எழுத்தாளர் அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ நாவல் திரைப்படமாகிறது..!

எழுத்தாளர் அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ நாவல் திரைப்படமாகிறது..!

பிரபல மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் 'தண்ணீர்' நாவலை படமாக்குகிறார் இயக்குநர் வஸந்த்.

'தண்ணீர்' நாவல் 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. 1991-ல் 'கணையாழி' என்ற இலக்கிய பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.  1970-களில் சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடிய ஒரு சூழலின் பின்னணியில் இந்த நாவல் அமைந்திருக்கிறது. கூடவே இரண்டு பெண்கள் இந்த சென்னை மாநகரத்தின் ஓட்டத்தில் தங்களது வாழ்க்கையை போராடி தக்க வைக்கிறார்கள் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜமுனா, சாயா என்ற சகோதரிகளின் வாழ்க்கை சரிதம் சென்னையின் தண்ணீர் பஞ்சத்துடனேயே கழிகிறது. திரைப்படத் துறையில் நுழைந்து பெரிய ஹீரோயினாக வர வேண்டும் என்று துடிக்கும் ஜமுனா எப்படி அயோக்கியர்களின் கைகளில் சிக்கி அலங்கோலமாகிறாள் என்பது இதில் இருக்கும் ஒரு பகுதி.  எழுத்தாளர் அசோகமித்திரன் அப்போது திரைத்துறையிலும் பணியாற்றி வந்ததால் தன்னுடைய அனுபவ அறிவை வைத்து சினிமா துறையின் இருட்டு பக்கங்களை இதில் வெளிச்சமாக்கியிருக்கிறார்.

இது மட்டுமில்லாமல் அப்போதைய அரசுகளின் அலட்சிய உணர்வு, மாநகராட்சி அதிகாரிகளின் அக்கறையின்மை.. சாலைகளின் அலங்கோலம்.. குடிதண்ணீர் லாரி டிரைவர்களின் அடாவடி வாழ்க்கை.. ரோடு காண்ட்ராக்டர்களின் ஊழல்.. வீட்டு உரிமையாளர்களின் அராஜகம், ஒரு குடும்பத்தினரின் பணம் தேடும் பிரச்சினை என்று பலவித விஷயங்களையும் தொட்டுத்தான் செல்கிறது இந்த நாவல்.

Thanneer Movie Launch Stills (4)

இந்தப் படத்தின் துவக்க விழா நேற்று காலை சென்னை அடையாறு ஷெரட்டான் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார். எழுத்தாளர் அசோகமித்திரனும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்தப் படத்தின் மூலம் பிரபல ஹிந்தி நடிகர் குல்சர் குரோவர் தமிழுக்கு அறிமுகமாகிறார். கன்னட ஹீரோயினான சாந்தினி சாஷா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். ரோல்ப் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் இந்தப் படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அசோகமித்திரன் எழுதிய இரண்டாவது நாவல் இதுதான். இப்போதுவரையிலும் அவருடைய பெஸ்ட் செல்லர் வரிசையில் இடம் பிடித்திருக்கிறது. 1993-ல் புத்தகமாக வெளிவந்து மீண்டும் 1995 மற்றும் 1998-ல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

எழுத்தாளர் சாவியின் மாணவரான வஸந்த் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே பத்திரிகையுலகில் இருந்தவர்தான். தீவிர இலக்கியவாதியான இயக்குநர் வஸந்த் இந்த நாவலை படமாக்க தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. ஏற்கெனவே இயக்குநர் வஸந்த், 'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற சா.கந்தசாமி எழுதிய கதையை தூர்தர்ஷனுக்காக படமாக்கியிருக்கிறார்.

Thanneer Movie Launch Stills (27)  

"எனக்கு அசோகமித்திரன் மீது காதல் இருந்ததாலேயே அவருடைய ஏதாவது ஒரு நாவலையாவது படமாக்கிவிட வேண்டும் என்று துடித்தேன். அதில் முதன்மையாக எனக்குத் தெரிந்த்து இந்த்த் தண்ணீர் நாவல்தான். அதனால்தான் முதலில் இதை எடுத்துக் கொண்டேன்.." என்கிறார் வஸந்த்.

நாவல்களெல்லாம் படமாகும்போது நாவலில் இருந்தவற்றில் கால்வாசிகூட இல்லை என்றுதான் இதுவரையிலும் புலம்பல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இந்தக் கதையில் அப்படி செய்யவே முடியாது. ஏனெனில் 'தண்ணீர்' நாவலே ஒரு திரைப்பட கதைதான்.. ஒரு சினிமாதான்..!

அதோடு இன்னொரு செய்தி.. இதுவரையிலும் ‘வஸந்த்’ என்றே அறியப்பட்ட இயக்குநர் வஸந்த், இனிமேல் இந்தப் படத்தில் இருந்து ‘வஸந்த் சாய்’ என்று அழைக்கப்படுவாராம்..!

பெயர் மாற்றமும், இந்தத் தண்ணீர் திரைப்படமும் அவருக்கு திரையுலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்க வாழ்த்துகிறோம்.!