இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்ற பெயரில் படமாக தயாரிக்கப்படுவதாக சென்ற வருடம் அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இடம் பெறாது என்று அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்தாலும், இந்தப் படத்திற்கு தமிழகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
முத்தையா முரளிதரனும் ஒரு இலங்கை தமிழர்தான். ஆனால் அவர் மலைத்தோட்ட தமிழர். விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவம் ஒழித்து அங்கு போர் முடிவுக்கு வந்தவுடன் இலங்கை அரசுக்கு ஆதரவாக முத்தையா முரளிதரன் பேசினார் என்பதால் உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழ் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்தப் படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், பாடலாசிரியர்கள் வைரமுத்து, தாமரை உள்பட பலர் கோரிக்கை வைத்தார்கள்.
இந்தநிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு டிவிட்டரில் பதிலளித்த விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு “நன்றி வணக்கம்” என பதிவிட்டு படத்தில் இருந்து ஒதுங்கிவிட்டார்.
இந்த நிலையில் முத்தையா முரளிதரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “800’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க மாட்டார். அவருக்கு அதிக அழுத்தங்கள் வந்த காரணத்தினால், படத்தில் இருந்து நின்றுவிடுமாறு நானே வேண்டுகோள் விடுத்தேன். வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கப் போகிறோம்.
இந்தக் கொரோனா நோய் முற்றிலும் காணாமல் போன பிறகு எனது சுயசரிதையை கருவாகக் கொண்ட இந்த ‘800’ திரைப்படம் நிச்சயமாகத் திரைக்கு வரும்…” என்று முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.