full screen background image

நறுவீ – சினிமா விமர்சனம்

நறுவீ – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஹரீஷ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் .அழகு பாண்டியன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஹரிஷ் ஆலன், வின்சு ரேச்சல் சாம், வி.ஜே.பப்பு,  பாடினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, கேத்தரின் வருணா, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ். ராஜா சாரதா நந்தகோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்: .அழகு பாண்டியன்​, தயாரிப்பு நிறுவனம்: ஹரீஷ் சினிமாஸ், எழுத்து இயக்கம்: சுபாரக் முபாரக், இணை இயக்குனர்: ஜே. ஜெய் சங்கர், டைரக்ஷன் டீம்: நாகராஜ், ஜெகன், வினோத் குமார், பாலாஜி, பிரதீப், இசை: அஸ்வந்த், ஒளிப்பதிவு: ஆனந்த் ராஜேந்திரன், படத்தொகுப்பு: சர்பார்க் எம், கலை: சி.கே. சக்திவேல், பாடல் வரிகள்: புகழேந்தி கோபால், சங்கவி ஜி.வி, ஆடியோகிராபி: ராயல் ஸ்டுடியோ, ஒலி வடிவமைப்பு: ராயல் ஸ்டுடியோ, டிஐ: ராயல் ஸ்டுடியோ, வண்ணம்: கோகுல், ஆடை வடிவமைப்பாளர்: பிரியா, தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: வினோத் குமார், பத்திரிக்கை தொடர்பு : ஆர்.மணி மதன்.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகேயுள்ள மலைக் கிராமத்தில் அடர்ந்த வனப் பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட்டுக்கு ஆராய்ச்சி செய்வதற்காக வின்சு, ரேச்சல் சாம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் வருகிறார்கள்.  

அந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நுழையும் ஆண்கள் உயிருடன் திரும்பி வருவதில்லை. அவர்கள் வருடக் கணக்கில் திரும்பி வராத்தால் அவர்கள் உயிருடன் இல்லை.. கொல்லப்பட்டிருக்கலாம் என்பது அந்த உள்ளூர் கிராம மக்களின் நம்பிக்கை.

போக்குவரத்து வசதியில்லாத அந்தக் கரடு முரடான மலைப் பாதையில் வெகு தூரம் டூவீலரில்  சென்று ஓரிடத்தில் வண்டியை வைத்துவிட்டு மேலும் சில கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்கேயிருக்கும் மலை கிராமத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளிக்குச் சென்று, அந்த மலைவாழ் பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கிறார் ஆசிரியர் ஹரிஷ் ஆலன்.

தன்னுடைய அம்மா, நண்பர்கள் சொல்லியும் கேட்காமல் கல்விப் பணியைச் தொடர்ந்து செய்து வருகிறார் ஹரிஷ். மேலும் தனது முழு வருமானத்தையும் அந்தப் பள்ளி மாணவிகளின் கல்விக்காகவே செலவிடுகிறார்.

இந்நிலையில், ஒரு நாள் அந்த மலைக் கிராமத்துக்கு சென்ற ஆசிரியர் ஹரிஷ்  திரும்பி வரவில்லை. இப்போதுவரையிலும் அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலே கிடைக்கவில்லை. இதனாலேயே அந்தக் காட்டுப் பகுதிக்குள் மழைவாழ் ஜனங்கள் குறிப்பாக ஆண்கள் நுழைவதேயில்லை.

இந்த நிலையில்தான் காணாமல் போன தனது சொந்த தாய் மாமாவான ஹரிஷைத் இந்தக் குழுவுடன் வருகிறார் பாடினி குமார். மலைக்குச் செல்ல வந்தவர்களுடன் உள்ளூர் வழிகாட்டிகள் இருவரும் உடன் செல்கின்றனர்.

காட்டுக்குச் சென்றவுடன் அவர்களைச் சுற்றி பல வினோதமான, அமானுஷ்யமான விசயங்கள் நடக்கிறது. ஒரு கட்டத்தில், அந்தக் குழுவினர் தங்களை அறியாமலேயே ஆண்களுக்கு ஆபத்து விளைக்கும் அந்த வனப்பகுதிக்குள் நுழைந்து விடுகிறார்கள், அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஹரீஷ் ஒரு நல்ல மனம் கொண்ட ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய ஆசிரியர் பணியை தொண்டாக நினைத்து செய்து வருவதை சொல்லி தனது தாயிடமும், மற்றவர்களிடமும் சொன்னாலும், இவருக்கு அதிகமான காட்சிகளை வைக்காமல்விட்டதால் பெரிய அளவுக்கான நடிப்பு இவருக்குத் தேவைப்படவில்லை.

முக்கியக் கதாப்பாத்திரங்களான வி.ஜே.பப்புவும். அவரது காதலியான பாடினி குமாரும் கிடைத்த இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கொஞ்சம் சிரிக்கவும் வைத்துள்ளனர்.

மேலும் வின்சு ரேச்சல் சாம், ஜீவா ரவி, பிரவீணா, கேத்தரின் வருணா, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ். ராஜா, சாரதா நந்தகோபால் மற்றும் சிறுமி ஆகியோரின் நடிப்பும் கதைக்கு வலு சேர்த்துள்ளது.

இசைமைப்பாளர் அஸ்வந்தின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான். அதிலும் முதல் பாடலும், நடனமும் சிறப்புதான். ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரனின் கேமிரா அடர்ந்த காடுகளையும், இயற்கை அழகையும் ரசனையாகப் படமாக்கியிருக்கிறார்.

படத் தொகுப்பாளர் சுபாரக் சஸ்பென்ஸ், திரில்லர் பாணியில் படத்தைத் தொகுத்துள்ளார். மேலும், நான் லீனியர் கதையை புரியும்படி சொல்லியிருக்கிறார் சுபாரக். கலை இயக்குநர் சி.கே.சக்திவேலின் கடின உழைப்பும் பாராட்டுக்குரியது.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் இப்போதுவரையிலும் கேள்விக்குரியதாகவே உள்ளது. பொழப்புக்கே வழியில்லாத நிலையில் இருக்கும் இவர்களுக்கு கல்வி அறிவும் மிகத் தேவையாயிருக்கிறது. அந்த விழிப்புணர்வைத் தட்டியெழுப்பும் முயற்சியாக இந்தப் படத்தின் ஒரு கதை அமைந்துள்ளது.

இந்தக் கதையைத் தொட்டுவிட்ட கையோடு அமானுஷ்யம், சஸ்பென்ஸ், திரில்லர் டைப்பில் மேலும் ஒரு கதையையும் இணைந்தே நகர்த்தியிருக்கிறார். அந்த தாக்கம் நமக்கு எட்டாததுதான் இந்தப் படத்தின் சோகம்.!

கல்வியறிவை முன் நிறுத்தியே இந்தக் கதையை வடிவமைத்திருக்கலாம். அல்லது சஸ்பென்ஸ், திரில்லர் படமாகவே இதைக் கொணர்ந்திருக்கலாம். இரண்டையும் ஒன்றாகக் கலந்ததால் எதுவும் முழுமை அடையவில்லை.

‘நறுவீ’ இன்னும் கொஞ்சம் நறுக்கியிருக்கலாம்!..

RATING : 2.5 / 5

Our Score