நடிகர் ஆர்யா மீது ஜெர்மானிய பெண் அளித்த பண மோசடி புகாரின் நிலை என்ன? – உயர்நீதிமன்றம் கேள்வி!

நடிகர் ஆர்யா மீது ஜெர்மானிய பெண் அளித்த பண மோசடி புகாரின் நிலை என்ன? – உயர்நீதிமன்றம் கேள்வி!

நடிகர் ஆர்யா தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி 70 லட்சம் ரூபாய்க்கு மேல் கடனாக வாங்கிவிட்டு தன்னைத் திருமணமும் செய்து கொள்ளாமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக  ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் தமிழக சிபிசிஐடி போலீஸிடம் புகார் அளித்திருந்தார்.

அந்த மனு மீது சிபிசிஐடி போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இந்தப் புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடும்படி விட்ஜாவின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த ஆர்யா தன்னிடம் 70 லட்சத்திற்கு ரூபாய் மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், பணத்தை திரும்ப கேட்ட போது, தன்னுடைய வீட்டுக் கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்னும் நடிகையுமான சாயிஷாவின் பெற்றோர் உறுதியளித்ததால் இந்தத் திருமணத்துக்கு சம்மதித்ததாக தன்னிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார் விட்ஜா.

இந்நிலையில் இந்த மனு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், “ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை-3’, ‘இரண்டகம்’ ஆகிய படங்கள் வெளியாகிவிட்டால் தனக்கு வர வேண்டிய பணம் கிடைக்காமல் போகும் எனவும், இந்த வழக்கு முடியும்வரை இந்தப் படங்கள் வெளியாகவும் தடை விதிக்க வேண்டும்” என்றும் வாதிட்டார்.

மேலும், சிபிசிஐடியிடம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிபிசிஐடி தரப்பில், “இந்தப் புகார் மீதான தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Our Score