“உஷா ராஜேந்தர் சொல்வதெல்லாம் பொய்..” – மறுக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்

“உஷா ராஜேந்தர் சொல்வதெல்லாம் பொய்..” – மறுக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்

நடிகர் சிம்புவின் தாயாரான நடிகை உஷா ராஜேந்தர் தன் மீது சொன்ன குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக மறுத்திருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடிக்கும்போது நடிகர் சிம்பு கால்ஷீட் சொதப்பல் செய்ததால் அந்தப் படத்திற்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நஷ்டத்தை சிம்புதான் ஈடு கட்ட வேண்டும் என்று கடந்த 8 ஆண்டுகளாகப் போராடி வருகிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

இது தொடர்பாக சிம்புவின் தாயாரான நடிகை உஷா ராஜேந்தர் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட ஒரு வீடியோ பேட்டியில், “தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்புவுக்கு ரூபாய் 3.50 கோடி சம்பள பாக்கி தர வேண்டும். அதற்கான ஜி.எஸ்.டி.யைக்கூட அவர் கட்டவில்லை. TDS-ஐயும் கட்டவில்லை. அவர் முதலில் கொடுத்த செக் பவுன்ஸாகிவிட்டது..” என்றெல்லாம் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தத் குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் முற்றிலுமாக மறுக்கிறார்.

இது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், “சிம்புவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளப் பாக்கி வைத்திருக்கிறேன் என்று உஷா ராஜேந்தர் கூறுவது 100 சதவிகிதம் பொய். அவருக்கு அந்தப் படத்தில் கடைசியாக 75 லட்சம் ரூபாய்தான் சம்பளம் கொடுக்க வேண்டியிருந்தது.

சிம்பு எனக்கு ஒரு திரைப்படம் நடித்து தருவதாக கூறி இருந்தார். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கொடுத்தால் அந்த 75 லட்சம் ரூபாயை நான் தருவதாக கூறி இருந்தேன். ஆனால் இன்றுவரை அவர்கள் ஒப்பந்தத்தைத் தரவில்லை. அதனால், நானும் அவருக்கு அந்தப் பாக்கி சம்பளத்தைத் தரவில்லை.

நான் முதலில் கொடுத்த செக் பவுன்ஸ் ஆனதற்காக மறுநாள் அதே தொகைக்கு டிடி எடுத்து அவர்களிடத்தில் கொடுத்துவிட்டேன். ஆனால், அவர்கள் இன்றுவரையிலும் அந்த பவுன்ஸான செக்கை என்னிடம் திருப்பித் தரவில்லை.

ஜி.எஸ்.டி.யை அவர்கள்தான் கட்ட வேண்டும். நான் எப்படி கட்ட முடியும்.? அது என் வேலையில்லையே.. அவர்களுக்கான சம்பளத்தைக் கொடுப்பதுதான் என் வேலை. ஜி.எஸ்.டி.யை அவர்கள்தான் வருடா வருடம் கட்ட வேண்டும். இதுதான நடைமுறை. அதோடு டிடிஎஸ்ஸிலும் நான் கொடுத்த பணத்திற்கான வரியைக் கட்டிவிட்டேன். மேற்கொண்டு அவருடைய சம்பாத்தியத்திற்கு அவர்தான் டிடிஎஸ்  கட்ட வேண்டும்.

உஷா ராஜேந்தர் வாயைத் தொறந்தாலே பொய்யாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார். முதலில் இந்தப் பேச்சுவார்த்தைக்கு அவருடைய மகனை வரச் சொல்லுங்கள். அவர் வந்தால்தான் அவர் என்னிடம் என்னென்ன வாக்குறுதிகளைத் தந்தார்.. நான் அவரிடம் என்ன சொன்னேன் என்பதெல்லாம் தெரிய வரும். சிம்பு வராமல், எப்போதும் இ்ந்தம்மாவே வந்து கொண்டிருந்தால் எப்படி..?

அவர்கள் என் மீது நீதிமன்றத்தில் போட்டுள்ள மான நஷ்ட வழக்கு, நான் பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டிக்காகத்தான். கவுன்சிலில் பஞ்சாயத்து பேசியபோது நடந்தவைக்காக அல்ல. அதனால் கவுன்சில் மீட்டிங்கில் இந்தப் பிரச்சினையை பேசியதில் என்ன தவறு இருக்க முடியும்..?

சிம்பு எனக்கான நஷ்ட ஈட்டுத் தொகையைத் தர வேண்டும். இல்லாவிட்டால் முன்பு பேசிய சம்பளத்தில் எனக்கு ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும்..” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

Our Score