உலகம் முழுக்க ஆக்சன் படங்கள் பார்ப்பவர்களின் அன்புக்குரிய அபிமான கதாநாயகன் ஜாக்கிசான். மொழி, இனம் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைத்து வயதுடைய சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் நாயகன் இவர்.
ஜாக்கிசான் சமீபத்தில் நடித்திருக்கும் ‘தி பாரீனர்’ (The Foreigner) என்ற ஆங்கிலப் படம் அக்டோபர் 13-ம் தேதியன்று, இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது.
ஆக்க்ஷன், சென்டிமெண்ட் கலந்து தயாராகியிருக்கும் இந்த ‘தி பாரீனர்’ படத்தில் ஜாக்கிசானுடன் மோதும் வில்லனாக பேஸ்பர்ஜான் நடித்திருக்கிறார். மற்றொரு முக்கியமான கேரக்டரில் முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் பிராஸ்னன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்கிசான் நடித்து எந்த நாட்டில் படம் வெளியாகிறதோ அந்த நாட்டு மக்களின் பிராந்திய மொழிகளில் மொழி மாற்றுப் படமாக உருவாக்கி படத்தைக் கொண்டு வர பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அந்த வகையில் இந்த ‘தி பாரீனர்’ படத்தையும் தமிழுக்கு கொண்டு வருகிறது ஒயிட் பாக்ஸ் நிறுவனம்.
படத்தின் தலைப்பு ‘தி பாரீனர் ‘ என்று பெயர் இருந்தாலும் இப்படத்தில் ஜாக்கிசான் சென்னையைப் பற்றி பேசும் லோக்கல் வசனக் காட்சிகளுக்கு தியேட்டரில் கை தட்டல்கள் கலகலக்கும். ஆரவாரம் அலையடிக்கும்.
ஒயிட் பாக்ஸ் ஸ்டுடியோ சார்பில் ரங்கநாதன் தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ள இந்த ‘தி பாரீனர்’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மதுரை மீனாட்சி கிரியேஷன்ஸ் சார்பில் விநியோகஸ்தர் ஏ. ஞானோதயம் வாங்கியுள்ளார்.
“வசூலில் சாதனை படைத்த ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு ‘தி பாரீனர்’ நல்ல விருந்தாக இருக்கும். ஜேம்ஸ்பாண்ட் படமான ‘கேசினோ ராயல்’ படத்தை இயக்கிய புகழ் பெற்ற மார்ட்டின் கேம்பக்கின் இயக்கத்தில் தயாராகி உள்ள இந்த ‘தி பாரீனர்’ தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஹாலிவுட் படமாக இருக்கும்…” என்கிறார் ஒயிட் பாக்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தரான ரங்கநாதன்.
இந்தப் படம் வரும் நவம்பர் 3-ம் தேதியன்று தமிழகத்தில் மட்டும் 150 திரையரங்குகளில் வெளியாகிறது.









