பெரும்பாலும் ரசிகர்களிடையே புகழ் பெற்ற வாக்கியங்கள் படங்களின் தலைப்பாக மாறுவதுண்டு. அதிலும் சமீபமாக பல நகைச்சுவை வசனங்கள், சில படங்களின் தலைப்பாக மாறுவது பெருகி வருகிறது. இது போன்ற ஒரு தலைப்புதான் இந்த ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’.
Ignite films மற்றும் Innostorm எண்டெர்டைன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ படத்தை எழுதி இயக்குபவர் ஏ .எல்.அபநிந்திரன். விளம்பரத் துறையிலும், வர்த்தகத் துறையிலும் ‘அபி’ என்ற பெயரில் ஏற்கெனவே பிரபலமானவர் இவர். இயக்குனர்-ஒளிபதிவாளர் ராஜீவ் மேனனிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றியவர் இவர்.
சாரங்கராஜன் ஒளிபதிவில், ‘காதல்’ படத்தின் பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்த ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைக்க, ஆண்டனி படத் தொகுப்பில், ஏ.செந்தில் குமாரின் கலை வண்ணத்தில், கபிலன் வைரமுத்து மற்றும் புகழேந்தி பாடல்கள் இயற்ற, புதுமுகங்களோடு சில பரிச்சயமான முகங்களும் நடிக்கும் இந்த படத்தை தயாரிப்பவர் தேவன்ஷு ஆர்யா. இணை தயாரிப்பு பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மற்றும் ஷெட்டி ஆகியோர்.
இந்தப் படம் பற்றி பேசிய இயக்குநர் அபநிந்திரன், “எந்தப் படத்துக்கும் விளம்பரம் செய்ய தலைப்புதான் மிக முக்கிய ஆயுதம். அதிலும் குறிப்பாக குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகள் மிகவும் அவசியம். ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்ற இந்தத் தலைப்பு பிரபலமானது என்பதற்காக மட்டும் அல்ல, இந்தக் கதைக்கும் மிக பொருத்தமானது என்பதால்தான் இதனை வைத்திருக்கிறோம்.
சமூகத்தில் நிலவி வரும் நம்பிக்கைகளும், மூடநம்பிக்கைகளும்தான் நமது வாழ்வின் நீரோட்டத்தை நிர்ணயிக்கிறது. அந்த உண்மையை சிரிப்பதுடன் சிந்திக்க வைக்கும் கதை அமைப்புடன் சித்தரிக்கும் படம்தான் இந்த ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’. நல்ல கதை அமைப்பும், நேர்த்தியான படப் பதிவும் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் நான். இந்த படம் எல்லா தரப்பினரையும் , வயதினரையும் எலா நிறத்தவரையும் அடையும் என்பதில் சந்தேகமே இல்லை..” என்று வெள்ளை மனதோடு சொல்கிறார் இயக்குனர் அபநிந்திரன்.