Dream Warrior Pictures சார்பில் தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கைதி’.
இப்படத்தில் கார்த்தி, நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் C.S. இசையமைத்துள்ளார். பிலோமின்ராஜ் படத் தொகுப்பு செய்துள்ளார். N சதீஷ்குமார் கலை இயக்கம் செய்துள்ளார். அன்பறிவ் சண்டை பயிற்சி மேற்கொண்டுள்ளார். பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ‘கைதி’ திரைபடத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி தமிழ்ச் சினிமா உலகத்தையே கலக்கியது. இந்த நிலையில் ‘கைதி’ படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா இன்று மாலை ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த டிரெய்லர் வெளியீட்டு விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள விமரிசையாக நடைபெற்றது
இவ்விழாவில் வசனகர்த்தா பொன் பார்த்திபன் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. இந்தப் படத்தில் நான் இருக்க காரணம் கார்த்தி சார்தான். ‘காற்றின் மொழி’ பார்த்துட்டு லோகேஷ் கனகராஜிடம் அவர்தான் சிபாரிசு செய்தார். அவருக்கு நன்றி. லோகேஷ் கனகராஜிடம் வேலை பார்த்தது கரும்பு தின்ன கூலி வாங்கியது போலத்தான். முழுக்க, முழுக்க இரவிலேயே நடக்கும் கதை இது. ஒரு ஃபிரேம்கூட பகலில் கிடையாது. ரசிகர்களுக்கு பயங்கர தீனி காத்திருக்கிறது… ” என்றார்.
படத் தொகுப்பாளர் பிலோமின் ராஜ் பேசும்போது, “இயக்குநர் லோகேஷ் இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது எப்படிடா எடுக்கப் போற என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். ஆனால் எடுத்து விட்டார். படத்தைப் பார்த்தபோது சில காட்சிகளில் எனக்கு அழுகையே வந்துவிட்டது. இது ஆக்ஷன் படம்தான். ஆனால் செண்டிமெண்ட்டும் இருக்கிறது. கார்த்தி சாரிடம் அதைத்தான் சொன்னேன். இந்தப் படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்…” என்றார்.
இசையமைப்பாளர் சி.எஸ்.சாம் பேசும்போது, “மாநாகரம்’ முடித்த பின் ஒரு குறும் படம் செய்யலாம் என என்னிடம் வந்தார் லோகேஷ். ஒரு படம் செய்துவிட்டு ஏன் குறும் படம் செய்ய வேண்டும் என அவர் யோசிக்கவில்லை. அவருக்கு கதை, கண்டண்ட்தான் முக்கியம்.
‘கைதி’யைப் பொறுத்தவரை இரவிலேயே நடக்கும் கதை. நாயகியும் கிடையாது. இதை எப்படி தமிழ் சினிமாவில் எடுக்க முடியும் என நினைத்தேன். ஆனால் கார்த்தி சார் ஒத்துக்கொண்டு நடித்தார். லோகேஷ் தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய இயக்குநர்.
கார்த்தி சார் இதில் நிறைய கஷ்டப்பட்டு ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். டிரெய்லரில் பார்க்காத நிறைய ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருக்கின்றன. இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவரும் பணத்திற்காக வேலை செய்யவில்லை. எல்லோரும் தங்கள் படமாக நினைத்து உழைத்திருக்கிறார்கள். படம் வரும் தீபாவளிக்கு வருகிறது. இது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்…” என்றார்.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் பேசும்போது, “இந்தக் கதையில் கார்த்தி சார் வந்ததும் இந்தப் படம் மாஸாக மாறிவிட்டது. கார்த்தி சார் இதில் பயங்கர கஷ்டப்பட்டிருக்கிறார். ‘தீரன்’ படத்தைவிட மிரட்டும் ஆக்ஷன் காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கிறது…” என்றார்.
நடிகர் மரியம் ஜார்ஜ் பேசும்போது, “இதுவரைக்கும் சிரிப்பு போலீஸாத்தான் பல படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆனால் இந்தப் படத்தில்தான் என்னை சீரியஸ் போலீஸா நடிக்க வச்சிருக்கார் லோகேஷ் சார். நான் கூத்துப்பட்டறையில இருந்து சினிமாவுக்கு வந்தேன். சின்ன சின்ன கேரக்டர்கள்ல நடிச்ச என்ன இந்தப் படத்தில பெரிய ரோல்ல சீரியஸ் கதாப்பாத்திரத்துல நடிக்க வச்சதுக்கு நன்றி…” என்றார்.
நடிகர் ரமணா பேசும்போது, “இந்தப் படத்தில் என்ன நடிக்க கூப்பிட்டதுக்காக நான் தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லிக்கிறேன். இந்த டீம்கூட வேலை செஞ்சது மறக்க முடியாத விசயம். ஒரு நடிகனா எனக்கு நிறைய புதுசா கத்துக்கிட்டது இந்தப் படத்தில் நடந்தது. கார்த்தி மூணு நிமிடங்கள் தொடர்ச்சியான ஒரு குளோசப் காட்சில நடிச்சிருக்கார். அதைப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். இனிமேல் எல்லாரும் அந்தக் காட்சிய வீட்ல நடிச்சு பார்ப்பாங்க. இந்தப் படம் தமிழ் சினிமாவில முக்கியமான படமா இருக்கும்…” என்றார்.
நடிகர் நரேன் பேசும்போது, “இந்தப் படம் என் வாழ்க்கையில் முக்கியமான படம். எனக்கு செகண்ட் இன்னிங்ஸ் இந்தப் படம் மூலமா ஆரம்பிக்கும்னு நான் நம்புறேன். லோகேஷோட டீம் பிரமிப்பு தர்ற டீம். ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய ஆச்சர்யப்படுத்திட்டே இருப்பாங்க. கமர்ஷியலா நல்ல படம் கொடுக்கக் கூடிய முக்கியமான இயக்குநர்.
சினிமால எனக்கு நெருக்கமான நண்பர் கார்த்தி. அந்த நண்பன்கூட நடிச்சதில் எனக்குப் பெரிய சந்தோஷம். ஒரு ஸ்டாராகவும், நடிகராகவும் தன்னை சரியா வடிவமைச்சிக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தில் இருக்கிற ஆக்ஷன், செண்டிமெண்ட் காட்சிகள் இரண்டுமே நிச்சயமாக ரசிகர்களை பெரிதும் கவரும்..” என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, “இது எனக்கு இரண்டாவது படம். ‘நாயகி இல்லாம, கமர்ஷியல் விசயங்கள் இல்லாம, எப்படி பண்ணுவீங்க?’ன்னு எல்லோரும் கேட்டாங்க. தமிழ் சினிமால இத உடைக்க முடியாதோன்னு நினைச்சேன்.
இந்தப் படம் உருவாக முதற்முழுக் காரணம் தயாரிப்பாளர் S.R.பிரபுதான். கார்த்தி சார் கதையைக் கேட்டவுடன் ‘ஷீட்டிங் போகலாம்’ன்னு சொல்லிட்டாரு. இந்தப் படம் உருவாக அவரும் ஒரு காரணம். அவர் இல்லைனா இந்தப் படம் இப்படி ஒரு ஆக்சன் படமா வந்திருக்காது.
இந்தப் படம் குறுகிய காலகட்டத்தில எடுத்த படம். இந்தப் படத்தில உழைச்ச எல்லோருமே மிகப் பெரிய பங்கை தந்திருக்காங்க. என் உதவி இயக்குநர்கள் எல்லோரும் இரவு, பகல் பாராமா உழைச்சிருக்காங்க. அவங்களை இந்த மேடையில் உங்க முன்னாடி அறிமுகப்படுத்துறேன். இது அவங்களுக்கு கொடுக்குற கௌரவமா நினைக்கிறேன். இந்தப் படம் ஒரு தியேட்டர் அனுபவமா இருக்கும்…” என்றார்.
தயாரிப்பாளர் S.R.பிரபு பேசும்போது, “இயக்குநர் லோகேஷ் காமெடியைக்கூட சீரியஸா சொல்றவர். மிகத் தெளிவான ஒருத்தர். அவர்கூட வேறொரு புராஜக்ட் பண்ண வேண்டியது. அதற்கு லேட்டானது. அந்த நேரத்தில் ஒரு சின்னப் படம் பண்ணலாம்னு முடிவு பண்ணப்ப வந்த ஐடியாதான் இது. கேட்கும்போதே நல்லாருந்தது. ஹாலிவுட்ல இது மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கு தமிழுக்கு இது புதுசா இருக்கும்.
கார்த்தி சார் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம் இந்தப் படம் பெரிசா மாறிடுச்சு. ஒரு இரவுல நடக்கற கதை. முழுக்க ஆக்ஷன்தான். இந்தப் படத்தில வேலை பார்த்த மொத்த டீமுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். படம் வரும் தீபாவளிக்கு வருகிறது. டீஸருக்கு மிகப் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அதே மாதிரி படமும் உங்களை நிச்சயமாகத் திருப்திபடுத்தும்…” என்றார்.
நடிகர் கார்த்தி பேசும்போது, “உதவி இயக்குநராக இருக்கும்போது நாம சில படங்கள் செய்யணும்ன்னு நினைச்சேன். அது மாதிரி படங்கள் நமக்கு எப்போதாவதுதான் வந்து சேரும். ‘மெட்ராஸ்’, ‘தீரன்’ மாதிரிதான் இந்த ‘கைதி’ திரைப்படமும் என்னிடம் வந்தது.
ஒரு களத்தில் போய் அந்தக் கேரக்டர தெரிஞ்சிக்கிட்டு பண்ற படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்தப் படத்தில் நிறைய சவால்கள் இருப்பது தெரிஞ்சது. அதை ஆசைப்பட்டு செஞ்சிருக்கேன். லோகேஷ் ஆடியன்ஸ்க்கு படம் எப்படி கொடுக்கணும்னு தெரிஞ்ச டைரக்டர். ‘இதில எந்தளவு புதுசா பண்ண முடியுமோ பண்ணுங்க’ன்னு சொன்னேன். அத மொத்த டீமும் சேர்ந்து பண்ணியிருக்காங்க.
முழுக்க, முழுக்க நைட்லதான் ஷூட் பண்ணிருக்கோம். எனக்கு ஆக்ஷன் படம்னாலே ரொம்பவும் பிடிக்கும். இந்தப் படம் முழுக்கவே ஆக்சனா அமைஞ்சிருக்கு. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் நாலு நாளா வீட்டுக்கே போகல. அந்த அளவுக்கு ஆர்வத்துடன் உழைத்தார்.
இந்தப் படத்தில என் நண்பர் நரேன்கூட நடிச்சது சந்தோஷமான விசயம். வாழக்கையில் எதை வேண்ணாலும் நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய நண்பர் அவர்.
இது ஒரு மல்டி ஹீரோ படமா இருக்கும். இந்தப் படத்தில எல்லோரும் அவ்வளவு நேர்த்தியா உழைச்சிருக்காங்க. ஒவ்வொரு கேரக்டரும் இந்தப் படத்தில வித்தியாசமா இருக்கும். இந்தப் படத்தில் நான் ஒரு பகுதிதான். எல்லோருக்குமான பகுதி சரியா அமைஞ்சிருக்கு.
எனக்கு லாரி ஓட்டறது ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்தப் படத்தில எனக்கு பழைய லாரிய கொடுத்துட்டாங்க. லாரி ஓட்டறது எவ்வளவு கஷ்டம்னு அப்பத்தான் தெரிஞ்சது.
இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை பெறும். எல்லோருக்குமே பெரிய பெயரை வாங்கித் தரும். ரசிகர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.



















