full screen background image

வீர வணக்கம் – சினிமா விமர்சனம்

வீர வணக்கம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், சாதனா, சித்திக், சுதீஷ், வி.கே.பைஜு, பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, முதுபெரும் கம்யூனிச போராளி பி.கே.மே​தினி, ஆதர்ஷ், சித்தங்கனா, ஐஸ்விகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு: விசாரத் கிரியேஷன்ஸ், இயக்குநர்: அனில் வி.நாகேந்திரன், பாடல் வரிகள்: நவீன் பாரதி, பாடகர்கள்: டி எம் எஸ் செல்வகுமார், சி.ஜெ. குட்டப்பன், யாசின் நிசார், ரவி சங்கர், சோனியா, இசை: எம் கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன் மற்றும் அஞ்சால் உதயகுமார், ஒளிப்பதிவு: கவியரசு, பத்திரிக்கை தொடர்பு : சதீஷ் (AIM).

நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை முதலில் துவக்கி இன்றுவரையிலும் செவ்வணக்கத் தோழர்கள் கேரளாவில் ஆட்சியில் இருப்பதற்கு காரணமாக இருந்த கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் தோழர் கே.பி. கிருஷ்ண பிள்ளையின் புரட்சிகர வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததுதான் இந்த ‘வீர வணக்கம்’ திரைப்படம்.

தமிழக கேரள எல்லையோரம் உள்ள கிராமம் ஒன்றில் பெரும் பணக்காரராக இருந்தாலும், ஜமீன்தார் தோரணையில் வாழ்ந்தாலும், அந்த ஊர் மக்கள் அனைவரிடமும் சாதி பார்க்காமல் அன்புடன் பழகி வரும் ஊர் பெரிய மனிதர் பரத்.

அவருடைய ஊரில் அவருடைய வீட்டில் எந்த ஒரு ஜாதி பிரிவினையும் காட்டாமல் மக்களோடு நல்ல முறையில் பழகி வரும் பரத் அந்த மக்களிடையே நல்ல பெயரையும் எடுத்திருக்கிறார்.

அதேசமயம் பக்கத்து ஊரில் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் கொடுமைகளை செய்கிறார் அந்த ஜமீன்தார். அந்த மக்கள் அந்த ஜமீன்தாரிடம் மாட்டிக் கொண்டு அல்லல்பட்டு கொண்டு இருக்கும் நிலை அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பரத் அவர்களுக்கு தைரியம் ஊட்டுகிறார். வழிகாட்டுகிறார்.

இறுதியாக கம்யூனிசம் என்கின்ற அந்த பெரும் தத்துவத்தை தனக்கே கற்றுக் கொடுத்த கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாக கிருஷ்ண பிள்ளையுடன் இணைந்து அப்போதைய ஆட்சியாளர்களை எதிர்த்து பெரும் புரட்சியும், போராட்டமும் நடத்திக் கொண்டிருந்த இப்போது 94 வயதில் இருக்கும் ‘மேதினி’ என்ற தோழரை சந்தித்து கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இவர்களுக்கு கூறுங்கள் என்கிறார்.

தோழர் மேதினி, கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைக்கிறார். எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கிருஷ்ணப் பிள்ளை எப்படி மறைந்தார் என்பதுவரையிலும் இந்த படத்தில் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்.

1940-களில் சென்னை ராஜதானியின் கட்டுப்பாட்டில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த அளவுக்கு கொடுமையாக நடத்தப்பட்டார்கள்? எவ்வளவு சாதியை பாகுபாடுகளை சந்தித்தார்கள்?

அந்த மக்கள் கூலி வேலை பார்த்தாலும் வேலைக்கேற்ற கூலி கிடைக்காமல் பெரும் துயரை சந்தித்த நேரத்தில் சோவியத் யூனியனில் பெரும் சித்தாந்தமாக வளர்ந்த அந்த கம்யூனிசத்தை கேரளாவில் ஊர் ஊராக நடந்து சென்று கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை பரப்பி மக்களை கம்யூனிஸ்டுகளாக, தோழர்களை மாற்றியமைத்த பெருமை தோழர் பி.கிருஷ்ணப் பிள்ளைக்கு உரித்தானது.

திருவிதாங்கூர் சமஸ்தானம் கிருஷ்ணப் பிள்ளையை கைது செய்ய உத்தரவிட்ட பின்பு கிருஷ்ணப் பிள்ளை பல ஊர்களில் மாறுவேடத்தில் தங்கி இருந்து மக்களிடையே புரட்சியை எழுப்பிக் கொண்டே இருந்தார். அப்போது அவர் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் அவரால் விழிப்புணர்வு பெற்ற மக்கள் நடத்திய போராட்டங்களையும் எடுத்துச் சொன்னதோடு 1948-ம் ஆண்டு தனது 42 வது வயதில் ஒரு ஊரில் தலைமறைவாக இருக்கும் நிலையில் பாம்பு கடித்து இறந்து போனது வரையிலும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கிறார் மேதினி. அதையே இங்கு படமாக ஆக்கி இருக்கிறார்கள்.

தோழர் கிருஷ்ணப் பிள்ளை கதாபாத்திரத்திற்கு சந்தேகமே இல்லாமல் அப்படியே கச்சிதமாக பொறுந்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.

கிருஷ்ணப் பிள்ளையின் கவர்ந்திழுக்கும் மந்திரமான பேச்சுக்கள்.. அவருடைய அன்பான, கரிசனமிக்க போராளியாக வலம் வந்து அன்றைய ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கிருஷ்ண பிள்ளைக்கு துணைகளாக இருந்தவர்களும் இங்கே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஏகே கோபாலன் போன்ற தலைவர்களையும் இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் காட்டி இருக்கிறார்கள்.

கம்யூனிச சித்தாந்தத்தை பரப்பும் வகையில் சமுத்திரக்கனி பேசுகின்ற பேச்சுக்களை வசனமாக அழகாக எழுதி இருக்கிறார்கள். வீரம் பொங்க ஒரு உணர்ச்சியை தூண்டக் கூடிய போராளியாக மாற்றக் கூடிய அந்த பேச்சுக்களை சமுத்திரக்கனி உச்சரிக்கும் பொழுது அவ்வளவு கனமாகவும் வசீகரமாகவும் இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பரத், பிரேம்குமார் ரமேஷ் பிஸ்ராடி, சுரபி லட்சுமி, ஆதர் சித்தனார் என்று பலருமே அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக காண்பித்திருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக இப்போதும் உயிருடன் இருக்கும் 94 வயது கம்யூனிஸ போராளியான மேதினி வேதனை பொங்க கிருஷ்ணப் பிள்ளையின் அந்த கதையை விரிவாக்கி சொல்லும்பொழுது கொஞ்சமும் இடறல் பிசிறல் இல்லாமல் 100 படங்களில் நடித்த அனுபவம் கொண்டவராக படத்தில் நடித்து காண்பித்திருப்பது பாராட்டுக்குரியது.

ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் படத்தொகுப்பாளர் என்று தொழில் நுட்பமும் இந்த படத்தில் சிறப்பாகவே செய்யப்பட்டுள்ளது. ஒரு போராளியின் வரலாற்று வாழ்க்கை என்றாலும் ஒரு சினிமாவாக நம்முடைய கண் முன்னே விரிந்து அதையும் இறுதிவரையில் நம்மை பார்க்க வைத்திருக்கும்விதமாய் இந்தப் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கடுமையாக பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

அப்போதைய காலகட்டத்தில் ஊர் ஊருக்கு நாட்டாமைகளும், ஜமீன்தார்களும், பண்ணையார்களும் ஊரில் உள்ள அனைத்து நிலங்களையும் தன் கையில் வைத்துக் கொண்டு வெறும் கூலியாட்களாக தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைத்தனமாக வைத்திருந்ததை அப்போதைய காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவாகத்தான் அந்த காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தே விலகிய கே.பி.கிருஷ்ணபிள்ளை ஏழை எளிய மக்களுக்கான ஒரு தத்துவமாக இந்த கம்யூனிசத்தை கையில் எடுத்து பரப்புரை செய்து இன்று வரையிலும் அந்த கம்யூனிசம் கேரளாவில் மறுமலர்ச்சி அடைய வைத்திருக்கிறார். இதற்கு முழுமுதற் காரணம் கே.பி.கிருஷ்ணபிள்ளைதான்.

வயதுக்கு மீறிய தோற்றத்தில் பெரிய மீசையை மட்டும் ஒட்ட வைத்துக் கொண்டு ஒரு பணக்கார கம்யூனிஸ்ட் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பரத்தும் தன்னுடைய நடிப்பை சிறப்பாகவே காண்பித்து இருக்கிறார்.

தன்னுடைய மகளின் காதல் தெரிந்தவுடன் அவர் பேசுகின்ற அந்த வசனங்களும் இப்போது தமிழ்நாடு இல்லாமல் இந்திய முழுவதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆணவக் கொலைகளுக்கும், அதை நாடக காதல் என்று போய் பிரச்சாரம் செய்பவர்களுக்கும் சம்மட்டி அடியாக அடித்திருக்கிறார் பரத்.

படத்தில் எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகிய ஐந்து பேர் ஆளுக்கு ஒரு பாடலாக பாடல்களுக்கு இசையமைத்து பின்னணியும் அமைத்திருக்கிறார்கள்.

இந்த இயக்குநர் நினைத்திருந்தால் இந்தப் படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுத்திருக்கலாம். ஆனால், பிரமாண்டமான காட்சிகள், மிகப் பெரிய செலவு வைக்கும் அடையாளம் கூட இல்லாமல் சாதாரணமாக நாம் ஒரு சின்ன புத்தகத்தை படிப்பது போலவே ஒரு மாபெரும் புரட்சியாளரின் வரலாற்றை இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும் சினிமா கலையாகவும் சேர்த்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன்.

உலகம் முழுவதும் உள்ள புரட்சியாளர்கள் அனைவருமே திரும்பத் திரும்ப சொன்ன ஒரு வார்த்தைதான் போராட்டம் இல்லாமல் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது என்பதுதான் இந்த படம் நம் முன் வைக்கும் தீர்வாகும்.

மக்களுக்காக போராடி மக்களோடு மக்களாக கலந்து அவர்கள் உரிமைக்காக போராடி போராடி களைத்துப் போய் தன் உயிரைவிட்ட அத்தனை தோழர்களுக்கும், சக தோழர்கள் கொடுக்கின்ற இறுதி மரியாதைதான் வீர வணக்கம் என்ற முழக்கம்.

அந்த வகையில் கேரளவில் கம்யூனிசத்தை விதைத்த தோழர் கே.பி.கிருஷ்ண பிள்ளைக்கு நம்முடைய வீர வணக்கம்.

RATING : 4 / 5

Our Score