சொல் வன்மையால் ஓருவரை வெல்லவும் முடியும், கொல்லவும் முடியும். எனவே நாவடக்கம் மிகவும் தேவை. அதனால்தான் வள்ளுவர் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார். அதே தலைப்பில் ஆதி நடிக்க ஒரு படம் உருவாகி வருகிறது.
ஒரு சூழலில் பேசப்படும் தவறான பேச்சு எவ்வளவு தூரம் கொடிய விளைவுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதே கதை.
கல்லூரியில் கடைசி ஆண்டில் படிக்கும் 4 இளைஞர்கள் டிசம்பர் 31ல் புத்தாண்டு கொண்டாடத் தொடங்க அப்போது அங்கு பேசப்பட்ட பேச்சு அவர்களைப்படுத்தும்பாடுதான் கதையின் போக்கு.
ஆதியின் அண்ணன் சத்யபிரபாஸ் பினி செட்டி படத்தை இயக்கியுள்ளார். இவர், அமெரிக்காவில் டைரக்ஷன் கோர்ஸ் முடித்து சிறந்த மாணவர் விருது பெற்றவர். அமெரிக்க அரசின் ஸ்காலர்ஷிப் உதவியும் பெற்றிருக்கிறார். படத்தைத் தயாரிப்பவர் ஆதியின் அப்பாவான ரவிராஜா பினி செட்டி. தெலுங்கில் சுமார் 60 படங்கள் இயக்கியுள்ள இவர், தனது ஆதர்ஷ சித்ராலயா சார்பில் முதலில் படம் தயாரிக்கிறார்.
ஆதியின் மூன்று நண்பர்களாக கார்த்திக், ஷ்யாம், சித்தார்த் என 3 புதியவர்கள் நடிக்கிறார்கள். நாயகியாக நிக்கி கல்ரானி தமிழில் அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன் மலையாளத்தில் 3 வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ‘ஷாஜகான்’ நாயகி ரிச்சா பலோட்டும் நடிக்கிறார்.
மேலும் பசுபதி, நாசர், பிரகதி, ராமராஜு, கிட்டி, நரேன், ‘பிதாமகன்’ மகாதேவன், ஹரீஷ் ஆகியோருடன் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியும் நடித்திருக்கிறார். மிதுன் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் இதுதான். ஒளிப்பதிவு ஷமி, இசை ப்ரவீன், ஷ்யாம்,ப்ரசன் என புதியவர்கள் மூவர். எடிட்டிங் தேசிய விருது பெற்ற சாபு ஜோசப், நடனம் தினேஷ்.
பட அனுபவம் பற்றி நடிகர் ஆதி பேசும்போது “இது எனக்கு ஆறாவது படம். நான் படங்களைத் தேர்ந்தேடுத்தே நடிப்பவன். இது வழக்கமான ஹீரோ ஹீரோயின், வில்லன் பார்முலா கதையல்ல.. கண் முன் காண்கிற யதார்த்த மனிதர்களின் கதை. மிகைப்படுத்தலோ போலியான பாசாங்கோ இருக்காது. இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமான கதையாக இருக்கும். இப்படத்தில் அண்ணனின் இயக்கத்தில் நடித்தது எனக்கு சௌகரியமாக இருந்தது. ”என்கிறார்.
படத்தின் சத்ய பிரபாஸ் கூறும்போது.”இது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது. இது ஒரு த்ரில்லர் படம் என்றாலும் ரொமாண்டிக் காமெடி, லவ், ப்ரண்ட்ஷிப் எல்லாமே இருக்கும். படத்தைப் பற்றி நானே பெரிதாகப் பேசக் கூடாது. ஆனால் படம் பார்த்தவர்கள் இதை பத்தோடு பதினொன்றாக நிச்சயமாக ஒதுக்கி விட முடியாத படமாக இருக்கும் “என்று உத்திரவாதம் தருகிறார்.
நூறு நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளவர்கள், தங்கள் படத்தை ‘நூறு நாள்’ வெற்றிப் படமாக்கும் முனைப்பில் இறுதிக் கட்ட பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னை, கோவா, ஹைதராபாத், பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெற்றுள்ளது.