‘ஓ மை கடவுளே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது..!

‘ஓ மை கடவுளே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது..!

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வம்-அசோக் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஓ மை கடவுளே.’

இந்தப் படத்தில் அசோக் செல்வன், ரித்விகா சிங் இருவரும் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வாணி போஜன் மற்றும் சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, விஜய் சேதுபதி, ராம் திலக்குடன் இணைந்து ஒரு கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, விது அய்யணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் வெகுஜன ரசனைக்கேற்ப அமைந்து அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் தற்போது முழுமையாக நிறைவடைந்திருக்கிறது.

இது குறித்து ஆக்ஸஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான டில்லி பாபு பேசுகையில் “இந்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் பங்கு பெற்ற துடிப்பு மிக்க இளைஞர் குழு துவக்கத்திலிருந்தே என்னை திருப்திபடுத்தத் தவறவில்லை. இயக்குநர் அஸ்வத்தின் புதுமையான கதை சொல்லும் முறையாகட்டும்… அல்லது டீஸரில் தென்பட்ட பிரதான பாத்திரங்களான அசோக் செல்வன், ரித்விகா சிங் மற்றும் வாணி போஜனின் நளினமானமாகட்டும் அனைத்தும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன.

எங்களது இந்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் இளைஞர்களை மட்டுமல்ல; அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஆர்வம் மிக்க படத்தின் தொழில் நுட்பக் குழு மிகக் குறுகிய காலத்தில் இந்தப் படத்தைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறது.  பாடல் மற்றும் முன்னோட்டத்தை வெளியிடும் தேதியையும் திரைக்கு வரும் தேதியையும் வெகு விரைவில் அறிவிப்போம்…” என்றார்.

ஹேப்பி ஹை நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசும்போது, “நாங்கள் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்த உற்சாகத்தில் இருக்கிறோம். இது எங்கள் முதல் தயாரிப்பு என்பதால் அனைத்தும் கனவுபோல் இருக்கிறது. பின் தயாரிப்புப் பணிகளும், வெளியீட்டு திட்டமிடலும் இருக்கிறது என்றாலும், டில்லி பாபு சாருடன் படத் தயாரிப்பில் இணைந்திருப்பதால், மிகச் சரியான நேரத்தில் சரியான முறையில் படத்தை அவர் வெளியிடுவார் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது…” என்றார்.

நகைச்சுவை கலந்த காதல் சித்திரமான இந்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம், தமிழ்த் திரை ரசிகர்களுக்கு தென்றல் காற்றைப்போல் மனதுக்கு இதமான ஒரு அனுபவத்தைத் தரத் தயாராகவுள்ளது.

Our Score