என்.டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடெக்சன்ஸ் சார்பில் C.M.வர்கீஸ் தயாரித்துள்ள படம் ‘தங்க ரதம்’.
‘எனக்குள் ஒருவன்’ மற்றும் ‘ஸ்ட்ராபெர்ரி’ போன்ற படங்களில் நடித்த வெற்றி, இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். நீரஜா நாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் செளந்தர்ராஜன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் டிஸ்கோ சாந்தியின் சகோதரியான சுஜித்ரா, ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
ஒளிப்பதிவு – ஜேக்கப் ரத்தினராஜ், இசை – டோனி பிரிட்டோ, பாடல்கள் – யுகபாரதி, பாலமுருகன், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை – என்.கே.பாலமுருகன், சண்டை பயிற்சி – ‘பயர்’ கார்த்திக், நடனம் – தீனா, நிர்வாக தயாரிப்பு – பினுராம், மக்கள் தொடர்பு – பி.யுவராஜ், தயாரிப்பு – வர்கீஸ், எழுத்து, இயக்கம் – பாலமுருகன்.
இயக்குநர் பாலமுருகன் இயக்கும் முதல் படம் இது. இவர் இயக்குநர் ஜெகனிடம், ‘ராமன் தேடிய சீதை’, ‘புதிய கீதை’ போன்ற படங்களில் இணை இயக்குநராகவும், ‘கோடம்பாக்கம்’ படத்தில் வசனகர்த்தாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் பாலமுருகன், “ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பின்னணியை கொண்ட கதை இது. காதல், காமெடி, ஆக்சன் என பக்கா கமர்ஷியல் படமாக இது உருவாகியுள்ளது.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வேனில் காய்கறிகளை ஏற்றி வரும் வேலையைச் செய்கிறார் நாயகன் வெற்றி. இவருக்கும், அதே வேலை செய்யும் இன்னொரு கும்பலுக்கும் இடையில் நடக்கும் தொழில் போட்டி, எப்படி விபரீதமாக மாறுகிறது. அதில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இதுவரையில் எந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடத்தப்பட்டதில்லை. இதுதான் முதல் முறை. நிஜமாகவே மார்க்கெட் நடைபெறும் அதே நேரத்தில்தான் தொடர்ச்சியாக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.
படப்பிடிப்பு ஒட்டன்சத்திரம் மட்டுமில்லாமல் நாகர்கோவில், பழனி போன்ற இடங்களிலும் நடைபெற்றுள்ளது. மிக விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது..” என்றார்.