full screen background image

பெத்தி – சினிமா விமர்சனம்

பெத்தி – சினிமா விமர்சனம்

நடிகர்கள் :

ராம் சரண் @ பெத்தி

ஜான்வி கபூர் @ அச்சியம்மா

சிவ ராஜ்குமார் @ கௌர் நாயுடு

ஜகபதி பாபு @  அப்பல சூரி

திவ்யேந்து சர்மா @ ராம் புச்சி

பொமன் இராணி

தொழில் நுட்பக் குழு :

இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சனா

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்

தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா

இசை: A.R. ரஹ்மான்

ஒளிப்பதிவு: R. ரத்னவேலு

தயாரிப்பு வடிவமைப்பு  :  அவினாஷ் கொல்லா

படத்தொகுப்பு: நவீன் நூலி

நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

பத்திரிக்கை தொடர்பு : யுவராஜ்.

இந்தியாவில் வாழும் ஒரு மனிதனுக்கு எந்த ஒரு அடையாளமும் இல்லை என்றால் அவன் என்ன செய்வான்? அடையாளம் இல்லாதவர்களுக்கு மாநில, மத்திய அரசிடம் இருந்து எதுவும் கிடைக்காது. ஆனால், அவர்களும் இந்த நாட்டில் வாழ தகுதி உள்ளவர்கள். வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் குடும்பம், குழந்தை என்று ஒன்று இருக்கிறது. அதற்காக வேணும் அவர்கள் உழைத்து சம்பாதித்து பணம் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

“உங்களுக்கான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் நீங்கள் பெற்று வாருங்கள். அதன் பின்புதான் எந்த அரசாக இருந்தாலும் உங்களை திரும்பிப் பார்க்கும்” என்று ஹீரோவிடம் அரசு அதிகாரிகள் சொல்ல அந்த ஒற்றை அடையாளத்தை பெறவும் தான் சார்ந்த சமூகத்தின் தேவைகளுக்காக அவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பெத்தி என்ற ஒரு இந்திய இளைஞன் எவ்வளவு கஷ்டப்படுகிறான்? என்ன செய்கிறான்?.. எப்படி தன்னுடைய சமூக கூட்டத்திற்கு ஒரு அடையாளத்தை பெற்று தருகிறான் என்பதுதான் இந்த பெத்தி படத்தின் கதை கரு.

ஒரு மலைப்பிரதேசத்தில் சரியான சாலைகூட இல்லாத ஒரு வழியில் காட்டுக்குள் இருக்கும் ஒரு கூட்டத்தின் ஆண்கள் எல்லாம் மாதத்தில் 29 நாளும் அடிவாரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் சர்க்கரை தயாரிக்கும் சின்ன தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்கள்.

மாதத்திற்கு ஒரு நாள் தங்களுடைய குடும்பத்தினரை பார்ப்பதற்காக மலை ஏறுவார்கள். அவர்களுடைய கிராமத்தை தாண்டித்தான் ரயில்கள் செல்கின்றன. ஒரு ஐந்து நிமிடம் அந்த இடத்தில் ரயில் நின்றால் தங்களுடைய குடும்பத்தை பார்க்க 18 மணி நேரம் நடக்கும் அந்த மனிதர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.

ஆனால், “அந்த இடத்திற்கு எந்த ஒரு பெயரும் இல்லை. அந்த இடத்தில் குடியிருக்கும் மக்களுக்கு எந்த அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் இந்திய அரசு தரவில்லை. அதனால் ரயிலை இங்கே நிறுத்தமாட்டோம்” என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.

இந்த தனிப்பட்ட ஒரு அங்கீகாரத்தை பெறுவதற்காக தனக்கு இயல்பாகவே கடவுள் கருணையால் கிடைத்திருக்கும் விளையாட்டு திறமையை பயன்படுத்தி தன்னுடைய அடையாளத்தை பெற முயல்கிறார் ராம் சரண். ஆனால் முடியவில்லை.

சரி கிரிக்கெட்டில்தான் நம்மை விட்டுவிட்டார்களே வேறு விளையாட்டுக்கு போவோம் என்று நினைத்து மல்யுத்தத்தில் இறங்குகிறார். அவருடைய குருவான சிவராஜ்குமார் ராம்சரண் மீது மிகுந்த அக்கறை கொண்டு மல்யுத்தத்தில் ராம் சரணுக்கு நிறைய ட்ரைனிங் கொடுத்து வளர்க்கிறார்.

ஆனால் இங்கும் அதே அடையாள அட்டையும், அங்கீகாரமும் குறுக்கே வந்து நிற்க அவரால் இந்தப் போட்டியிலும் விளையாடவே முடியாத ஒரு சூழலில் மாட்டிக் கொள்கிறார்.

இந்த மன விரக்தியில் அவர் எடுக்கும் ஒரு முடிவு மீண்டும் இன்னொரு விளையாட்டுக்குள் அவரை தள்ளுகிறது. இத்தனை துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்த பின்பும் ஏதோ ஒரு வகையில் நான் என்னுடைய இனத்திற்கு மிகப் பெரிய பெயரை பெற்று தருவேன் என்று நினைத்து ராம்சரண் ஒரு முடிவெடுக்கிறார்.

அந்த முடிவினால் அவரே நினைக்காத, எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு அடையாளமும் அங்கீகாரமும் அவருக்கு மட்டுமல்ல; அவரைச் சார்ந்திருக்கும் கிடைக்கிறது.

அந்த அங்கீகாரம்தான் என்ன? ராம்சரண் எடுத்த பெரிய முடிவுதான் என்ன? இப்போது ராம்சரண் எப்படி இருக்கிறார்? அந்தப் பகுதி மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை எல்லாம் நாம் வெள்ளித்திரையில்தான் பார்த்தே ஆக வேண்டும்.

ராம் சரண் கடந்த மூன்று வருடங்களாக வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இந்த ஒரு படத்திற்காகவே தன்னுடைய உயிரை கொடுத்து நடித்திருக்கிறார். .

முதலில் கிரிக்கெட் வீரர், பின்பு மல்யுத்த வீரன், கடைசியாக தடகள விளையாட்டு வீரன் என்று மூன்று விதமான கேரக்டர் ஸ்கெட்ச்சுகளுக்காக தன்னுடைய உடலை வருத்தியும், பெரிதாக்கியும் சிக்ஸ் பேக் வைத்தும் தன்னுடைய உடலை வருத்திக்கொண்டு இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது ஒன்றிற்காகவே ராம்சரணை நாம் வெகுவாகப் பாராட்டலாம்.

கிரிக்கெட் கிரவுண்டில், மல்யுத்த மைதானத்தில், தடகளப் போட்டி மைதானத்தில்… தான் சந்திக்கும் அத்தனை அவமானங்களையும், சேகரித்து வைத்துக் கொண்டு இறுதியில் தன்னுடைய கடின உழைப்பை போட்டு ஜெயித்துக் காட்டும் ராம் சரணின் அந்த வெற்றி புன்னகை விலை மதிப்பில்லாதது.

சண்டைக் காட்சிகளிலும் நடன காட்சிகளிலும் அவருடைய அப்பாவின் ஸ்டைல் கொஞ்சம், கொஞ்சம் தெரிகிறது. இருந்தாலும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தினால் தன்னுடைய சமூகம் படும் கஷ்டத்தை உணர்ந்து அவர் படும் கோபமும், வேதனையும், ஆத்திரமும் இந்தப் படத்தை வேறு ஒரு லெவலுக்கு கொண்டு சென்று இருக்கிறது.

இவருக்கான பில்டப்பை கொடுப்பதற்காக சிறு சில இடங்களில் வைத்திருக்கும் காட்சிகளெல்லாம் கொஞ்சம் போர் அடிப்பது போல நமக்கு தோன்றுகிறது. காதல் காட்சிகளில்கூட மிகப் பெரிய அளவுக்கு ரொமான்ஸ் பீலிங் வராமல் கொஞ்சமேனும் நடித்திருக்கிறார் ராம்சரண்.

நிச்சயமாக ராம் சரணின் திரையுலக வரலாற்றில் இந்தப் படம் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது பிடித்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஹீரோயினாக நடித்திருக்கும் ஜான்வி கபூருக்கு இந்தப் படத்தில் அதிகம் வேலை இல்லை அவரையும் கவர்ச்சி கோதாவில் இறக்கிவிட்டு தெலுங்கு ரசிகர்களை குளிர வைத்திருக்கிறார் இயக்குநர். அதோடு இவரும் சுருதிஹாசனும் இணைந்து ஆடும் குத்துப் பாடல் காட்சியில் சிறப்பாக நடனமும்ஆடியிருக்கிறார்.

வருடகணக்காக தன் ஊரில் ரயிலை நிறுத்த வேண்டும் என்று போராடி போராடி மனு கொடுத்து கொண்டே இருக்கும் ஜெகபதிபாபுவின் கேரக்டர் பரிதாபமானது. முதலில் சில காட்சிகளில் அவர்தான் என்பதை ஊகிக்க முடியாத அளவுக்கு தன்னுடைய மேக்கப்பிலும், நடிப்பிலும் வித்தியாசத்தை காண்பித்து இருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

மற்றும் மல்யுத்த வாத்தியாராக நடித்திருக்கும் சிவராஜ்குமார்.. ஒரு கண்டிப்பான ஆசிரியர் எப்படி இருப்பாரோ அப்படி நடித்து இந்தப் படத்திற்கு பூஸ்ட் கொடுத்திருக்கிறார்.

டெல்லியில் விளையாட்டு துறை மந்திரி இடம் டோஸ் வாங்கிக்கொண்டு ஊர் திரும்பவும் வழியில் ஒரு டிவிஸ்ட்டான திரைக்கதையினால் உள்ளூர் மக்களிடம் ஆதரவை பெற்றிருக்கும் அந்த பெத்தி யார் என்பதை தேடி கண்டுபிடிப்பதற்காக படம் முழுவதும் நடந்து கொண்டே இருக்கும் போமன் இராணியின் நடிப்பும் நம்மை பெரிதும் கவருகிறது. அதோடு இவருக்கு பெத்தியின் கதையை சொல்லும் அந்த நடிகரும் மலைவாழ் பழங்குடியினத்தவர் எப்படி இருப்பாரோ அப்படி அழகாக நடித்திருக்கிறார்.

ஜான் விஜயின் நடிப்பு படம் முழுவதும் கத்திக் கொண்டே இருப்பதுதானா? ஆனாலும் அவருடைய இந்த ஸ்டைலான வசன உச்சரிப்பும், நடிப்பும் சிறப்புதான்.

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு அபாரம். மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் ரத்னவேலுவின் கேமராதான் கண்ணாக இருக்கும். அது போலவே இந்தப் படத்திலும் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருப்பது போல படமாக்கி இருக்கிறார் ரத்னவேலு.

அந்த மலைப் பிரதேசமும், ரயில் செல்லும் பாதையும், மலைவாழ் மக்களின் வீடுகள் அமைந்திருக்கும் இடத்தையும் அவ்வளவு அழகாக பதிவாக்கியிருக்கிறார். அதோடு கூடவே கிரிக்கெட் கிரவுண்ட், மல்யுத்த மைதானம், தட களப் போட்டிகள் நடக்கும் மைதானம் என்று அத்தனை விஷயங்களையும் பதிவு செய்திருக்கும்விதம் சிம்ப்ளி சூப்பர். பாராட்டுக்கள்.

.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் எல்லாம் தாளம் போட வைக்கின்றன. அதிலும் சுருதிஹாசன் ஆடும் குத்துப் பாட்டு ரசிக்க வைக்கிறது. ஆனால் பின்னணி இசையில்தான் என்ன செய்வது என்று தெரியாமலேயே ரகுமான் அப்படியே விட்டு இருக்கிறார்.

படத் தொகுப்பாளர் இந்த படத்தில் நிச்சயமாக கை வைத்திருக்க வேண்டும். மூன்று மணி நேரம் 9 நிமிடங்கள் என்றிருக்கும் இந்தப் படத்தின் நீளம் அனாவசியமானது. சில இடங்களில் கத்தரி போட்டிருந்தால் படம் இன்னமும் கிரிப்பாக நமக்குக் கிடைத்திருக்கும்.

கதை, வசனம் எழுதியிருக்கும் இயக்குநர் புச்சி பாபு சீனா தன்னுடைய இயக்கத் திறமையை அழகாக காட்டியிருக்கிறார். அதே சமயம் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ராம் சரணை வைத்து இப்படி ஒரு படத்தை கொடுப்பதற்கும் அவர் ரொம்பவே யோசித்து இருக்க வேண்டும். அந்த யோசனைகள் திரைக்கதையில் மிக அழகாக தெரிகிறது.

இந்தியாவில் இன்னமும் இது போன்ற அடையாளப்படுத்தப்படாத கிராமங்களும், மலைப் பிரதேசங்களில் வாழும் ஆதிவாசிகளும் பழங்குடியினரும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் அரசு என்ற ஒரு அமைப்பு தங்களுக்கு என்னென்ன செய்கிறது உதவிகளை வழங்குகிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு இருக்கிறார்கள்.

அவர்களை எல்லாம் கண்டுபிடித்து மத்திய, மாநில அரசுகளுடன் ஒத்துழைக்க வைத்து.. அவர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க இந்த இயக்குநர் நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார். அந்த வகையில் இயக்குநரின் இந்த எழுத்து திறமைக்கும் நமது பாராட்டுக்கள்.

இன்னொரு பக்கம் உலகத்தில் இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்த நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே ஒரு விருதுதானா? இது எவ்வளவு அசிங்கம் தெரியுமா என்றெல்லாம் மத்திய அமைச்சர் கேட்கின்ற கேள்வி மிக மிக நியாயமானதுதான்.

அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் விளையாட்டு கமிட்டிகளில் இருக்கும் நிர்வாகிகள், தங்களுடைய மாமனார் வீட்டு காசு போல அந்த அமைப்பை குதறிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அமைச்சர் பேசுகின்ற அத்தனை வசனங்களும் நியாயமானதுதான். விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கேட்க வேண்டிய கேள்விகள்தான். இதை அப்படியே அப்பட்டமாக படமாக்கி இருக்கும் இயக்குநருக்கு மீண்டும் ஒரு பாராட்டுக்கள்.

முயற்சி ஒன்றுதான் எந்த துறையிலும் பிரகாசிக்க மிகப் பெரிய வழி. அதை எப்பொழுதும் கைவிடாமல் செய்ய வேண்டும் என்பதை இந்த படத்தின் மூலமாக நமக்கு சொல்லி இருக்கிறார் இயக்குநர் புச்சி பாபு சீனா.

அவருக்கும் அவரது குழுவினருக்கும் நமது பாராட்டுக்கள்.

RATING : 3.5 / 5

Our Score