பழம்பெரும் நடிகர் திரு. V.S. ராகவன் இன்று மாலை 5.50 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.
சில நாட்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோய்வாய்பட்டு தி.நகரில் உள்ள டிவெல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஸ்ரீனிவாசன் மற்றும் கிருஷ்ணா என இரு மகன்கள் உள்ளனர்.
1925-ம் ஆண்டு காஞ்சிபுரத்தை அடுத்துள்ள வெம்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்து, செங்கல்பட்டிலும், தாம்பரத்திலும் பள்ளிப் படிப்பை முடித்தார்.
ஆரம்ப காலத்தில் பிரபல எழுத்தாளர் துமிலனின் ‘மாலதி’ என்ற இதழில் துணை ஆசிரியராக வேலை பார்த்தார் வி.எஸ்.ராகவன். அப்போது சென்னையில் பிரபலமாக இருந்த அமெச்சூர் நாடகக் குழுக்களை பார்த்த பின்பு முழு நேர நாடகக் கலைஞனாக மாறினார்.
இவருடைய ஸ்டைலான ஆங்கில உச்சரிப்பும் நாடகங்களில் வி.எஸ்.ராகவன் தனித்தியங்க உறுதுணையாக இருந்தது.
துவக்கத்தில் வி.எஸ்.கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தவர் தனக்கென்று சொந்தமாக 1949-ல் ‘இந்தியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ என்ற நாடகக் குழுவை ஆரம்பித்து நாடகங்களை இயக்கினார்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இவரது நாடக் குழுவில் நடித்தும் இருக்கிறார். இவர்களுக்காக நாடகங்களை எழுதி, இயக்கியும் உள்ளார்.
1954-ம் ஆண்டு வெளிவந்த ‘வைரமாலை’ என்ற படத்தின் மூலம்தான் முதன்முறையாக தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார்.
வி.கே.ராமசாமியை போலவே மிக இளம் வயதிலேயே அப்பா, தாத்தா கேரக்டர்களில் நடிக்கத் துவங்கினார்.
மேடை நாடகத்தில் துவங்கி சினிமாக்களிலும் இதே வேடங்கள் இவருக்குக் கிடைத்துவிட அதையே மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்.
‘பொம்மை’, ‘சுமைதாங்கி’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘கள்வனின் காதலி’, ‘சாரங்கதாரா’, ‘காத்திருந்த கண்கள்’, ‘கர்ணன்’, ‘பட்டணத்தில் பூதம்’, ‘இரு கோடுகள்’, ‘புன்னகை’, ‘குறத்தி மகன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ என்று வருடந்தோறும் வெளியாகும் படங்களில் 90 சதவிகித படங்களில் இடம் பிடித்திருந்த வி.எஸ்.ராகவன், எம்.ஜி.ஆரின் பிற்காலத்திய அனைத்து படங்களிலுமே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த தலைமுறை முடிந்த புதிய தலைமுறையிலும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘கல்யாணராமன்’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘ருசி’, ‘ராகவேந்திரர்’, ‘நானும் ஒரு தொழிலாளி’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘ஹேராம்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘காமராஜ்’, ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ‘அறை எண் 305-ல் கடவுள்’, ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’, ‘மகிழ்ச்சி’, ‘கலகலப்பு’, ‘சகுனி’, ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டால் பாலகுமாரா’, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ ஆகிய படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார்.
இயக்குநர் சிம்புதேவன் இயக்கிய அனைத்து படங்களிலும் வி.எஸ்.ராகவன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1951-ல் ‘சந்திரிகா’, 1957-ல் ‘சமயசஞ்சீவி’ ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார்.
இவரும் நாகேஷும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். நாகேஷ் நடிக்கப் போகும் சினிமாக்களில் வி.எஸ்.ராகவனும், வி.எஸ்.ராகவன் நடிக்கும் சினிமாக்களில் நாகேஷிற்கும் வேடம் கேட்பது அப்போது இருவரின் பழக்கமாக இருந்ததாம்.
வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜனை போலவே இவரும் சிவாஜிகணேசனின் டீம் என்றே கோடம்பாக்கத்தில் அழைக்கப்பட்டவர். சிவாஜியின் வயதில் இருந்தாலும் அவருக்கே அப்பாவாகவும் நடித்தவர்.
1980-களின் அநேக படங்களின் நீதிபதி வேடத்திற்கு இவரும் வி.எஸ்.கோபாலகிருஷ்ணனும்தான் போட்டோ போட்டி போட்டார்கள். இவருடைய ஸ்டைலான, அழுத்தமான உச்சரிப்பு இயக்குநர்களுக்கு மிகவும் பிடித்ததிலாலும், டெடிகேஷன் என்னும் வார்த்தைக்கு அர்த்தமுள்ள நடிகராகவும் இருந்ததால்தான் இத்தனையாண்டு காலமும் அவரால் நடிக்க முடிந்தது.
சினிமா என்றில்லாமல் சீரியல்களில்கூட நடித்தார். கே.பாலசந்தர் இயக்கிய அண்ணி சீரியலில் தாத்தா கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து ரேகா ஐ.பி.எஸ்., வள்ளி, பைரவி போன்று பல சீரியல்களில் நடித்தும் வந்தார்.
சாகும்வரையிலும் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே வி.எஸ்.ராகவனின் ஆசையாக இருந்தது. உடல்நலக் குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றிருக்கும் வி.எஸ்.ராகவனுக்கு சில சினிமா அமைப்புகள் வாழ்நாள் சாதனையாளர் விருதினை கொடுத்து கவுரவம் செய்திருந்தன.
அன்னாரது இறுதிக் காரியம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை பெசன்ட் நகர் மயானத்தில், நடைபெற உள்ளது.
இவருடைய வீட்டு முகவரி : 6, ஸ்கூல் வியு ரோடு, RA புரம், ராஜா முத்தையா பள்ளி அருகில்.
பெரியவர், கலைஞர் வி.எஸ்.ராகவனுக்கு எமது அஞ்சலிகள்..!