full screen background image

“தியேட்டர்களில் 50% டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை” – திருப்பூர் சுப்ரமணியம் எதிர்ப்பு

“தியேட்டர்களில் 50% டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை” – திருப்பூர் சுப்ரமணியம் எதிர்ப்பு

தியேட்டர்களில் 50 சதவிகிதம் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே அனுமதி என்ற தமிழக அரசின் முடிவுக்கு சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு இன்று முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு விதிமுறைகளை நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது.

இதன்படி தியேட்டர்களில் 50 சதவிகித டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவினை தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது, “இந்தக் கொரோனா பாதிப்பினால் கடந்தாண்டு 10 மாதங்கள் சினிமா தியேட்டர்களை இழுத்து மூடியதால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டோம்.

ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டதால் தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது.

இந்த நிலையில் வெறும் 50 சதவிகிததத்தினரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்களுக்கு இன்னும் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும்.

தியேட்டர்களில் கொரோனாவை தவிர்க்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரசிகர்களின் உடல் வெப்ப அளவு சோதிக்கப்படுகிறது. முகக் கவசத்தை இலவசமாகத் தருகிறோம்.

ஏ.சி. ரயில் மற்றும் விமானத்தில் பல நூறு கிலோ மீட்டர்கள் அருகருகே அமர்ந்து பயணிக்கும்போது கொரோனா பரவாத நிலையில் தியேட்டர்களில்.. வெறும் 2 மணி நேரம் மட்டுமே அமர்ந்திருக்கும்போது பார்வையாளர்களுக்கு எப்படி கொரோனா பரவும்.. இதை எங்களால் ஏற்க முடியாது.

இதே நிலைமை நீடித்தால் எங்களால் தொழிலை நடத்த முடியாது. படத் தயாரிப்புகள் நின்றுவிடும். புதிய படங்கள் ரிலீஸாகாது. வரும் 15-ம் தேதிக்குப் பிறகு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் தமிழக கவர்னரை நேரில் சந்தித்து இது குறித்து மனு அளிக்க உள்ளோம்..” என்றார்.

 
Our Score