ஒரு காட்டு பங்களாவின் பின்னணியில் நடைபெறும் சைக்கோ திரில்லர் கதையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கோபி, இந்தப் படத்துக்கான கதையை எழுதியும், இயக்கியும் உள்ளார்.
ஆழ்மனம் பற்றியும், அதன் சக்தியைப் பற்றியும் அறிந்தவர்களுக்கு இந்தப் படம் மிகவும் கனெக்ட் ஆகும்.
படத்தின் ஹீரோவான தினேஷ் சிறு வயதிலிருந்து தன்னுடைய தந்தையின் கண்டிப்பான குணத்தினால் வளர்க்கப்பட்டவர். அதனாலேயே இப்பொழுதைய இளம் வயதிலும் எப்போதும் அமைதியாகவே இருப்பார். பய உணர்வு உடனையே இருப்பார். யாருடனும் பேசுவதற்கு தயங்குவார்.
இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் இவரை ஒரு மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் அவருடைய தந்தை.
மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்கு தினேஷ் பதில் அளிக்கும்போது தன்னுடைய வாழ்வில் சமீபத்தில் நடந்த ஒரு விஷயத்தை மருத்துவரிடம் சொல்கிறார். அதன் பின்புதான் கதை விரிகிறது.
தினேஷ் பிராணாவை காதலித்து வருகிறார். பிராணா கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்தவர். அவருடைய குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவர். தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை கடைப்பிடிப்பவர். திருமணத்திற்கு முன்பே செக்ஸ் என்பதெல்லாம் அவருக்கு பிடிக்காது.
இந்த நேரத்தில் தினேஷின் நண்பன் தன்னுடைய காதலியுடன் கொல்லிமலைக்கு இன்பச் சுற்றுலா போகலாம் என்று முடிவெடுக்கிறார். தினேஷையும் அழைக்கிறார். தினேஷ் தன் காதலி பிராணாவையும் அழைக்கிறார். அவர் முதலில் மறுத்தாலும் பின்பு ஒத்துக் கொள்கிறார்.
கொல்லிமலையின் அடர்த்த காட்டுப்பகுதிக்கு வந்த காதலர்கள் அங்கே ஒரு ரிசார்ட்டில் ரூம் எடுத்து தங்குகிறார்கள். அன்றைய நாள் இரவில் தினேஷ் பிராணாவை செக்ஸூக்காக நெருங்க பிராணா மறுக்கிறார். தினேஷூடன் சண்டையிடுகிறார். பின்பு ஒரு கட்டத்தில் பிராணா சம்மதிக்க.. தினேஷ் பிராணாவுடன் உறவு கொள்கிறார். அப்போது திடீரென பிராணா இறந்து போகிறார்.
காதலி பிராணாவின் மரணத்தை எப்படி சமாளிப்பது என்கின்ற பிரச்சினையில் தினேஷுக்கும் அவர் நண்பனுக்கு இடையில் சண்டை நடக்க தினேஷ் தன் நண்பனையும் கொலை செய்து விடுகிறார். இதைத் தொடர்ந்து நண்பனின் காதலியையும் கொலை செய்து விடுகிறார். இப்போது, இந்த மூன்று கொலைகளையும் யாருக்கும் தெரியாமல் மறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் தினேஷ்.
அவருடைய இந்த முயற்சி வெற்றி பெற்றதா.. இல்லையா… அவர் நிஜமாகவே கொலை செய்தாரா.. இல்லை கொலை செய்தது போல் நடித்தாரா… அவர் எப்படி சிறைக்கு செல்லாமல் வெளியில் இருக்கிறார்… இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடைதான் இந்த சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த திரைப்படம்.
தினமலர் பத்திரிகையை உருவாக்கிய டி.வி. ராமசுப்பையரின் பேரனான தினேஷ்தான் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு அப்பாவி போன்ற தோற்றத்தில் இருக்கும் தினேஷ் இந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார்.
காதலியிடம் செக்ஸ் தேவைக்காக அவர் நெருங்கி கெஞ்சுகின்ற நேரத்திலும், பின்பு பொங்குகின்ற தருணத்திலும், அதன் பின்பு ஆத்திரம் பெரிதாகி படுகொலை செய்யும் பொழுது அவர் காட்டுகின்ற அந்த ருத்ரமும் அவருடைய வேறு பரிமாணங்களை காட்டுகிறது.
அவருடைய நண்பராக நடித்தவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார். அப்புக்குட்டியும் படத்தில் அனைவருக்கும் தெரிந்த முகமாக இருந்து படத்தை நகர்த்துவதற்கு பெரிதும் உதவி இருக்கிறார். தண்ணி அடித்து விட்டு அவர் ஆடுகின்ற ஆட்டமும் அசத்தல்.
நாயகிகளாக நடித்திருக்கும் பிராணாவும், சியாமளும் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள். கொஞ்சம் கூடுதலாக பிரணாவின் நடிப்பு இருக்கிறது. அவருடைய முகம் கவர்ந்து இழுக்கிறது. செக்ஸ்காக தன்னை நெருங்கும் தினேஷிடம் அவர் எரிந்து விழுவதும், கோபப்படுவதும் அழகான காட்சிகள்.
மனநல மருத்துவராக நடித்திருக்கும் தம்பி ராமையா கொஞ்சம் ஓவர் டோஸாக நடித்திருக்கிறார். பொதுவாக எந்த ஒரு மனநல மருத்துவரும் இது மாதிரி பேசவே மாட்டார்கள். அமைதியின் திருவுருவமாக இருப்பார்கள். ஆனால் இதில் அப்படியே உல்டாவாக பொரிந்து தள்ளும் வித்தியாசமான டாக்டராக நடித்திருக்கிறார் தம்பி ராமையா.
படத்தின் ஒளிப்பதிவும் தரமானதுதான். படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையில் ஒரு மீடியம் பட்ஜெட் படத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவை மிக சிறப்பான முறையில் தந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர். காட்டுப் பகுதிக்குள் இன்பச் சுற்றுலா சென்ற அந்த இடத்தை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டி இருக்கலாம். இசையும் பாடல்களும் ஓகே ரகம். பின்னணி இசை பகவாயில்லை ரகம்.
ஒரு மன உளவியல் வகையில் அமைந்திருக்கும் இந்தக் கதையை இயக்குநர் படத்திற்காக எடுத்து கையாண்டது நிச்சயம் பாராட்டுக்குரியதுதான். ஆனால் சொல்ல வந்தவிதம் முற்றிலும் தவறாக போய்விட்டதுதான் நமக்கு பெரும் வருத்தம்.
ஒருவன் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை மருத்துவர்கள் மட்டும்தான் கண்டறிய முடியும். ஆனால் அவன் ஏதோ பைத்தியம்.. லூசு.. கிறுக்கு… என்றுதான் நாம் சொல்லுவோம். ஆனால், இதை வைத்திய முறைகள் மூலம் மிகச் சிறப்பாக குணப்படுத்திவிட முடியும் என்பதை நமது பெரும்பாலான மக்கள் இப்போதுவரையிலும் உணரவில்லை.
இந்தப் படத்தின் கதையின்படி செக்ஸ்காக ஏங்கும் கதாநாயகனின் கேரக்டர் தவறானது. அது ஒரு வியாதி. அது ஒரு அத்துமீறல். அது காதலியோ அல்லது மனைவியோ… அவருக்கு விருப்பம் இல்லாமல் அவரை தொடுவதும் தவறு என்பதை சொல்ல வேண்டிய நிலையில் இன்றைய சமூகம் இருக்கிறது.
ஆனால் அதையெல்லாம் உடைத்து போடும் வகையில் ஒரு மன நோயாளி இப்படித்தான் இருக்கிறான்.. அவன் இப்படித்தான் பேசுவான்.. இப்படித்தான் கேட்பான்.. என்றெல்லாம் சொல்வது எத்த வகையிலும் நியாயம் இல்லை.
அதே போல் தினேஷூம் அவரது நண்பனும் காதலிகளை அழைத்துக் கொண்டு செக்ஸுக்காகவே இன்பச் சுற்றுலா வருவது போலவும், அவர்களுடைய அத்துமீறல்களையும் நியாயப்படுத்தியிருப்பது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் இப்போது பள்ளி பருவத்திலேயே கர்ப்பம் ஆவதும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதுமாக உலகம் கொண்டிருக்கும் நிலையில் இப்படியெல்லாம் படம் எடுத்துக் காட்டினால் படம் பார்க்க வரும் விடலைப் பசங்கள் என்ன செய்வார்கள் இயக்குநரே…
இது போன்ற சென்சிட்டி பிரச்சனைகளை மிகவும் சரியான முறையில்தான் கையாள வேண்டும். ஒரு மன நோயாளியின் கதையை படம் பார்க்கிறோம் என்றாலும் அது பிறர் மனதையும் பாதிக்காமல் இருக்க வேண்டும். அதை இன்றைய இயக்குநர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
திரைப்படம் என்பது மக்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத்தான் அல்லது அவருடைய களைப்பை போக்கும் வகையில் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கத்தான். ஆனால் அதை விடுத்து அவர்களுக்கு தவறான பழக்கங்களை சரி என்று சொல்லி அவர்களுடைய மனதில் விஷத்தைப் பதிய வைத்து அவர்களை குற்றம் செய்ய தூண்டக் கூடாது.
இதை உணராமலேயே இயக்குநர் கோபி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
RATING : 2.5 / 5









