கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படம்தான் தமிழில் வெளிவந்த முதல் உலக சினிமா என்று இன்றைக்கும் தமிழ் சினிமாவின் அறிவுஜீவி விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஆனால் அந்தப் படம் வெளியான வேகத்திலேயே சரியான பிரமோஷன் இல்லாத காரணத்தினால் தியேட்டர்களைவிட்டு தூக்கப்பட்டது. பாராட்டுக்களை அள்ளிய அத்திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, அடுத்து படங்கள் இயக்காமல் பல்வேறு இயக்குநர்களிடத்தில் கதை உரையாடலில் உதவி செய்து வந்து கொண்டிருந்தார்.
இப்போதுதான் மிகச் சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் மலையாள நடிகரான பஹத் பாசில் இந்தப் படத்தின் மூலமாக தமிழுக்கு வருகிறார். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இத்தனை பெரிய தொழில் நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்திருப்பதன் காரணம் இப்போதுதான் தெரிகிறது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடிக்கிறாராம். இதற்கான படப்பிடிப்பு இன்று நடந்துள்ளது. அதில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடித்த காட்சிகளை செல்போனில் சுட்டு இப்போது இணையத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
ரெமோ படத்தில் ஹீரோயின் கீர்த்தி சுரேஷையே தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவுக்கு அழகான பெண்ணாக மாறிய சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக ஒரிஜினல் விஜய் சேதுபதியை அடையாளம் தெரியாத அளவுக்கு பெண் வேடத்தில் மாற்றியிருக்கிறார் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா.
எப்படியோ.. படம் இயக்குநருக்கும், தமிழ்ச் சினிமாவுக்கும் பெயர் சொல்லும் படமாக வந்தால் சரி..!