வரலாற்று பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் தயாரிப்பாளரும், இயக்குநருமான சி.வி.குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொற்றவை: தி லெகசி’ படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் ஆதரவையும், எதிர்பார்ப்பையும் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தில் ராஜேஷ் கனகசபை நாயகனாகவும், சந்தனா ராஜ் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், சுபிக்ஷா, அனுபமா குமார், கவுரவ் நாராயணன், பவன், வேல ராமமூர்த்தி, அபிஷேக், வேலு பிரபாகரன், நாகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து & இயக்கம் – சி.வி.குமார், வசனம் – தமிழ் மகன், இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – பிரகாஷ், படத் தொகுப்பு – இக்னேஷியஸ் அஷ்வின், கலை இயக்கம் – எஸ்.கே., தயாரிப்பு நிறுவனம்: மயில் ஃபிலிம்ஸ், திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட், தயாரிப்பாளர்கள்: டாக்டர் கே.பிரபு, சி.வி.குமார், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

புதையல் வேட்டை தொடர்பான கதையாக அமைந்துள்ள இந்தக் ‘கொற்றவை’ படத்தில், 2000 வருடங்களுக்கு முன் மறைக்கப்பட்ட புதையலை கண்டறிய நாயகன் எடுக்கும் சாகச முயற்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன. ஏன் அந்த புதையல் மறைக்கப்பட்டதென்பதும் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சியில் பயிற்சியாளராக இருக்கும் வடிவு, ஒரு கட்டத்தில் புதையல் ஒன்றை தேட ஆரம்பிக்கிறார். இந்தப் பயணத்தின்போது பல சுவாரசியமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. வடிவு ஏன் இந்த புதையல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்? அவருக்கும், புதையலுக்கும் என்ன தொடர்பு என்பதே இந்தக் ‘கொற்றவை’ படத்தின் சாராம்சம்.
இந்தப் படம் குறித்துப் பேசிய இயக்குநர் சி.வி.குமார், “இத்திரைப்படம் பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இளம் வயது முதலே எனக்கு வரலாற்றில் ஆர்வம் அதிகம். எனது தந்தையின் அலுவலகத்தில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்றபோது வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன்.

சினிமா துறைக்கு வந்தபோது சரித்திரப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்பொழுதுதான் அந்த ஆசை நிறைவேறியுள்ளது.
இந்தக் ‘கொற்றவை’யின் முதல் பகுதி ஆரம்பம் மட்டும்தான். இதில் 70 சதவிகிதம் சம காலமாகவும் 30 சதவிகிதம் வரலாற்று பின்னணியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் முழுக்க, முழுக்க சாகசம் நிறைந்தவையாக இருக்கும்…” என்றார்.

படத்தின் கதாநாயகன் ராஜேஷ் கனகசபை கூறுகையில், “படப்பிடிப்பின் முதல் நாளில் இருந்தே ஒரு அச்சம் கலந்த சுவாரசியம் இருந்தது. இந்த அனுபவம் எனக்கு புதிதாக இருந்தது. இரண்டாம் பாகம் இதைவிட பிரமாண்டமாக இருக்கும். அதற்கு இன்னும் அதிக உழைப்பு தேவைப்படும். இரண்டாம் பாகத்திற்கு மனதளவில் தயாராக இருக்கிறேன்…” என்றார்.

படத்தின் கதாநாயகியான சந்தனா ராஜ் ஒரு தொல்பொருள் ஆய்வாளராக வருகிறார். அவர் படம் குறித்துப் பேசுகையில், “எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்காக சி.வி.குமார் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் எங்கள் மீது வைத்த நம்பிக்கை எங்களை மேலும் பொறுப்புடன் செயல்பட வைத்தது. இந்தப் படம் ஒரு மிகப் பெரிய அனுபவப் பாடமாக இருந்தது…” என்றார்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் மூன்று பாகங்களாக தயாராகி வரும் இப்படம் குறிப்பிட்ட இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகவுள்ளது.
‘கொற்றவை: தி லெகசி’ என்று பெயரிடப்பட்டுள்ள முதல் பாகத்தின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, தற்போது வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸர் மிகப் பெரிய வெற்றியைத் தொட்டுள்ளது. ‘இது கதையல்ல, 2 ஆயிரம் வருட நம்பிக்கை’ என்று டீசரில் இடம் பெற்ற வசனம், படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.