும் இது முதல் படம். இப்படிப் பல்வேறு தொழில் நுட்ப சவால்கள் இருந்தன.
‘ஒடிஸி’ போன்ற ஹாலிவுட் படங்களுக்கு மாஸ்டரிங் செய்பவர்கள்தான் இதற்கும் செய்தார்கள். அவர்கள் ஐமேக்ஸ் செய்வது என்றால் நாங்களே வந்து மிக்ஸ் செய்வோம். கலர் கரெக்சன் செய்வோம். மாஸ்டரிங் செய்வோம் என்றார்கள்.
அதற்குப் படம் வெளியிடுவதற்கு 20 நாட்கள் முன்பாக முதல் பிரதியைத் தர வேண்டும் என்றார்கள். அதுதான் அவர்களது நிபந்தனை.
இப்படிச் சொல்கிறார்களே என்று மதியிடம் கேட்டபோது “தைரியமாகக் கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்” என்றார்.
சரியாகத் திட்டமிட்டு 22 நாட்கள் முன்பாகவே கொடுத்து விட்டார். வெற்றிமாறன் சார் சூரியைக் கதாநாயகனாக மாற்றினார்; மதிமாறன் அவரை மாஸ் ஹீரோவாக மாற்றி விட்டார்.
தமிழ்நாட்டில் ’தியேட்டர் விசிட்’ போகிற பழக்கம் குறைவு. ஆனால் தெலுங்கானா, ஆந்திரா எல்லாம் படம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அங்கே திரையரங்கங்களுக்குச் சென்று வந்தது நல்ல அனுபவமாக இருந்தது. அதைப் பற்றி நிறைய பேசலாம்.
ஆனால் இந்தப் படம் ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறது. திரையரங்கங்களில் பார்ப்பவர்கள் எல்லாம் சூரி அண்ணா சூரி அண்ணா என்கிறார்கள். நடிகர் என்பதே மாறி அந்தக் கதாப்பாத்திரத்தின் பெயரைச் சொல்லி அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
திரைப்படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரம்தான் பேசப்படும். இதில் அனைத்துக் கதாபாத்திரங்களும் பேசப்படுகின்றன. ‘மண்டாடி’ படத்தின் மூலம் செய்யப்பட்டுள்ள மாற்றம் இது.
இன்னொன்று வணிகப் படங்களுக்கென்று சில வடிவம் இருக்கிறது. அதை மாற்றி இருக்கிறீர்கள். கதாநாயகனுக்கு ஒரு அறிமுகப் பாடல் என்பதெல்லாம் இதில் கிடையாது.
எளிமையாக ஓர் அறிமுகம். அப்படி எளிமையான ஒரு கதைநாயகன். இதில் வணிக ரீதியாக செய்ய என்ன இருக்கிறது? ஆனால் இப்படம் ஒரு பெரிய வணிக ரீதியிலான படம் எந்த அளவுக்கு ஓடுமோ அப்படி ஓடுகிறது.
இந்தப் படம் அனைத்து சென்டர்களிலும் திரையரங்கில் இருந்து வரும் வசூல் தகவல்கள் எல்லாம் அவ்வளவு ஊக்கமாக உள்ளன.
சூரி பற்றி ஒரு விஷயம். நான் ஒரு தடவை படப்பிடிப்புக்குப் போயிருந்தேன். கடலுக்குள் சென்று வந்து பயங்கர சோர்வாக இருந்தார். சூரியண்ணாவுக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாமல் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கே போயிருந்த என்னைப் பார்த்துக் கையைக் காண்பித்து “ஒரு பத்து நிமிடம் காத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். நான் கொஞ்சம் உற்றுப் பார்த்தபோது பெரிய கூட்டத்தினர் நடுவே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். பிறகுதான் என்னைப் பார்க்க வந்தார்.
தப்பாக எடுத்துக் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றார். நான் சினிமாவில் பல இடங்களில் இருந்திருக்கிறேன். இது மாதிரி படப்பிடிப்புத் தளங்களில், இடங்களில் சின்னச் சின்ன நடிகர்கள், தொழிலாளிகள் அந்தக் கதாநாயகன் நம்மைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிக்க மாட்டாரா என்று நினைப்பார்கள். ஆனால் இவர் அவ்வளவு தாழ்மையுடன் இருக்கிறார்.
அவர் எதற்கு ஏங்கினாரோ, அதைப் பக்கத்தில் உள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
நான் ஓய்வெடுங்கள் என்ற போதும் இப்படி அவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த அடக்கம்தான் அவரை எங்கோ கொண்டு சென்று இருக்கிறது. மேலும் கொண்டு செல்லும். கடைசிவரை இப்படி இருப்பார் என்று நினைக்கிறேன்.
சுஹாஸ், அதாவது சாட்டைப் புலி அலுவலகத்திற்கு ஹைதராபாத் சென்றிருந்தோம். அவர் சினிமாவுக்கு வந்தபோது எந்த நண்பர்களோடு இருந்தாரோ அத்தனை நண்பர்களுடன் ஓர் அலுவலகத்தில் இருந்தார்.
அவர்கள் வேறு வேறு துறைகளில் இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் தன் பயணத்தில் இருக்கிறார்கள் என்றார். “அது போதும் இப்படியே இருங்கள்” என்று கூறினேன்.
மஹிமா வரும் காட்சிகளில் தியேட்டர்களில் உணர்ச்சிவசப்படுகிறார்கள். சிம்பு எஸ்டிஆர் படத்தைப் பற்றிப் பாராட்டி இருந்தார். அவர் பாராட்டிய காட்சிகள் எல்லாமே மஹிமா நடித்த காட்சிகள்தான்.
பால சரவணன் நடித்த டைமிங் காமெடி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
ஆக்சன் காட்சிகளில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் எப்படி மேஜிக் செய்தார் என்றே தெரியாது. கதையை உள்வாங்கிக் கொண்டு கான்செப்ட்டை உள்வாங்கிக் கொண்டு செய்திருக்கிறார்.
உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே பட்டையைக் கிளப்பி இருக்கிறார். சத்யராஜ் சார் இங்கு இப்போது இல்லை. வர முடியவில்லை. அவரது திரையிருப்பு படம் முழுக்க இருக்கிறது. ரொம்ப நன்றி. படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
படத்தில் ‘சிங்காரம்’ பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ரவீந்திர விஜய்
வீடியோவில் பேசும்போது,
“நான் ஹைதராபாத் ஷூட்டிங்கில் இருப்பதால் வர முடியவில்லை. மனசெல்லாம் இங்கேதான் இருக்கிறது.
இது நம்மை நாமே பாராட்டிக் கொள்கிற நேரம். நமக்கு நாமே நன்றி சொல்லக் கூடிய நேரம். பல ஆண்டுகள் கடந்தும் இந்தப் படம் நிற்கும்.
இப்படிப்பட்ட ஒரு படத்தை எழுதி இயக்கிய இயக்குநர் மதிமாறனுக்கு பெரிய நன்றி. பிரம்மாண்டமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்.
இப்படிப்பட்ட ஒரு தயாரிப்பாளர் கண்டிப்பாக வேற யாருக்கும் கிடைக்காது. தனி மனிதராய் இதைக் கையாண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட தயாரிப்பாளர் கிடைப்பது பெரிய பாக்கியம்தான்.
கதிர் சார் கேமரா வைத்த இடம் எல்லாமே அழகு. பிரம்மாண்டம் அழகு. கடலின் பிரம்மாண்டத்தை, மனித உணர்வோட பிரம்மாண்டத்தைக் காட்டி இருக்கிறீர்கள். நன்றி !
எடிட்டிங்கின் வேகம் படத்தை வேறு வேகத்தில் கொண்டு போனது. இந்தப் படத்தை நாம் கொண்டாடத்தான் வேண்டும்” என்றார்.
படத்தின் கதை நாயகி மஹிமா பேசும்போது,
“முதலில் இயக்குநரிடம் பேசியபோது இந்தப் பாத்திரத்தை என்னால் செய்ய முடியுமா என்று தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது. அப்போது சந்தேகமாக இருந்தது.
இயக்குநர் அப்போது இந்தப் பாத்திரத்தை ஏற்பதற்கு இதில் நடிப்பதற்குச் சிரமப்பட வேண்டும். அதற்குத் தயாரா என்றார். நான் தயார் என்றேன். அப்படி என்றால் அந்தப் பாத்திரத்தைச் சுலபமாகச் செய்துவிடலாம் என்றார். அப்படித்தான் செய்தேன்.
இன்று அது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு கதாப்பாத்திரமாக ஆகி இருக்கிறது.
திரையரங்குகளுக்குச் சென்றபோதெல்லாம் சூரியின் வெற்றியைத் தங்களுடைய வெற்றியாக மக்கள் கொண்டாடுகிறார்கள். பெருமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
பால சரவணன் வரும் போதெல்லாம் திரையரங்கில் சிரிப்பொலி பறக்கிறது. இந்த இயக்குநருக்கும் இப்படிப்பட்ட படத்தைக் கொடுத்த தயாரிப்பாளருக்கும் மிக்க நன்றி” என்றார்.
படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேசும்போது,
“என் பேச்சைத் தொடங்குவதற்கு முன்பாக இந்தப் படத்தின் வெற்றியைப் பாய்மரப் படகு சொந்தக்காரர்களுக்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் .
அவர்கள் தினமும் கடலோடு போராடித் தங்களை, தங்கள் வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்ளக் கூடிய சொந்தங்கள்.
தலைமுறை தலைமுறையாக இந்த விளையாட்டைப் பாதுகாத்து அதற்கு ஒரு காரணத்தை வைத்து தொடர்ந்து கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த மீனவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனி வரப் போகிற தலைமுறைக்கும் நான் என்னுடைய சமர்ப்பணத்தைச் சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படம் உங்களுக்கானது.
இந்த உலகத்தில் இருந்த எனக்கு ‘மண்டாடி’ உலகத்தைச் சொல்லிக் கொடுத்து அறிமுகம் செய்த தோழர் சதீஷ் அவர்களுக்கும், இன்னும் சொல்லப்படாத கதைகளை எனக்குச் சொல்லிக் கொடுத்த உதவிப் பேராசிரியர் மோகன வசந்தன் அவர்களுக்கும் பெரிய நன்றி.
இன்னும் நிறைய கதைகளைக் கண்டுபிடிப்போம்; தொடர்ந்து பயணிப்போம்.
இயக்குநர் வெற்றி சார் சொன்னதுபோல் எல்ரெட் சாருக்கு ஒரு இயக்குநரைப் பிடித்துவிட்டு நம்பிக்கை வைத்துவிட்டார் என்றால் அப்புறம் அந்தப் படம் உங்கள் கையில் இருக்காது என்று சொன்னார். அதுதான் இந்தப் படத்தில் நடந்தது.
அவருக்குப் பிடித்த மாதிரி நான் நடந்ததால் ஒரு சராசரி மீடியம் பட்ஜெட்டில் ஆரம்பித்த படத்தின் பட்ஜெட் விரிந்து பெரியதாகி விட்டது.
தமிழ் மொழியில் மட்டும் தொடங்கிய இந்தப் படம் ஐந்து மொழிப் படமாக மாறியது. நம்ம ஊர் திரையில் வரும் என்பதைத் தாண்டி ஐமேக்ஸ் ஸ்கிரீன் என்று மாறியது. காரணம் எல்ரெட்சார்தான்.
எந்த வெற்றியும் கொடுக்காத என்னுடைய கதையை நம்பி இந்தப் படத்தை எடுக்க ஆரம்பித்தார். பெரிய சுமை என் மேல்தான் இருந்தது.
ஏனென்றால் அந்த நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் அதை ஒவ்வொரு நிமிடமும் சுமந்து கொண்டேதான் இருந்தேன். என் வேலையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். எல்ரெட் சார் நம்பினார். என்கூடவே ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.
இன்று நினைக்கிறேன்… இது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுத்தும் என்று நினைத்தால், ஒரு பெரிய படம் பண்ணினால்தான் பெரிய இயக்குநராக இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.
ஒரு சின்ன இயக்குநரிடம் இருந்து ஒரு பெரிய கனவு இருந்தாலும் எல்ரெட் சார் மாதிரி ஒரு தயாரிப்பாளர் இருந்தாலும் அது சாத்தியமாகும் என்பதை எல்லா உதவி இயக்குநருக்கும் ஏற்படுத்தியது. எல்ரெட் சாருக்கு என்னுடைய நன்றி.
அடுத்து சூரி சாருக்கு நன்றி. ஒருவரின் வாழ்க்கையில் இரண்டாவது அத்தியாயம் கிடைக்க வேண்டும் என்றால் அதை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம்தான் முத்துக்காளி பாத்திரம்.
இந்தக் கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் அந்தரங்கமானது. இந்தக் கதையை என்னிடமிருந்துதான் தேடினேன். முத்துக்காளிக்கு உயிர் கொடுத்த உங்களுக்கு என்னுடைய நன்றி.
சுஹாஸ் சார் “கறுப்பாக இருக்கிறவர் மேலே வர முடியாது. அந்த நிறவெறி கேலிகள் எல்லாம் உள்ளன” என்று சொல்லி வருத்தப்பட்டார்.
அப்போது நான் சொன்னேன். தமிழ்நாட்டில் இதெல்லாம் பேசாதீர்கள். அதெல்லாம் இங்கே இல்லை. நம் படம் ஜெயிக்கும் என்றேன். அதுதான் நடந்திருக்கிறது.
மஹிமாவிடம் நான் உறுதிப்படுத்திய மாதிரி அந்தப் பாத்திரத்தை செய்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன். ரொம்ப நன்றி. அந்தப் பாத்திரத்தில் நீங்கள் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள் என்று உங்கள் பேட்டிகளில் நீங்கள் நடந்ததை எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். பார்த்தேன் ரொம்ப நன்றி.
இந்த முயற்சிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்த பீட்டர் ஹெயின் மாஸ்டருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் ஜீவி என்று எத்தனை பேர் இதில் பங்கெடுத்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் ஏகப்பட்ட பேர் இதில் பங்கெடுத்து உதவியிருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.
படத்தின் நாயகன் சூரி பேசும்போது,
“எங்கள் படக் குழுவின் சார்பாக இந்த ‘மண்டாடி’ படத்தைத் தன்னுடைய படைப்பாக ஏற்றுக் கொண்டு கொண்டாடி வரும் உலகம் முழுதும் இருக்கும் ஒட்டு மொத்த மக்களுக்கும் என்னுடைய மிகப் பெரிய நன்றி.
அப்படித்தான் இன்று இதைக் கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு எங்கள் படக் குழுவின் சார்பில் நன்றி.
பல்வேறு வகையிலும் ‘மண்டாடி’ படத்தைக் கொண்டாடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படி ஒரு படைப்பை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனத்துக்கும் எல்ரெட் குமார் அண்ணனுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணே.
அதே நேரத்தில இந்த படைப்பை மிக நேர்த்தியாகவும் உணர்வு பூர்வமாகவும் சிறந்த திரைப்படமாகவும் உருவாக்கிய மதிமாறன் அண்ணனுக்கு ரொம்ப, ரொம்ப நன்றிண்ணே.
’நீ ஜெயிச்சிட்ட மாறா’ அப்படிங்கிற மாதிரி’ நீங்க ஜெயிச்சிட்டீங்க மதிமாறா’ அப்படித்தான் இருக்குண்ணே.
இந்தக் கதையைச் சொல்லி முடிச்ச உடனே நீங்க என்கிட்ட சொன்னபோது இந்த முத்துக்காளி இதுதான்.
20 வருஷம் அவன் வாழ்க்கையில் இழந்துவிட்டு வந்ததற்குப்பிறகு வந்து 20 வருஷத்துக்கு அப்புறம் திருப்பி அவன் அந்த ஊருக்குள் வந்தால் அவன் எப்படி இருப்பான்? அவன் மனநிலை எப்படி இருக்கும்? ஒருத்தர் அவனைக் கூப்பிட்டால்கூட அவன் எப்படித் திரும்புவான்?அவன் எப்படி உட்காருவான்? அவனுடைய நடவடிக்கை எப்படி இருக்கும்? அவனுக்கு பிடிக்காத விஷயங்கள் பழையதை ஞாபகப்படுத்துற மாதிரி ஒரு சின்ன விஷயத்தைச் சொன்னால்கூட அவனைக் கோபப்படுத்துகிற மாதிரி இருக்கும்.
அதைத் தொட்டால் அவன் எப்படி வெளிப்படுத்துவான் என்பதெல்லாம் நீங்கள் என்னிடம் தெளிவாகக் கூறினீர்கள். அதைத்தான் நானும் நண்பர்களும் ஒரு வாரமாக யோசித்துக் கொண்டே இருந்தோம்.
இதை என்ன மாதிரிச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.
ஒருத்தன் பாறையை முழுங்கிட்டு இருந்தான்னா எப்படி இருப்பான்? அவன் எப்படி நடமாடுவான்? அவனைப்போய் ஒரு கட்டத்துக்கு அப்புறம் அவனைச் சீண்டினால் அவன் எப்படிவெளிப்படுத்துவான்?
அந்த மாதிரி யோசித்துக்கொண்டேடே இருந்தேன். இயக்குநருடன் கலந்து பேசினேன். விவாதம் செய்தேன். அப்போது அண்ணன் சொன்னார் இதுதான் நான் எதிர்பார்க்கிறேன். “அப்படி இந்த கேரக்டர் இருந்தால் நன்றாக இருக்கும்” என்று சொன்னார்.
நீங்க சொன்னது இன்றைக்கு எல்லாரும் என்னை சூரியோட நடிப்பு சூப்பர் என்று சொல்லும் போது முத்துக்காளியாக மதிமாறனாக என் கண்ணுக்குத் தெரிகிறார்கள். ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணே.
ஆந்திரா சென்றபோது அவர்கள், எங்கள் சுஹாஸ் அண்ணாவை நீங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை நாங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றுள்ளது மிக்க நன்றி.
பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உங்களுக்கு எனது ராயல் சல்யூட். ‘மண்டாடி’யை அப்படியே உங்களிடம் கொடுத்துவிட்டார்கள். ஏதாவது தவறுதலாகப் பேசி இருந்தால் மன்னிக்கவும்.
இந்தப் படத்துக்காக மாஸ்டரின் மகன் கிரண் 20 நாள் சிரமப்பட்டு இருக்கிறார். அப்படித்தான் அசார் மாஸ்டரும் ‘மண்டாடி’ பாடல் எடுத்தபோது நடுக்கடலில் ஆட்கள் இல்லாதபோது எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை மறக்கவே முடியாது. யாருமே இல்லாமல் நடிகர்களை மட்டும் வைத்துக் கொண்டு சிரமப்பட்டார் .
முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து வாழ்த்து வந்தது. அதை மறக்கவே முடியாது.
படம் பார்த்துவிட்டு சரத்குமார் சார் இரவு ஒரு மணிக்கு போன் செய்தார். படத்தில் நான் மஹிமாவிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியைப் பார்த்துவிட்டு அவரும் கண் கலங்கியதாகச் சொன்னார்.
நெப்போலியன் சார் அமெரிக்காவில் இருந்து போன் செய்தார். பார்த்திபன் சாரும் போன் செய்து வாழ்த்தினார். சீயான் விக்ரம் சார் வாழ்த்து சொல்லி விட்டுப் பத்து நிமிடங்கள் பேசி விட்டுச் சென்றார்.
அப்படியே எனக்கு வாழ்த்து சொன்ன கார்த்தி சார், எஸ்டிஆர் சிலம்பரசன் சகோ, தம்பி எஸ்.கே., நண்பர் விமல், நானி பிரதர், ஆர்.ஜே.பாலாஜி பிரதர், சிறுத்தை சிவா சார் க்ஷ, தாணு சார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி.
கேமராமேன் கதிர் சார் எங்களுடைய இன்னொரு கதாநாயகன். உங்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் ஜீவி அவர்களுக்கு மிக மிக நன்றி.
படகுகளை ஏற்பாடு செய்த சொக்கலிங்க முதலாளிக்கு நன்றி. இப்படியே ஆனால் யார் பெயரையாவது மறந்து விடுவேனோ என்று எனக்கே பயமாக இருக்கிறது.
ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சொன்னார் ,”இதற்கு மேல் நாம் இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்ய வேண்டியதில்லை, மக்களே கொண்டு சேர்ப்பார்கள்” என்றார். அவர் சொன்னபடியே மக்களே இதைக் கொண்டாடுகிறார்கள்.
‘மண்டாடி’ சம்பந்தமாக ஆயிரக்கணக்கான ரீல்ஸ்கள் போட்டுக் கொண்டாடி வருகிறார்கள். மனம் நிறைவாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.
நான் இனி எப்போதும் இப்படியேதான் இருப்பேன். “சூரி இனி போனை எடுக்க வேண்டும்” என்றார்கள். எனக்கு எப்போதும் நான் மேனேஜர் வைத்துக் கொள்வதில்லை. அன்புத் தம்பி உதயசங்கர்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைவருக்கும் நன்றி. வணக்கம்!” என்றார்.









