full screen background image

பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை! தமிழ் திரையுலகம் ஏற்பாடு!

பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை! தமிழ் திரையுலகம் ஏற்பாடு!

மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக முதலில் அவர்களுக்கு ‘ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்’ என்கிற நிகழ்ச்சியை வருகிற 16-ம் தேதி கலைவாணர் அரங்கில் நடத்த உள்ளனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து இந்த விழாவை நடத்த உள்ளது.

பிலிம் சேம்பர் வளாகத்தில் அமைந்துள்ள மீட்டிங் ஹாலில் மேற்கண்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த தகவலை தெரிவித்தனர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி இது குறித்து கூறுகையில்:-

“தமிழ் திரைப்படத் துறையில் விடிவெள்ளியாக தோன்றி நூற்றுக்கணக்கான இயக்குநர்களையும், நடிகர், நடிகைகளையும், தயாரிப்பாளர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் உருவாக்கிய சாதனையாளர் இயக்குநர் பாரதிராஜா.

தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை உயர்த்திப் பிடித்த உன்னதமான படைப்பாளி பாரதிராஜா.

திரைக்கதைக்கு இந்திய அளவில் புகழ் சேர்த்தவர் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்.

இந்த இருவருமே தமிழ் திரைப்பட துறையை இந்திய அளவில், உலக அளவில் உயர்த்திய உன்னதமான கலைஞர்கள்.

இந்த இரண்டு கலைஞர்களின் நினைவை போற்றும் விதமாக ‘ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்’ என்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்த உள்ளோம்.

தமிழ் திரைப்படத் துறை வளர்ச்சி அடைவதற்கு அவர்கள் இருவரின் பங்கு என்னவாக இருந்தது என்கிற ஒரு அடையாளத்தை உணர்த்தும் நிகழ்வாக இந்த விழா இருக்கும்.

பாரதிராஜா அவர்கள் உயிரோடு இருந்தபோது அவருக்கு ஒரு பிரம்மாண்டமான விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, அவரிடம் தெரிவித்து இருந்தோம்.

அதற்கு “ஆல மர வேருக்கு விழுதுகள் எடுக்கும் விழா” என்று பெயரும் வைத்திருந்தோம்.

அவரிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள், அவர் வழியில் உதவியாளராக இருந்து இயக்குநராக உயர்ந்தவர்கள் எல்லோரும் இணைந்து அந்த விழா நடத்த முடிவு செய்திருந்தோம்.

அப்போது திடீர் என்று பாரதிராஜாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால், அது நடைபெறாமல் போனது.

அவர் மறைவதற்கு முன்பு இயக்குநர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு விருந்து வைத்தார்.

அப்போது, “கொடைக்கானலுக்கு போகிற வழியில் நான் ஒரு இடம் வாங்கி இருக்கிறேன். அங்கு ஒரு மண்டபம் கட்டப் போகிறேன். அதில் என்னுடைய படங்கள், படப் பாடல்கள் எல்லாம் வைக்க வேண்டும். அங்குதான் நான் இருப்பேன். நீங்க எல்லாம் அங்கு வந்து எனக்கு உதவி செய்யணும். அது ஐயப்பன் கோவிலுக்கு செல்கிற வழி” என்று சொன்னார்.

மேலும் “அந்த இடத்தில்தான் என்னை அடக்கம் செய்ய வேண்டும்” என்றும் கூறி இருந்தார். அதை அவரால் பண்ண முடியவில்லை.

அந்த இடத்திலேயே அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்டலாம் என்று நான், சித்ரா லட்சுமணன், பாக்யராஜ் சார், ராதிகா மேடம் எல்லோரும் உட்கார்ந்து பேசினோம். அவருக்கான ஒரு விழாவை நடத்துவது முடிவு செய்தோம்.

அடுத்த ஒரு வாரத்திற்குள்ளேயே பாக்யராஜ் இறந்தது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதை எப்படி பண்றது? பண்ண முடியாமல் போய்விட்டது.

இப்போது பார்த்திபன் வந்து “பாக்கியராஜ் சார், பாரதிராஜா இரண்டு பேருக்குமே சேர்த்து விழா நடத்தலாம். இது ஒரு நல்ல நிகழ்ச்சியாக எல்லோரும் சேர்ந்து பண்ணலாம்” என்று கூறினார்.

அதனால், தமிழ் திரைப்படத் துறையை ஒட்டு மொத்தமாக ஒன்றிணைக்கும் முயற்சியை செய்தோம். இது மாதிரி செய்யலாமா என்று கலந்துரையாடினோம்.

அது இப்போது சரியான ஒரு திட்டமிடலுடன் ஒரு நல்ல நிகழ்ச்சியாக, நினைவஞ்சலி மாதிரி இல்லாமல் ஒரு அடையாளமாக, படைப்பாளிகளுக்கும் ஒரு அடையாள நிகழ்ச்சியா இருக்கணும்னு முடிவு செய்தோம்.

இந்த நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்திருக்கிறோம். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அந்த நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் கடிதம் கொடுத்திருக்கிறோம். அதுபோல ராஜ்மோகன் அவர்களுக்கும் கடிதம் கொடுத்திருக்கிறோம்.

ரஜினி சார், கமல் சார் கலந்து கொள்வதாக கூறியிருக்கிறார்கள். எல்லா நடிகர்களும் கலந்து கொள்வார்கள். அதுபோல் இயக்குநர் சங்கத்திலிருந்து எல்லா இயக்குநர்களும் கலந்து கொள்வார்கள்.

மற்ற மாநிலங்களில் இருந்தும் பலரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். வெங்கடேஷ் கலந்து கொள்வதாக சொல்லி இருக்கிறார். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். மத்திய மந்திரிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். கேரளாவில் இருந்து சுரேஷ்கோபி வருவதாக கூறியிருக்கிறார். மம்முட்டி, மோகன்லாலுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். கர்நாடகத்திலிருந்தும் கேட்டு இருக்கிறோம். எல்லாருமே பாசிட்டிவ்வாக வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி மிக சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய அடையாளமாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியை எப்படி வடிவமைப்பது என்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல், இந்த இரண்டு பேருடைய வாழ்க்கையை பத்து நிமிடத்தில் சிறப்பான ஒரு ஆவணப் படமாக ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.

அதுபோல் அந்த மணி மண்டபத்தில் இரண்டு பேருக்குமான சிலையையும் வைக்க இருக்கிறோம். அது மிகச் சிறப்பாக இருக்கும். அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சி ஒரு வியாபாரமாக மாறும்போது அதில் வருகின்ற தொகையை பாக்யராஜ் சார், பாரதிராஜா சார் மணி மண்டப முன் வைப்புத் தொகையாக, தருவதற்கு அவர்களின் குடும்பத்தாரிடம் பேசியிருக்கிறோம்.

பாக்யராஜுக்கு கோபிசெட்டிபாளையம் பகுதியிலும், பாரதிராஜாவுக்கு அவருடைய சொந்த இடத்திலும் மணி மண்டபம் கட்டுகிறோம். நிகழ்ச்சி மட்டும் ஓரிடத்தில் மட்டுமே நடக்கும்.

இதில் வருகின்ற வருவாயை அறக்கட்டளை நிதியாக மாற்றி இரண்டு நிகழ்வுக்கும் பயன்படுத்துவோம். அவர்கள் மணி பண்டமும் கட்டுவதற்கான ஆரம்ப செலவாக வைத்துக் கொள்ள சொல்வோம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கட்டணம் இல்லை. சினிமாவில் ராஜா மாதிரி இருந்தார்கள். கோபுரமாக உயர்ந்து நின்றார்கள். அதனால், இந்த விழாவுக்கு பெயர் ‘ராஜா கோபுரங்களுடன் நினைவு உற்சவம்.’

இரங்கல் கூட்டம் கிடையாது. நினைவு உற்சவம். இரண்டு பேருமே நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள். சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்கள் நினைவாக, உற்சாகமாக தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாக அதை செய்ய இருக்கிறோம்.

அவர்களுக்கு கொடுக்கின்ற அடையாளம் அடுத்த நூற்றாண்டை தாண்டியும் இருக்க வேண்டும். அதுபோல் செய்ய முடிவு செய்து இருக்கிறோம்” என்றார்.

மேலும் ஜி.கே.தமிழ் குமரன், நடிகர் நாசர், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், டி.சிவா ஆகியோரும் பேசினார்கள்.

இந்த நிகழ்வில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி.கே.தமிழ்குமரன், செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கமலக்கண்ணன், இணைச்செயலாளர் சுஜாதா விஜயகுமார், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் துணைத்தலைவர் ரவிமரியா, இசையமைப்பாளர் தினா, இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர்கள் எம்.கபார், ஹரி முரளி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Our Score