தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது A.R.Murugadoss Productions நிறுவனத்தின் மூலம், Purple Bull Entertainment நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘1947 ஆகஸ்ட் 16’..!
இந்தப் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநரான என்.எஸ்.பொன்குமார், இயக்குநர் முருகதாஸிடம் நீண்ட காலமாக இணை இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
அறிமுக நாயகி ரேவதியுடன் கௌதம் கார்த்திக் நடித்துள்ள இப்படம், இந்திய சுதந்திரத்தின் உச்சக்கட்டத்தின்போது, ஒரு கிராமத்தில் ஒரு துணிச்சலான வீரன் பிரிட்டிஷ் படைகளுடன் போரிடும் கதையைச் சொல்கிறது.
தமிழ்நாட்டின் அழகிய பகுதிகளில் படமாக்கப்படும் இந்த படம் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இந்தப் படம் குறித்து யாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், “இந்த ‘1947- ஆகஸ்ட் 16’ படம் இதயத்தை தொடும் ஒரு நேர்மையான கதை. மனதை அசைத்து பார்க்கும் அற்புதமான படைப்பு, இந்த கதையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை கதையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை நீங்கள் ஒருமுறை பார்த்தால் என்றென்றும் அது உங்கள் மனதில் நிலைத்து இருக்கும்.” என்றார்.
இயக்குநர் N.S.பொன்குமார் படம் பற்றிக் கூறுகையில், “இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல. ‘சுதந்திரம் என்றால் என்ன’ என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை இது.
இவர்களில் ஒருவர்தான் கதாநாயகன். எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்டவர். ஏங்கும் இதயம் கொண்ட கதாநாயகி. தங்கள் பிரச்சனைகளைப் பற்றி ஏளனமாகச் சிரிப்பவர்கள்.. மற்றும் காதலிக்கும் வயதான தம்பதிகள் இந்த கதையின் கதாபாத்திரங்கள். இந்தக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும் இந்த கதை… உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அழுத்தமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.









