திருட்டு டிவிடியை ஒழிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் குரல் கொடுக்கிறார்களே தவிர, ஒன்றுபட்டு தீவிர நடவடிக்கைகளை எடுக்க மட்டும் மறுக்கிறார்கள்.
கடந்த மாதம் 27-ம் தேதி தமிழகமெங்கம் வெளியானது ‘அதிதி’ என்ற தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தின் திருட்டு டிவிடியும் வழக்கம்போல வெகு சீக்கிரமாகவே வெளியாகிவிட்டது. இதனை பார்த்து அதிர்ந்து போன பட டீம், அந்த திருட்டு டிவிடியை வாங்கி படத்தினை தியேட்டர்களில் வெளியிட்ட UFO நிறுவனத்திடம் இதைக் கொடுத்து இந்த டிவிடி தமிழகத்தில் தயாரிக்கப்பட்டதுதானா என்று சோதனை செ்யயச் சொன்னது.
அங்கிருந்து வந்த ரிசல்ட்.. பாஸிட்டிவ். ஆம்.. இங்கே.. தமிழகத்தில் தேனி நகரில் ‘அதிதி’ படம் ரிலீஸாகியிருந்த சுந்தரம் திரையரங்கில்தான் இந்தப் படத்தை ரெக்கார்டு செய்திருக்கிறார்கள் என்று UFO நிறுவனம் கண்டறிந்து தெரிவித்தது.
உடனடியாக அந்த தேனி சுந்தரம் தியேட்டர் உரிமையாளர், மேனேஜர், ஆபரேட்டர்கள் மீது இந்த மாதம் 19-ம் தேதியன்று திண்டுக்கல் போலீஸில் புகார் அளித்தனர் ‘அதிதி’ படத்தின் தயாரிப்பாளர்கள்.
இப்போதுவரையிலும் வழக்கு அப்படியே நிற்கிறதாம்.. சம்பந்தப்பட்டவர்கள் முன் ஜாமீன் வாங்கிவிட்டதாகத் தகவல்.. இப்படி தியேட்டரிலேயே திருட்டு டிவிடி தயாரித்திருப்பதால் தியேட்டர்காரர்கள் மீது சினிமாகாரர்கள் கூட்டு நடவடிக்கை எடுக்கலாமே என்று நினைத்தால் நீங்கள்தான் பைத்தியக்காரர்கள். அதை மட்டும் இவர்கள் செய்யவே மாட்டார்கள்..
“இந்தக் குற்றச் செயலில் ஈடுபடும் தியேட்டருக்கு 2 வருடங்களுக்கு எந்தவொரு தமிழ்ப் படங்களையும் தர மாட்டோம்…” என்று விதிமுறையைக் கொண்டு வந்து அதனை கடுமையாகக் கடைப்பிடித்தால்தான் என்ன..?
அரசுதான் திருட்டு டிவிடியை ஒழிக்க வேண்டுமா என்ன..? உங்களால் முடிந்த அளவுக்கு நீங்களே இந்த முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாதா..? என்று கேட்டால் திரையுலகத்திற்குள் ஒற்றுமையில்லை என்கிறார்கள்.
இதுதான் டிவிடிகாரர்களுக்கும் வசதியாக போய்விடுகிறது.. ஒரு காக்கை கூட்டத்திற்கு இருக்கும் ஒற்றுமையுணர்வுகூட இல்லாத இந்த சினிமாக்காரர்களை என்னவென்று சொல்ல..?