தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவரின் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, அதன் புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் வகிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வாகை சந்திரசேகர், 1980 மற்றும் 1990-களில் ரசிகர்களின் மனதை கவரும்விதமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து பிரபலமானவர்.
கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ‘நண்பா நண்பா’ என்கிற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியிருக்கிறார். இப்போது இவர் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைவராக இருக்கும் பிரபல இசையமைப்பாளரான தேவாவின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய இருப்பதால் இந்த மாற்றம் நடந்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகை சந்திரசேகர் ஏற்கெனவே 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டுவரை, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலராகப் பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.