full screen background image

“சச்சினுக்கு வரி விலக்கு.. விஜய்க்கு அபராதமா..?”-கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

“சச்சினுக்கு வரி விலக்கு.. விஜய்க்கு அபராதமா..?”-கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு, ஒரு லட்சம் ரூபாயை சென்னை உயர்நீதி மன்றம் அபராதமாக விதித்துள்ளது.

ஆனால், இதேபோன்று வெளிநாட்டு காரை இறக்குமதி செய்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மட்டும் நுழைவு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது எப்படி என்று விஜய் ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.

இந்தியாவில் 2000-ம் ஆண்டில் இருந்து கடந்த சில வருடங்கள்வரை நுழைவு வரி மிக அதிகமாக இருந்தது. முக்கியமாக கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய கூடுதல் நுழைவு வரி விதிக்கப்பட்டிருந்தது.

1962-ம் ஆண்டின் சுங்கத் துறை விதி 25-ன்படி நற்காரியங்கள், சமுதாயத்திற்கு அவசியமான அவசரமான விஷயங்களுக்கு மட்டுமே இது போன்று இறக்குமதியாகும் வாகனங்களுக்கு மட்டுமே நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியும் என்ற விதி உள்ளது.

அப்படி நுழைவு வரி உச்சத்தில் இருந்த 2002-ம் ஆண்டில்தான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியில் விளையாடச் சென்றிருந்தார்.

அப்போது சச்சின் டெண்டுல்கருக்கு பிரபல ரேஸ் கார் சாம்பியன் மைக்கல் ஸ்கும்ச்சார் இலவசமாக ஃபெராரி 360 மாடனா காரை பரிசாக வழங்கினார். இந்தக் காரின் மதிப்பு 2.1 கோடி ரூபாய். இந்த கார் சச்சினுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த காரை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு தனியாக நுழைவு வரி கட்ட வேண்டும். இதற்கு நுழைவு வரி மட்டுமே தனியாக ரூ.1.6 கோடி ஆகும். இதன் காரணமாக நுழைவு வரியில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கும்படி சச்சின் டெண்டுல்கர் மத்திய அரசிடம் விண்ணப்பித்தார். அப்போதைய வருமான வரித்துறை அமைச்சர் பிரமோத் மகாஜனிடம் இது தொடர்பாக கடிதமும் கொடுத்தார் சச்சின்.

அந்தக் கார் கிரிக்கெட் விளையாட்டிற்காக கிடைத்த பரிசு என்பதால் சச்சின் கேட்டவுடன் உடனடியாக அவருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அப்போது வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்தது.

இந்த சம்பவம் அப்போது கடும் விமர்சனத்தை சந்தித்தது. கிரிக்கெட் விளையாட்டு மற்றும் விளம்பரங்கள் மூலமாக பல கோடிகளை சம்பாதிக்கும் சச்சினுக்கு வரி விலக்கு எதற்கு..? இதே விலக்கு ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவைக்கு அளிக்கப்படுமா என்று கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்தன.

பணக்காரராக இருக்கும் சச்சின் இப்படி செய்தது தவறு. அவர்தான் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அவரே இப்படி செய்ய கூடாது, அவர் என்ன கடனில் கஷ்டப்படுகிறாரா? என்று பலரும் விமர்சனங்கள் வைத்தனர். ஆனால் கடைசிவரை சச்சினிடம் வரி வசூலிக்கப்படவில்லை, அபராதமும் விதிக்கப்படவில்லை.

சச்சின் கடைசிவரை வரி கட்டாத நிலையில் அந்தக் காரைத் தயாரித்திருந்த ஃபியட் நிறுவனம் இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தானே முன் வந்து அந்தக் காருக்கான நுழைவு வரியைக் கட்டியது.

இந்த நிலையில் இந்தக் கார் தொடர்பான தொடர் விமர்சனங்கள் எழுந்ததால், 2 வருடங்கள் கழித்து சச்சின் டெண்டுல்கர் அந்தக் காரை குஜராத் வியாபாரி ஒருவருக்கு 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டார்.

இதன் பின்னர் வரிசையாக பல்வேறு பிரபலங்களும் இதேபோல் வெளிநாட்டு காரை இறக்குமதி செய்துவிட்டு மத்திய அரசிடம் நுழைவு வரி விலக்கு கேட்டனர். பல பாலிவுட் பிரபலங்களும் கேட்டனர். கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், கபில் தேவ் ஆகியோரும் இதே கோரிக்கையை மத்திய அரசிடம் முன் வைத்தனர். ஆனால் அவர்களின் கார்களுக்கு நுழைவு வரி விலக்கு கொடுக்கப்படவில்லை.

இப்படி பலரும் வரிசையாக கோரிக்கை வைத்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் 2012-ம் ஆண்டு நடிகர் விஜயும் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் இறக்குமதிக்கு நுழைவு வரி விலக்கு என்ற கோரிக்கையை அரசின் முன் வைத்தார். விஜய் வாங்கியிருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை 8 கோடி ருபாய், இதற்கான இறக்குமதி நுழைவு வரி 1.6 கோடி ரூபாய்.

ஆனால், விஜய்க்கு வரி விலக்கு அளிக்கப்படாத நிலையில் உடனே உரிய வரியை செலுத்த வேண்டும் என்று வணிக வரித் துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த காரை போக்கவரத்து அலுவலகத்தில் விஜய் பதிவு செய்ய முயன்றும் முடியவில்லை. இறக்குமதி நுழைவு வரியை செலுத்தி இருந்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று வட்டார போக்குவரத்து அலுவலகம் கூறிவிட்டது.

இதை எதிர்த்து தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இறக்குமதி வரி விலக்கு வேண்டும் என்று விஐய் தொடுத்த வழக்கில்தான் நேற்று அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் பல பிரபலங்கள் இதே கோரிக்கையை வைத்ததால்தான் விஜய்யும் அதே கோரிக்கையை வைத்தார். ஆனால் விஜய் மட்டும் நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டார். அதனால்தான் இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சினிமா நடிகர்கள் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.. இப்படி செயல்பட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றமும் கண்டிக்க.. நேற்றில் இருந்து நடிகர் விஜய்யின் தலை இதில் உருண்டு கொண்டிருக்கிறது.

ஆனால், “சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு நீதி.. எங்கள் தளபதிக்கு ஒரு நீதியா.. சச்சின் கிரிக்கெட்டில் தளபதி என்றால் விஜய் தமிழ் சினிமாவில் தளபதி. அவருக்கும் அதே அளவு சலுகையை கொடுத்திருக்க வேண்டும்” என்று விஜய்யின் ரசிகர்கள் மட்டும் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Our Score