மின்னுவது பொன் என்பதே திரை உலகின் இன்றைய கோட்பாடு. எதிலும் திட்டமிட்டு, வெற்றி மட்டுமே குறிக்கோள் என செயல்படும், தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பெயர் பெற்ற இயக்குனர் லிங்குசாமி துவக்கி வைத்த ‘ ஜிகினா’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 28-ம் தேதி திங்கள்கிழமை காலை பூஜையுடன் துவங்கியது.
‘ஜிகினா’ படத்தை ராகுல் பிக்சர்ஸ் சார்பில் கே.டி.கே. தயாரிக்கிறார். “தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் நாங்கள் திரையுலகிற்கு வர காரணமே திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான். எங்களுடைய முதல் பட பூஜைக்கு லிங்குசாமி அவர்களே வந்ததோடு, கேமிராவை துவக்கி வைத்து இருப்பது என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது…” என்று பெருமையுடன் கூறினார் தயாரிப்பாளர் கே.டி.கே.
விஜய் வசந்த் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சானியாதாரா நடிக்கிறார். இவர்களோடு சிங்கம் புலி, ‘கும்கி’ அஷ்வின், மற்றும் தற்போது தொலைக்காட்சியில் பிரபலமாகி வரும் ஒரு வளர்ந்து வரும் கலைஞர் ஒருவர் படத்தில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே வித்தியாசமான கதை களம் உள்ள படங்களை இயக்கிய அனுபவஸ்தரான இயக்குநர் நந்தா பெரியசாமி இந்த படத்தை கதை, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார். பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய.. ஜோன் என்ற புதிய இசை அமைப்பாளர் யுகபாரதியின் பாடல்களுக்கு இசை அமைத்து அறிமுகமாக உள்ளார்.
தனது நண்பர் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஜிகினா’ படத்துக்காக தன்னுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி இயக்குநர் லிங்குசாமி வந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வந்து பெரும் வெற்றியடைந்த விஜய் வசந்த் நடித்த ‘ என்னமோ நடக்குது’ படத்தை வெளியிட்டதும் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜிகினா’ படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி இந்த வருட இறுதியில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். “பெயரை போலவே மிகவும் உற்சாகத்துடன் , பிரகாசத்துடன் துவங்கிய ‘ஜிகினா ‘ படத்தின் ஒவ்வொரு காட்சியும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி.