திருக்குமரன் எண்ட்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘அதே கண்கள்’.
இந்தப் படத்தில் கலையரசன், ஜனனி ஐயர், ஷிவதா நாயர், பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ‘ஊமை விழிகள்’ படத்தின் இயக்குநரான அரவிந்தராஜ், இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், கலை – விஜய் ஆதிநாதன், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், ஒளிப்பதிவு – ரவிவர்மன் நீலமேகம், இசை – ஜிப்ரான், பாடல்கள் – உமாதேவி, பார்வதி, படத் தொகுப்பு – லியோ ஜான்பால், வசனம் – முகில், கதை, திரைக்கதை, ரோகின் வெங்கடேசன், முகில், இயக்கம் – ரோகின் வெங்கடேசன். இவர் இயக்குநர் விஷ்ணுவர்த்தனிடம் இணை இயக்குநராகப் பயின்றவர்.
சமையற்கலைஞனான ஹீரோ வருண் கண் பார்வை இல்லாதவன். தனியாக ஒரு ரெஸ்ட்டாரெண்ட் நடத்தி வருகிறான். பத்திரிகையாளரான சாதனா வருணின் நீண்ட நாள் தோழி. அவனை மனதார விரும்புகிறாள். அதே சமயம் வருண் துணிக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் தீபா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். அந்தச் சந்திப்பு அவர்களுக்குக் காதலாக கனிகிறது.
மூன்று பேரும் அவரவர் திருமணக் கனவினை அசைபோட்டபடியிருக்க.. ஒரு நாளில் நடக்கும் ஒரு நிகழ்வு அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. இந்த நிகழ்வினால் ஏற்படும் அசம்பாவிதங்களும், திருப்பங்களும் அவர்களது வாழ்க்கையில் எப்படி விளையாடுகின்றன. மூவரின் கதியும் என்னவானது என்பதுதான் படத்தின் கதை, திரைக்கதை.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன், “ஹீரோ வருண் கண்பார்வையில்லாதவர் என்பதால் டைட்டில் இதற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டுமே என்றெண்ணிதான் ‘அதே கண்கள்’ என்ற தலைப்பை தேடிப் பிடித்து வாங்கி வைத்திருக்கிறோம்.
மூன்று பேர் பங்கு கொள்ளும் முக்கோணக் காதல் இதில் இருந்தாலும் படத்தில் காதலே பிரதானமல்ல. ஆனால் ஆணுக்கும், பெண்ணுக்குமான புரிதல்கள் இதில் முக்கியப் பங்காக இருக்கிறது.
ஒரு சம்பவம் எப்படி அந்த மூவரையும் பாதிக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்பதுதான் திரைக்கதை. இப்போதைய ஜெனரேஷனுக்கு ஏற்றாற்போல் காதலையும், அதனால் ஏற்படும் விளைவுகளை எப்படி அணுகுவது என்பது பற்றியும் இதில் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்.
இதில் வருணாக கலையரசனும், சாதனாவாக ஜனனி ஐயரும், தீபாவாக ஷிவதா நாயரும் நடித்திருக்கிறார்கள். பாலசரவணன் கதையை நகர்த்தும் ஒரு முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
ஒரு பக்கம் பார்த்தால் இந்தப் படம் காதலும், திகிலும் கலந்த ஒரு ரொமாண்டிக் திரில்லர் படம். முதலில் பார்வையற்றவராக இருக்கும் ஹீரோ வருணுக்கு இடையில் பார்வை திரும்பக் கிடைக்கிறது. இந்தப் பார்வை கிடைக்கும்வரையிலும் இவர்கள் மூவருக்கும் இடையில் முக்கோணக் காதல் இருக்கும். ஆனால் வருணுக்கு கண் பார்வை கிடைத்தவுடன் எப்படி கிடைத்தது என்பது தொடர்பான பிரச்சினையில் கதை திரில்லராக மாறிவிடும்.
ஜிப்ரான் மிக அழகாக இசையமைத்திருக்கிறார். கன்னியாகுமரி, ஈரோடு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஒரு பாடல் காட்சி தவிர மற்றவைகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. மீதமிருக்கும் பாடல் காட்சி அடுத்த வாரம் படமாக்கப்பட்டவுள்ளது..” என்றார்.
‘அதே கண்கள்’ படத்தி்ன் டீஸர் இது :