full screen background image

தேவி – சினிமா விமர்சனம்

தேவி – சினிமா விமர்சனம்

பேய்ப் படங்களை என்னதான் கொத்து புரோட்டா போட்டாலும் புதிய வகையான திரைக்கதையில் காட்டப்படும் பேய்களெல்லாம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த தேவி எனப்படும் ரூபி பேயின் கதை.

மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் பிரபு தேவா. கோவை மாவட்டத்தில் குக்கிராமத்தில் பிறந்த இவருக்கு இப்போது ஒரேயொரு குறிக்கோள்தான். ஒரு அல்ட்ரா மாடர்ன் கேர்ளை கல்யாணம் செய்ய வேண்டும் என்பதுதான்.

அதற்காக அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேரும் இளம் பெண்களுக்கு முதல் நாளே தனது பயோடேட்டாவை காட்டி லவ் அப்ளிகேஷன் போடுவது இவரது வாடிக்கை. அப்படியும் எதுவும் செட்டாகவில்லை என்பது அவருடைய சோகம்.

திடீரென்று அவருடைய பாட்டி சீரியஸ் என்று தகவல் வர.. பதறியடித்துக் கொண்டு ஊருக்கு வருகிறார் பிரபுதேவா. அங்கே பாட்டி ‘இப்பவோ.. அப்பவோ..’ என்று இழுத்தடித்துக் கொண்டிருக்க.. அவர் கண் மூடுவதற்குள்ளாக அவர் கண் முன்பாகவே பிரபுதேவாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது அப்பா முடிவெடுக்கிறார். அப்பாவை எதிர்த்து பேச தைரியமில்லாத பிரபுதேவா மனமில்லாமல், தைரியமில்லாமல் இதனை எதிர்க்க வழி தெரியாமல் தவிக்கிறார்.

ஊரிலேயே மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தமன்னாவை பாட்டி கை காட்ட.. வேறு வழியே இல்லாமல் பிரபுதேவா திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் பாட்டி பிழைத்துக் கொள்கிறார். தனக்கேற்பட்ட சோகத்தைத் தாங்கிக் கொண்டு புதிய மனைவியுடன் மும்பை வருகிறார் பிரபுதேவா.

ஒரு பாழடைந்த குடியிருப்பின் முதல் மாடியில் அவருக்கு வீடு கிடைக்கிறது. ஆனால் அந்த வீட்டில் ஏற்கெனவே குடியிருந்த ரூபி என்னும் திரைப்பட நடிகை தான் நடித்த முதல் படம் ரிலீஸாகாத சோகத்தில் தற்கொலை செய்து இறந்து போயிருந்ததை வீட்டு புரோக்கர், பிரபுதேவாவிடம் சொல்லாமலேயே மறைத்துவிடுகிறார்.

தனது ஆசை நிறைவேறாத காரணத்தினால்.. ஆன்மா சாந்தியாகாமல்.. அந்த வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்த ரூபி, தேவியைப் பிடித்துக் கொள்கிறாள். முதல்முறையாக வீட்டை விட்டு வெளியே வரும் தேவியை ஆட்கொள்ளும் ரூபி, அவளை ஸ்டார் ஹோட்டலில் நடனமாடவும் வைக்கிறாள்.

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ராஜ் கண்ணா தேவியின் அழகிலும், ஆட்டத்திலும் மயங்கி அவளை தனது அடுத்தப் படத்தில் ஹீரோயினாக புக் செய்ய ஆள் அனுப்புகிறார். ஊரில் எருமை மாடு மேய்த்துக் கொண்டிருந்த தேவி, திடீரென்று வீட்டில் ரூபி வடிவத்தில் உருவெடுத்து தான் சினிமாவில் நடிப்பதாகச் சொல்ல.. வெலவெலத்துப் போகிறார் பிரபுதேவா.

தேவியை தடுக்க முடியாமல் படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் ரூபி என்னும் பேயின் வேலைதான் இது என்பதை தெரிந்து கொள்கிறார். ரூபியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரபுதேவா.

ரூபி தனது கண்ணீர்க் கதையைச் சொல்லி “இந்த ஒரேயொரு படத்தில் இப்போதைய சூப்பர் ஸ்டாரான ராஜ் கண்ணாவுடன் சேர்ந்து நடித்துவிடுகிறேன். அதன் பின்பு உன் தேவியை விட்டுவிடுகிறேன்…” என்கிறாள். பிரபுதேவாவும் இதற்கு சம்மதிக்க இது தொடர்பாக பேயுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்.

ஒப்பந்தப்படி பேயான ரூபி நடந்து கொண்டாளா..? தேவியின் கதி என்ன ஆனது..? பிரபுதேவா தனது திருமதியை மீட்டெடுத்தாரா..? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

முதல் பாராட்டு கதையையும், திரைக்கதையையும் எழுதிய பால் ஆரோன் மற்றும் இயக்குநர் விஜய்க்கு. அடிப்படையான கதை என்னும் அடித்தளம் நன்றாக இருந்தால்தான் சிறந்த நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களை கொண்டு மேலே எழுப்பப்படும் கட்டிடமும் சிறப்பானதாகவே இருக்கும். இதிலும் அந்த மேஜிக்தான் நிகழ்ந்திருக்கிறது.

பேய்க் கதை என்பதாலோ மற்ற பேய் படங்களை போல தலையை விரித்துப் போட்டு நடப்பது.. வெள்ளை சேலையில் வந்து பயமுறுத்துவது.. பின்னணியில் ஸ்மோக்கை போட்டு சாவடிப்பது என்கிற கண்றாவியெல்லாம் இல்லாமல் மிகவும் சிம்பிளாக பேய் தேவியின் உடலுக்கும் நுழையும்.. பின் வெளியேறும் என்பதைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை தேவி மற்றும் ரூபியாக வரும் தமன்னா தனது அபாரமான நடிப்புத் திறமையில் காட்டியிருக்கிறார். சாந்த சொரூபியான தேவியாகவும், அடங்காத ரூபியாகவும் மாறி, மாறி வரும் அவருடைய நடிப்பும், உடல் மொழியும் இந்தப் படத்திற்குக் கிடைத்த பெரும் லாபம். தமன்னாவை தேர்வு செய்த காஸ்டிங் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

பிரபுதேவா படம் என்றாலே பாடல்களும், நடனமும் தனித்து பேசப்படும். இதிலும் அப்படியே.. தமன்னாவின் கை, கால்களெல்லாம் சுளுக்கெடுக்கும்வகையில் நடன அசைவுகளை வைத்து அசத்தியிருக்கிறார். நடனத் தாரகையாக இந்தப் படத்தில்தான் ஜொலித்திருக்கிறார் தமன்னா. வாழ்த்துகள் பாராட்டுக்கள்.

பிரபுதேவா மாடர்ன் கேர்ளின் ஹஸ்பெண்ட்டாக தன்னை நினைத்துக் கொண்டிருந்தவர் ஒரு அருக்காணியின் கணவனாக மாற வேண்டியதை நினைத்து புலம்புவதில் துவங்கி.. படம் முழுக்க கடைசிவரையிலும் புலம்பிக் கொண்டேதான் இருக்கிறார்.

அதிலும் தேவி, ரூபியாக மாறி சினிமா ஹீரோயினாக நடிக்கத் துவங்கியவுடன் செட்டுக்களிலும், ராஜ் கண்ணாவின் மேனேஜரிடமும் மாட்டிக் கொண்டு முழிப்பதிலும் ஒரு எளிய நகைச்சுவையை படம் முழுக்க காண்பித்திருக்கிறார் பிரபுதேவா. அதிலும் இருவரின் குடும்பத்தினரும் வந்து காத்திருக்கும்வேளையில் பிரபுதேவா அவர்களைச் சமாளிக்கும் காட்சி அமர்க்களம்..!

கிளைமாக்ஸில் பெண் மருத்துவருடன் பிரபுதேவா கை குலுக்கும் காட்சிக்கு, தியேட்டரே அதிர்கிறது. அத்தனை கால பொறுமைக்குக் கிடைத்த பாராட்டு என்று அதனை எடுத்துக் கொள்ளலாம்.

பிரபுதேவாவின் ஸ்பெஷலாட்டியே நடனம்தானே.. இதிலும் அதற்குக் குறைவில்லாமல் செய்திருக்கிறார். பாட்டும், நடனமும் இந்தப் படத்தின் தனி ஸ்பெஷல் என்றே சொல்ல வேண்டும். இத்தனை ஸ்டெப்புகளை வைத்து.. ரப்பர் போல உடம்பை வளைத்து ஆடும் நடிகர் இந்தியாவிலேயே பிரபுதேவா மட்டும்தான் என்பதால் இந்திய சினிமாவில் இவருக்கான இடம் அப்படியேதான் உள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஹிந்தி நடிகர் சோனுசூட் சூப்பர் ஸ்டார் ராஜ் கண்ணாவாக நடித்திருக்கிறார். இவரைவிடவும் இவரது மேனேஜராக நடித்திருக்கும் முர்லி சர்மா, தான் வரும் காட்சிகளிலெல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் அப்படி..!

ஒரு நடிகரின் மேனேஜராக இருப்பவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும்..? என்னவெல்லாம் செய்ய வேண்டும்..? என்பதற்கு இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சையை உதாரணமாக சொல்லலாம்..!

நடிகர்களின் உள்ளமறிந்து செயல்பட்டு, அவசரத்தனத்தில் மாற்றி பேசிவிட்டாலும், பின்பு அதைச் சமாளித்து முதலாளியை குஷிப்படுத்தும் மேனேஜர்கள்தான் இன்றைக்கு அநேக நட்சத்திரங்களிடம் பணியாற்றுகிறார்கள். அதில் ஒருவர்தான் இந்த முர்லி சர்மா. கிளைமாக்ஸில் தமன்னா கர்ப்பம் என்று தெரிந்தவுடன் ஆர்வமாக ராஜ்கண்ணாவின் கையைப் பிடித்திழுத்து “கங்கிராட்ஸ்” சொல்லி கன்னத்தில் அறை வாங்கிக் கொண்டு ‘தேமே’ என்று நிற்கும் முர்லிதான் கிளைமாக்ஸிலும் சிரிக்க வைத்துவிட்டார். வெல்டன் ஸார்.

ஆர்.ஜே.பாலாஜி பிரபுதேவாவின் நண்பராக வந்து சில இடங்களை சமாளித்திருக்கிறார். ரூபியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவரிடம் அடுத்த நிமிடமே, “ராத்திரி சாப்பிட சப்பாத்தி செய்யட்டுமா அண்ணா..” என்று தேவி பவ்யமாக கேட்கும்போது, அவர் காட்டும் ரியாக்ஷனே போதும்..!

ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலம். பாடல் காட்சிகளில் உடை வடிவமைப்பாளர் மற்றும் பிரபு தேவாவின் உதவியோடு பட்டையைக் கிளப்பியிருக்கிறது கேமிரா. அதிலும் முதல் பாடல் காட்சியில் பிரபுதேவா மட்டும் தரையில் அமர்ந்து தனித்து ஆடும் ஷாட்டுகளின் அழகு, பிரபுவையும் தாண்டி ரசிக்க வைத்திருக்கிறது.

கிராமம், மும்பை, அந்த வீடு, பட லொகேஷன் என்று பல இடங்களில் பயணித்தாலும் படத்தின் கலர் டோன் மாறாமல் டல்லடிக்காமல் கடைசிவரையிலும் அதன் ரிச்னெஸை அப்படியே தொடர்ந்திருக்கிறார் மனுஷ் நந்தன். சிறந்த கலைஞர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே இது சாத்தியம்..!

சாஜித்-வாஜித், விஷால் மிஷ்ராவின் இசையில் நான்கு பாடல்களுமே கேட்கும் ரகம். ‘பச்சையப்பா காலேஜ்’ பாடலும், ‘ரங்.. ரங்.. ரங்கோலி’ பாடலும் இளசுகளை ஆட வைத்திருக்கும் பாடல். ‘கொக்கா மக்கா கொக்கா’ படல் கதையை நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது. திரில்லர் டைப் படம் என்பதால் பயமுறுத்தலான பின்னணி இசையெல்லாம் போட்டு படுத்தாமல் இசையை உறுத்தாத அளவுக்கு அமைத்திருக்கிறார் ஒலி வடிவமைப்பாளர்.

நடனம், ஆடை வடிவமைப்பு, செட்டிங்குகள் என்று அனைத்துத் துறையிலுமே வல்லுநர்களாக சேர்ந்து உழைத்திருப்பதால் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான ஒரு படமாக இந்தப் படம் வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இயக்குநர் விஜய்யின் அழுத்தமான இயக்கமும், நடித்த நடிகர்களின் பண்பட்ட நடிப்பும், உயிர்ப்புடன் இருந்த கதையும், சுவாரஸ்யமான திரைக்கதையும்.. போரடிக்காமல் இருக்க படம் முழுவதும் தெளிக்கப்பட்டிருக்கும் நகைச்சுவையும் படம் இப்போது ஹிட்டடிக்க பெரிதும் உதவியிருக்கின்றன.

என்ன இன்னொரு பேய்ப் படமா என்று அலட்சியமாக கடந்து போக முடியாதவகையில், இப்படியும் ஒரு பேய்ப் படமா என்று கேட்க வைத்து படம் பார்க்க அழைத்திருக்கிறது இந்தக் குழு.

படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

Our Score