அணி கிரியேஷன்ஸ் என்கிற புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குநர் ஒரு புதிய படத்தைத் தயாரித்து இயக்குகிறார்.
இந்தப் புதிய படத்தின் நாயகனாக ‘கலைஞர் டிவி’யின் செய்தித் தொகுப்பாளரான தணிகையும். நாயகியாக அறிமுக நடிகை குயின்ஸ்லியும் நடிக்கிறார்கள். வில்லனாக ‘விஜய் டிவி’ புகழ் பாண்டி கமல் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்திலும், சிறப்பு தோற்றத்திலும் பல பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்.
இப்படத்திற்கு சம்சத் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். சித்தார்த்தா பிரதீப் இசை அமைக்க உள்ளார். இவர் மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் பற்றி இயக்குநர் நியூட்டன் பிரபு கூறுகையில், “நான் இதற்கு முன்பாக பல திரைப்படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். மேலும், சில குறும் படங்களையும் இயக்கி உள்ளேன். அதுமட்டுமல்லாது, பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பல வருடங்களாக சவுண்ட் இன்ஜினியராகவும் பணியாற்றியுள்ளேன்.
இப்படிப்பட்ட அனுபவத்தை கொண்டும்… இதனால் ஏற்பட்ட நட்புகளை வைத்தும்.. நண்பர்களை ஒன்றிணைத்து இப்படத்தைத் தயாரிக்கிறேன். இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ரொமான்டிக் சைக்கோ த்ரில்லர் வகையை சேர்ந்தது..” என்றார்.
பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை நிகழ்வு, இன்று காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது.
இந்த பூஜை நிகழ்வில் படக் குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக பிரபல சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம், நடிகர் ரோபோ ஷங்கர், ‘எழுமின்’ விஜி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.